Friday, February 5, 2016

லக்கி லூக் - ஒரு காமெடி குண்டன்

நண்பர்களுக்கு வணக்கம், மீண்டுமொரு புதிய பதிவுடன் நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.  “லக்கி லூக்”அறிமுகம் தேவையில்லாத நாயகன் என்றாலும், புதிய வாசகர்களுக்காகவும், லக்கி லூக்கைப்பற்றி அடிப்படை மற்றும் சில   சுவாரஸ்யத்தகவல்களுடனும் , எனக்கு லக்கி பரிச்சயமானது பற்றிய சம்பவங்களையும் பிரதானமாக கொண்டு இப்பதிவிட்டுள்ளேன்.வரலாற்று சம்பவங்களை மையமாக கொண்ட கதைகள், வாழ்ந்து மறைந்த கதாபாத்திரங்களைத்தழுவி உருவாக்கப்பட்ட காதாபாத்திரங்கள் இதுபோன்று லக்கி லூக்கைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய விசயங்கள் இருக்கின்றது. தொடரும் நாட்களில் லக்கி-யைப்பிரதானமாக கொண்ட பதிவுகளை நம் தளத்தில் அதிகம் எதிர்பார்க்கலாம்.

"LUCKY LUKE,THE COWBOY SHOOTS FASTER THAN HIS SHADOW,FIGHTS INJUSTICE AND RIDES JOLLY JUMPER.THE SMARTEST HORSE IN THE WORLD, MOST OF THESE COMIC BOOKS INCORPORATE CHARACTERS FROM HISTORY".

மோரிஸ் வரையும் கதாபாத்திரங்கள் பார்த்தவுடனேயே அதன்  குணாதிசயங்களை , பார்ப்பவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய இலகு வாய்ந்தவை.


“லக்கி லூக்”- புயலையும்விட வேகமாக சுடக்கூடிய ஒரு கெளபாய்.சொல்லப்போனால்  தன் நிழலையும்விட வேகமாகச் சுடக்கூடியவன். இவரின் அறிமுகப்பக்கங்களிலும், புத்தகங்களின் பின்னட்டைகளிலும் இவ்வாறனதாக இருக்கும் இவரைப்பற்றிய வர்ணனைகள்.ஜாலி ஜம்பர், ரிண்டின்கேன், டால்டன் பிரதர்ஸ் என இவர்களுடன் சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள்.வலைத்தளத்தில் ‘லக்கி லூக்’ என்று டைப்பினால் இவரைப்பற்றிய தகவல்கள் வந்து குவியும்.எனவே அரைத்த மாவையே அரைக்காமல் சில சுவாரஸ்யத்தகவல்களுடன் லக்கியுடனான எனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறேன்.


1946 டிசம்பர் 7-ல் லக்கி லூக் அறிமுகம் ‘Arizona 1880'
1946 டிசம்பர் 7-ல்  ‘Franco-Belgian Comics' இதழான ‘SPIROU'-ல் ஓவியர் “மோரிஸ்” என்பவரால் ‘Arizona 1880' என்ற கதையில் அறிமுகமானார் லக்கி லூக்.அதன் வரவேற்பைத்தொடர்ந்து 1949-லிருந்து முழுநீளக்கதைகளில் தலைக்காட்டத்தொடங்கினார்.அன்றிலிருந்து இன்று வரை உலகின் பல மொழிகளில் வெளியாகி அனைவரின் மனங்களையும் தனது நகைச்சுவைத்தோரணங்களால் கொள்ளையடித்துக்கொண்டிருக்கின்றனர் லக்கி லூக் குழுவினர்.கிட்டத்தட்ட 70 வருடங்களாக, 30-க்கும் மேற்பட்ட மொழிகளில், 80-க்கும் மேலான சித்திரக்கதைகளின் மூலமும்,திரைப்படங்கள், அனிமேக்ஷன் படங்கள், வீடியோ கேம்கள் என பல்வேறு ஊடகங்களின் வழியாக சிரிக்க வைப்பது ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கும் இந்த ஒல்லிபிச்சான் ஹீரோ உண்மையிலேயே ‘காமெடியில் குண்டன்’-தான். 

லக்கி லூக் - தமிழ் அவதாரம்:
 தமிழில் லக்கி லூக்கை ஜீனியர் லயன் காமிக்ஸ் மூலம் அறிமுகப்படுத்தி,தனது எழுத்துத்திறமையால் மேலும் மெருகேற்றி நம்மிடம் தரமான ஒரு நகைச்சுவை நாயகனை கொண்டு சேர்த்த லயன் - முத்து காமிக்ஸ் ஆசிரியர் எஸ்.விஜயன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும், வணக்கங்களும்.லக்கி லூக்கின் தமிழ் உரிமைகள் பெற்றதையும்,அது பற்றிய தகவல்களையும் “சிங்கத்தின் சிறு வயதில்” தொடரில் சுவாரஸ்யமாக கூறியிருப்பார். லக்கி லூக் கதை வரிசையில் அனைத்து கதைகளுமே தரமான காமெடி விருந்துதான்,எந்த கதையுமே சோடை போனதில்லை, விற்பனையிலும் கூட. எல்லாதரப்பு வாசகர்களின் மனதையும் கொள்ளை கொண்ட பெருமை வன்மேற்கின்  இந்த காமெடி கெளபாய்க்கு உண்டு. லக்கி லூக்கின் கதைகளில் வரலாற்று பின்னனியைக்கொண்டு புனையப்பட்ட கதைகள் ஏராளம்.மேற்குறிப்பிட்டதுபோல் வாழ்ந்து மறைந்த கதாபாத்திரங்களை மையப்படுத்தி பெரும்பாலான காமிக்ஸ் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.வரும் நாட்களில் இதற்கென ஒரு தனிப்பதிவிட்டிட வேண்டியதுதான். காமிக்ஸ் ரசிகர்களால் சிரிப்பின் அடையாளமாகிப்போன லக்கி பெயரளவில் மட்டுமல்லாது உண்மையிலேயே லக்கியான நபர்தான்...! - நமது மறுவருகையான  "Come Back Special" - கூட முதல் கதையாக இவரது சாகஸங்களே இடம்பெற்றிருக்கும்.


ஜீனியர் லயனில் (01 ஜனவரி 1987)  லக்கி லூக்கின் அறிமுகப்படலம்.
  
மோரிஸ் & கோஸினி (1957 - 1986):
 மோரிஸின் ஆக்கத்தில் அனைவர் மனதையும் கவர்ந்த நமது கெளபாயின் கிராப், கதாசிரியராக கோஸினியின் கைகோர்ப்பில் புகழின் உச்சத்தைத்தொட்டது.இவர்களிருவரும் சேர்ந்து பணியாற்றிய கதைகள் இன்றளவுக்கும் ஒரு தனித்தன்மை வாய்ந்ததாக லக்கி லூக் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றது.மேலும் இது லக்கி லூக் கதைகளின் பொற்காலம் என்றும் ரசிகர்களால் வர்ணிக்கப்படுகின்றது.லயன் காமிக்ஸ் பிப்ரவரி மாத வெளியீடான ‘ஒரு பட்டா போட்டி’(The Oklahoma Land Rush-1960) சாட்சாத் இவர்கள் இருவரது கைவண்ணமே.



ஒரு தலைமுறையை தங்களின் கைவண்ணத்தால் கட்டிப்போட்டது மட்டுமல்லாமல் வளரும் தலைமுறைக்கு தங்களின் படைப்புகளை விட்டுச்சென்றுள்ள இந்த காமிக்ஸ் பிதாமகர்களின் திறமைக்கு ஆழ்மனதிலிருந்து நன்றி கலந்த வணக்கங்கள்.

 “ஒரு ஜெண்டில்மேனின் கதை” -யில் விமர்சனத்திற்குள்ளான பக்கங்கள்.

வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த இவரின் படைப்புகள் சிறப்பானதொரு தேர்வுதானென்றாலும், லக்கி லூக்கின் விசயத்திலும் சின்னதொரு நெருடல் எல்லோர் மனதிலும் இருப்பதென்னவோ உண்மைதான். ஆறாவது விரல் என புகைப்பிடிப்பவர்களால் வர்ணிக்கப்படும் “சிகரெட்”-தான் அது.ஜாலி ஜம்பரும் - லக்கியும் எப்படி இணைபிரியா நண்பர்களோ அதுபோலத்தான் லக்கியும்-லக்கி’யின் வாயில் உள்ள சிகரெட்டும். சமூக ஆர்வலர்களால் அவ்வப்போது விமர்ச்சிக்கப்பட்டாலும் 1968-ம் ஆண்டு மோரிஸ்-கோஸினி ஆக்கத்தில் வெளிவந்த "Le pied tendre"(The Tenderfoot)-ல் கதையின் ஒரு பகுதியாக, நண்பனுடைய இறப்பின் வலியைத்தாங்க முடியாத  லக்கி லூக் புகைப்பதுக்கு தயாராவது போல் வெளியான பகுதிகள், விமர்சகர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.“சிகரெட் புகைப்பதென்பது லக்கியின் காதாபாத்திரத்துடன் ஒன்றியது- பாப்பாய் வாயிலுள்ள  'Pipe'-யைப்போல” என்று விமர்சகர்களுக்கு பதிலலித்தார் மோரிஸ்.குழந்தைகள் உட்பட பலதரப்பட்ட ரசிகர்களைக்கொண்டவர் லக்கி என்பதால், அனைவரது நலனையும் கருத்தில் கொண்டு லக்கி லூக் புகைப்பிடிப்பதை நிறுத்திக்கொண்டார்.


1983-ல் வெளியான The Fingers என்ற கதையிலிருந்து Cigarette-க்கு பதிலாக Straw மாற்றம் செய்யப்பட்டு புத்தகம் வெளிவந்தது.இதற்காக "WHO"-வின் விருதும் மோரிஸ் அவர்களுக்கு கிடைத்தது.தற்போதைய நமது வெளியீடுகளில் லக்கி புகைப்பது போலிருந்தால், அது இதற்கு முந்தைய காலகட்டத்தில் வெளியான புத்தகங்களே.லயன்  காமிக்ஸ் ஆசிரியர் எஸ்.விஜயனும் இந்த மாற்றத்தை பற்றி “Lion New Look Special"ல் “1970களின் துவக்கங்களில் உருவான கதைகள் இவை என்பதால் லக்கியின் உதடுகளில் தம்மாத்துண்டு ‘தம்’ constant ஆக இருந்திடுவதைக்காணலாம்! சமீபமாய் வந்திடும் லக்கி கதைகளில், தலைவர் ‘தம்’மை கைவிட்டுவிட்டு, symbolic ஆக வாயில் ஒரு புல்லினை மேய்வதை கவனித்திருப்பீர்கள்” என குறிப்பிட்டிருப்பார். லக்கி லூக்கின் மாற்றம் குறித்த மோரிஸின் ஓவியத்தையும், நகைச்சுவையுணர்வுடணான ஒரு ரசிகரின் ஓவியத்தையும் பாருங்களேன்.கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய மாற்றம்தான்.




லக்கி லூக்கும் நானும்:
   எனக்கு காமிக்ஸ் அறிமுகமான காலகட்டத்தில் ஏகப்பட்ட காமிக்ஸ் புத்தகங்கள் வந்து கொண்டிருந்தன.ராணி காமிக்ஸ் ரூ.2/- விலையில் மாதமிருமுறை தொடர்ச்சியாக வாங்கிக்கொண்டிருந்தேன்.வரும் நாட்களில் லயன் - முத்து’வின் அறிமுகத்திற்கு பின்னர் பட்ஜெட்டில் துண்டுவிழ ஆரம்பித்தது. புத்தகக்கடைக்குச்சென்றால் நான் வாங்காத பிரதிகள் நிறைய தொங்கிக்கொண்டிருக்கும்.கையில் இருக்கும் பணத்திற்கு என்ன புத்தகம் கிடைகிறதோ அதை வாங்கிவிடுவென் (நான் பணம் என்று குறிப்பிடுவது  ரூ.1.50/- மற்றும் ரூ.2/- யைத்தான்...!). பல நாட்கள் என் கையில் உள்ள பணத்திற்கு தகுந்தாற்போல விலையில் காமிக்ஸ் கிடைக்காது, ஏமாற்றத்துடன் திரும்பிய நாட்களவை.என்னிடமுள்ள ராணி காமிக்ஸின் பிரதிகளை  நண்பர்களுக்கு வாடகைக்கு வாசிக்கக்கொடுத்து காமிக்ஸ் வாங்க பணம் சேமிக்கத்தொடங்கினேன். முகமூடி வீரர் மாயாவி (வேதாளர்) கதைகளுக்கு 40 பைசா, மற்ற கதைகளுக்கு 20 பைசா என்பது வாடகை கட்டணம் என்ற நண்பர்களுடனான உடன்படிக்கையுடன் காமிக்ஸ் கனவை நனவாக்க முயன்றுகொண்டிருந்தேன்.போன புத்தகங்கள் போனதோடு சரி திரும்பி வருவதில்லை என்ற நிலையில் இம்முயற்சியுடன், பல புத்தகங்களையும் சேர்த்து துறக்க வேண்டியதாயிற்று.கையில் கொஞ்சம் கணிசமான சேமிப்பு தேறவே காமிக்ஸ் வேட்டையாட கிளம்பினேன். இந்த முறை என் கையில் நான்கு காமிக்ஸ் புத்தகங்கள், இன்னுமொரு புத்தகம் வாங்க பணம் மீதமிருந்தது, ஆனால் கையிலோ இரண்டு புத்தகங்கள்  ஒன்று மாடஸ்டி (ஆவியின் பாதையில்) மற்றொன்று லக்கி லூக் (மேடையில் ஒரு மன்மதன்). மாடஸ்டியா...? மன்மதனா...? என்ற சிந்தனையில் நான் குழம்பிக்கிடக்க “தம்பி இந்த புக்க எடுத்துக்கப்பா...! இது கலர்ல இருக்கும்...!” என்கிற கடைக்காரரின் அறிவுருத்தலின்படி   கடைசியில் வென்றது மன்மதனே. “மேடையில் ஒரு மன்மதன்” மூலம்  எனக்கு ‘லக்கி லூக்’ என்ற நண்பன் அறிமுகமானது இவ்வாறே.வண்ணத்தில் காமிக்ஸ் புத்தகம் என்றதும், வாங்கிய புத்தகங்களில் முதல் வாசிப்பு லக்கி லூக்’கே.அன்றிலிருந்து இன்று வரை மாத அட்டவனையில் லக்கி இருந்தால் முதல் மரியாதை ஒல்லி பிச்சான் கெளபாய்க்கே என்றாகிப்போனது.

தொடர்ந்த மாதங்களில் “ஒரு கோச் வண்டியின் கதை”- விலா நோகச்செய்யும் நகைசுவைக்கதை.லக்கியின் கதைகளில் நான் அதிகம் ரசித்த கதையும் இதுவே.தங்கத்துடன் சில பயணிகளையும் ஏற்றிக்கொண்டு இலக்கை நோக்கிப்பயணப்படும் கோச் வண்டிக்கு காவலாகச்செல்கிறார் லக்கி.வண்டி இலக்கை எட்டும்முன் அதை கொள்ளையடிக்க பலர் முயல்கின்றனர்.அனைத்தையும் முறியடித்து வண்டி பயண இலக்கையடைய லக்கி மேற்கொள்ளும் சிரத்தைகளை அழகான காமெடித்தோரணமாக்கி கதை பின்னப்பட்டிருக்கும்.புரட்சித் தீ-யை அடுத்த பெரும்பான்மை வாசகர்களின் ஓட்டு இக்கதைக்குத்தானிருக்கும்.


லக்கி லூக் -25:
டிசம்பர் 1971,  ‘லக்கி லூக்’-கின் வயது 25.
  கொண்டாட்டங்களுக்கு தகுதியான நபர்தான்  இந்த “Poor lonesome cowboy". லக்கி லூக்கின் 25 வயது கொண்டாட்டங்களை மேலும் சிறப்பிக்க ஒரு ‘சிறப்பிதழ்’ வெளியிட முடிவு செய்தது ‘Pilote' நிறுவனம்.
December 9, 1971 "Pilote-no:631"
Bretecher, Got, Solé, Gotlin, Druillet, Martial, Briden, Loro போன்றவர்கள் தங்களது கைவண்ணங்களால் இதழை சிறப்பிக்க முன்வர, தங்கக்கல்லறை புகழ் Jean Girad மேலும் ஒரு படி மேலே சென்று நான் ஏன் லக்கி லூக்கை வரையக்கூடாது, எனது பாணியிலான லக்கி லூக்கை அனைவரும் கண்டு ரசியுங்கள் என 'LE-PIED TENDRE' (The Tenderfoot)-ன் பக்கங்களை வரைந்து மோரிஸுக்கு பரிசளித்தார்.இதுவே ‘ஒரு ஜெண்டில்மேனின் கதை’(பக்கம் எண் - 18) என்ற பெயரில் லயன் காமிக்ஸில் வந்தது. பதிலுக்கு மோரிஸ் அவரின் பங்கிற்கு "La Mine de l'Allemand perdu" (The lost Dutchman's Mine - தங்கக்கல்லறை) இதழின் பக்கங்களை Lieutenant Blueberry-க்கு பதிலாக லக்கி லூக் சாகஸம் புரிந்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை கட்டவிழ்த்துவிட அந்த கற்பனையின் அற்புதத்தை  நீங்களே பாருங்களேன்.இந்தப்பக்கங்கள் லக்கி லூக் சிறப்பிதலாக “Pilote" வெளியீட்டு எண்:631-ஆக டிசம்பர் 9,1971-ல் வெளிவந்தது.

Picture 01:Lucky Luke © René Goscinny, Morris and Jean Giraud 1971. 
Picture 02:Lucky Luke © René Goscinny and Morris 1967-1968.

 “ஜீன் கிராடின்” கைவண்ணமும்  - “மோரிஸின்” கைவண்ணமும்
தமிழில் “ஒரு ஜென்டில்மேனின் கதை”  

Picture 01:Lucky Luke © Jean-Michel Charlier and Morris 1971. 
Picture 02:Blueberry © Jean-Michel Charlier and Jean Giraud 1969.

தங்கக்கல்லறையின் பக்கங்கள் “லக்கி லூக்” பாணியில்.
JEAN GIRAD - க்கு மரியாதை:
2001-ம் ஆண்டு மோரிஸின் மறைவுக்குப்பின்னர் லக்கி லூக்’கின் சித்திர பொறுப்பு பிரெஞ்ச் எழுத்தாளரும்-ஓவியருமான Hervé Darmenton (Aka) Achdé விடம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில் 2012 - ம் ஆண்டு மார்ச் 10 அன்று Jean Girad மறைந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், “Jean Girad - Morris" இருவருக்குமான நட்பை சிறப்பிக்கும் விதத்திலும் Achde அவர்களால் ஜீன் கிராடின் "Blueberry's," (கிராடின் ஓவியத்தொகுப்பு) புத்தகத்திலிருந்து இரண்டு ஓவியங்கள் எடுத்து லக்கி லூக்- பாணியில் வரையப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.




"Blueberry's", page 39. Acrylic and pen and ink. Poster Ed Stardom,1995.Blueberry, with Pearl,dueling in a saloon... The honor of Achde in his own words:"I had fun in transcribing my way two illustrations of the late Jean in the world of Lucky Luke. A small exercise extrovert style of frameworks "a'laMorris"".




"Blueberry's", page 41. Acrylic and pen and ink. . Poster, Ed Stardom, 1996.Blueberry,.  in Achdé design, are also present the Brothers Dalton, the biggest opponents of Lucky Luke - the saloon cabin.

Source: Afranio Braga and Louis-Hughes Jacquin.
The image source: BDGest: graphics "Blueberry's"Gribouillachde: Achdé drawings.

என்னதான் காமெடி களேபரங்கள் இருந்தாலும் கதையின் இறுதிக்கட்டம் (Frame) ஒன்றுதான். இதுவும் கூட லக்கியின் சிறப்புகளில் ஒன்றே...!இன்னும் பல சிறப்புகளைக்கொண்ட இவரைப்பற்றி தொடரும் பல பதிவுகளில் விவாதிப்போம்.அதுவரை Have a lot fun with Lucky Comic. . . !




- பயணங்கள் தொடரும் . . .

Thursday, January 28, 2016

தங்கக்கல்லறை - கருப்பு & வெள்ளை நினைவுகள் . . . !

    “தங்கக்கல்லறை” நான் படித்த காமிக்ஸ் கதைகளில் ‘ULTIMATE' என்று இன்றளவும் என்னை எண்ணச்செய்யும் ஒரு அற்புதமான கதை. நான் காமிக்ஸ் வாசிக்க ஆரம்பித்த கொஞ்ச காலத்திலேயே எனக்கு வாசிக்க கிடைத்த இரண்டாவது கெளபாய் கதை, மட்டுமல்லாது எடிட்டரின் அருமையான மொழிபெயர்ப்பு, கதையின் ஆழம், சித்திரத்தரம் என  ஒட்டுமொத்தமாக  சிறப்பான புத்தகமாக “கேப்டன் டைகர்-இந்தியாவில் முதன் முறையாக” என்ற கம்பீரமான Caption - உடன்  என் (நம்) கையில் சேர்ந்த கதை.காமிக்ஸ் காதலர்கள் அனைவரது மனதிலும் “தங்கக்கல்லறை” நீங்கா இடம்பெற்றிருப்பதில் வியப்பேதுமில்லை.

தங்கக்கல்லறை I & II பாகங்களின் அட்டைப்படங்கள்

லயன் - முத்து காமிக்ஸ் அறிமுகமாகி தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வாசித்த கதைதான் தங்கக்கல்லறை என்றாலும்,அது ஏற்படுத்திய தாக்கம் ரசனையின் மற்றொரு பரிமாணத்தையும்,நான் காமிக்ஸ்-மேல் வைத்திருந்த ஒரு Image-யையும் ஒட்டுமொத்தமாக நொருக்கி “இதுதான்டா காமிக்ஸ் என்று எண்ணச்செய்தது”.

தங்கக்கல்லறை I & II பாகங்களின் காமிக்ஸ்-டைம் பக்கங்கள்

தங்கக்கல்லறையை  அச்சமயம் கருப்பு&வெள்ளை புத்தகத்தில் வாசித்ததற்கும், இக்காலத்தில் வண்ணத்தில் வாசித்ததற்குமான ஒப்பீடே இந்தப்பதிவின் முக்கிய நோக்கம்.அதற்கு முன்னர், நமது ஆசிரியர் “தங்கக்கல்லறை”-யின் மறுபதிப்பு + தரம் குறித்து சமீபத்திய 250-வது பதிவில்  நம்மிடம் பகிர்ந்துள்ள சில கருத்துக்களை படித்துக்கொள்வது நலம். எல்லாமே வெண்ணெய் பூசிய சாலைகள் மீதான பயணத்துக்கு சமானம் போலும் என்று ஒரு சின்னக் கனவு எனக்குள்ளே குடிபுகுந்திருந்த நாட்களில் தான் செவிட்டோடு விழுந்தது சாத்து  “தங்கக் கல்லறை“ ரூபத்தில்! ஒரிஜினலின் பக்கங்களில்  இருந்த பலூன்களைப் பெருசாக்கி, அதற்குள் நீள-நீள தமிழ் வசனங்களை அடைக்க முடியும் என்பதைக் கூட நானும், நமது DTP அணியினரும் அறிந்திருக்காப் பொழுது அது! தங்கக் கல்லறையின் நமது தமிழ் ஒரிஜினல் வசனங்களை வண்ணத்தில் அந்த பலூன்களுக்குள் அடைப்பது இயலாக் காரியம் என்பதை உணர்ந்த போதே அதனை rewrite செய்திட கருணையானந்தம் அவர்களிடம் அனுப்பியிருந்தேன்! அவரும் இயன்றளவு crisp ஆக எழுதி  சின்னதொரு குறிப்போடு எனக்கு அனுப்பியிருந்தார்! ‘நம் வாசகர்களிடம்  இரண்டு விதமான பாணிகளிலான ஒரே கதை இருக்கப் போகிறது! நிச்சயம் சந்தோஷப்படுவார்கள்‘ என்று ! அவர் அனுப்பிய ஸ்கிரிப்டை நான் மேற்கொண்டு rewrite செய்து  இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டுத் தயார் பண்ணி  இறுமாப்பாய் உங்களுக்குக் கூரியர் செய்த கையோடு இங்கே வலைப்பதிவின் முன்னே அமர்ந்து காத்திருப்பைத் தொடங்கினேன்! ஆனால் சீறி வந்ததோ ஒரு சாத்து மழை!! சும்மா தெளியத் தெளிய ஷிப்ட் போட்டு ஒரு வாரம் தொடர்ந்ததல்லவா மண்டகப்படி!! ‘என்னமாய் வசனத்தை மாற்றப் போச்சு?‘ என்று பொங்கிய நண்பர்களின் ஆத்திரத்தை என்னால் இன்றைக்கே முழுசுமாய் புரிந்து கொள்ள முடியாத நிலையில்  அன்றைய ‘கொழந்தைப் புள்ள‘ நாட்களில் கேட்கவும் வேண்டுமா? இன்றளவுக்கு எனக்கும், கருணையானந்தம் அவர்களுக்கும் அந்நாட்களது ஒரிஜினல் வசனநடையினை "காலத்தை வென்ற வரிகளாகப்" பார்த்திடவோ; புது version-ஐ கழிசடையாகக் கருதிடவோ துளியும் காரணங்கள் புரியவில்லை...!”. இந்தப்பதிவின் முழுவிபரங்களைக்கான “பயணமே பதிவாய்...”-யைக் காணவும்.

தங்கக்கல்லறை - கதைச்சுருக்கம்:
   எல்லாமே ஆரம்பிப்பது அரிஸோனா மாநிலத்தின் சிறுநகரமான பலோமிடாவில்-தான்.பணத்தாசை பிடித்த தங்கவேட்டையர்களை பிரஜைகளாகக்கொண்ட அந்நகரத்தில் ஜனங்களிடையே சட்டம் ஒழுங்கை பராமரிக்க மார்க்ஷலாக அனுப்பி வைக்கப்பட்ட யு.எஸ். இராணுவ அதிகாரிதான் நம்முடைய கதாநாயகன் கேப்டன் டைகர்.அவருடைய டெபுடிதான் குடிகாரன் ஜிம்மி.லக்னர், பார்னட்டிடம் வாங்கிய 250 - டாலரை திருப்பித்தராமல் ஏமாற்றியதாலும், தன்னுடைய தங்கச்சுரங்கத்தில் பாதி தருவதாக மேலும் ஏமாற்றுவதாலும் மதுபானக்கடையில் இருவருக்குமிடையே துப்பாக்கிச்சண்டை ஏற்படுகின்றது.டைகரின் தலையீட்டால் சண்டை முடிவுக்குவர, பாதுகாப்பைக்கருத்தில் கொண்டு லக்னரை கைது செய்து ஜெயிலில் அடைக்கிறார் டைகர்.இதற்கிடையே வெகுமதி வேட்டையர்களான கோலேவும்,வாலியும் லக்னரைத்தேடி வருகின்றனர்.பார்னட் கும்பலின் சூழ்ச்சியால் டைகர் நகரின் மறுமூலையில் சிக்கிக்கொள்ளகிறார்.இதற்கிடையே பார்னட் கும்பல் ஜெயிலை தகர்த்து லக்னரை பழிவாங்க முயற்சிக்கிறது. சூழ்நிலையையும் - ஜிம்மியின் பேராசையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறான் லக்னர். தனது திறமையினாலும் ஜிம்மியின் மதியூகத்தாலும் டைகர் உட்பட அனைவரது கண்ணீரிலும் மண்ணைத்தூவிவிட்டு,இருவரும் ஊரைவிட்டு வெளியேறுகின்றனர்.


கதையின் இறுதிக்காட்சிகள் நடைபெரும் “சூப்பர்ஸ்டிசன்” மலையின் எழில்மிகுத்தோற்றம்.
கேப்டன் டைகர், வாலி-கோலே மூவரும் அவரவர் வழியில் லக்னரையும்-ஜிம்மியையும் தேடிச்செல்வதில் ஆரம்பிக்கிறது  கதை.தங்களது இலக்கை அடையும் வரை அவர்களுக்குள் விதி விளையாடும் ஆட்டங்கள் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கும்.இச்சுவாரஸ்யத்தை புத்தகத்தை வாசித்தே பெற முடியும்.நமது பெரும்பாலான வாசகர்களால் கொண்டாடப்படும் இப்புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும்“தங்கக்கல்லறை - Online Purchase".

மறுபதிப்பு - ஒரு வாசகனின் எதிர்பார்ப்பில்:
  தங்கக்கல்லறை 1995-ம் வருட முதற்பதிப்பின்போதே வாசிக்க பாக்யம் கிடைத்த வாசகர்களுள் நானும் ஒருவன்.முத்து காமிக்ஸ் வரலாற்றில் முதன்முறையாக ஒரு கதையை இரண்டு பாகமாக வெளியிட்டனர்.படிக்க ஆரம்பித்த உடனேயே கதையின் போக்கில் உள்ள விறுவிறுப்பு நம்மையும் தொற்றிக்கொள்ளும் என்பதில் மாற்றுகருத்து கிடையாது.முதல் பாகத்தை முடித்ததும் அதன் கிளைமாக்ஸ் என்னவாகும் என சிந்தனையிலேயே இரண்டு மூன்று நாட்களை கடத்திவிட்டேன்.அந்த இரண்டு மூன்று நாட்களுக்குள் முதல் பாகத்தை ஒரு நான்கைந்து முறையாவது படித்திருப்பேன்(இன்றுவரை தங்கக்கல்லறை எத்தனை முறை மீள்வாசித்திருக்கிறேன் என்பது கணக்கிட்டு கூற முடியாத அளவிற்கு மீள்வாசித்தாயிற்று).புத்தகத்தை தருவிப்பதில் உள்ளூர் ஏஜெண்டின் தாமத்ததையும் சேர்த்து ஒன்றறை மாத இடைவெளியில் கிடைத்த இரண்டாம் பாகத்தை வாசித்து முடித்தவுடன்தான் நிம்மதியாயிற்று.எடிட்டரும் ஒட்டுமொத்த முத்து காமிக்ஸில் அவருக்கு பிடித்த கதைகள் என ஒரு பத்து புத்தகங்களின் பெயரை ஒரு இதழில் பட்டியலிட்டிருப்பார், அதில் முதல் இடம் தங்கக்கல்லறைக்குத்தான்.பெரும்பாலான வாசகர்களுக்கும் நினைவில் நின்ற கதைவரிசையில் டைகரின் இந்த Out & Out, Wild West சாகஸத்திற்கு நிச்சய இடமுண்டு.


    “தங்கக்கல்லறை” - நான் கையில் வைத்திருக்கும் புத்தகத்திற்கு வயது இருபது.இடைபட்ட காலங்களில் எத்தனையோ தடவை புத்தகத்தை வாசித்தாலும் கடுகளவும் சுவாரஸ்யம் குறையவில்லை. Internet பரவலான காலகட்டத்தில் கூகிலாண்டவரின் உதவியோடு வண்ணத்தில் இதன் ஆங்கில பதிப்பு வாசிக்கக்கிடைத்தது.பேராசை யாரைதான் விட்டது.என்னதான் வண்ணத்தில் - கணினியில் வாசித்தாலும் அந்த புத்தக வாசனையுடன், கையில் புத்தகம் தவழ, கண்கள் குளிர நமது தாய்மொழியில் வாசிக்கும் அனுபவமே வேறில்லையா...!?.ரூபாய்.10/-க்கு வந்துகொண்டிருந்த  நமது இதழ்களே ஒழுங்காக வருவதில்லை,இதில் விலை அதிகம்  என்கிற Complaint - வேறு.இந்த நிலையில் “த ங் க க் க ல் ல றை...... அதுவும் வண்ணத்தில்...... வெறும் பிதற்றலென்று  என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.இவ்வுலகம் ஒவ்வொரு நொடியும் ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் மாயலோகம் என்பது உண்மைதான் என எண்ணச்செய்யும் விதமாக நமது லயன் - முத்து காமிக்ஸின் வண்ணமிகு மறுவருகையும் நடந்தேறியது.அதே வேகத்தில் “தங்கக்கல்லறை” வண்ணத்தில்-மறுபதிப்பாக  என்ற முத்து காமிக்ஸின் அறிவிப்பையும் சேர்த்து.வழக்கமான அறிவிப்புடன் நின்றுவிடாமல் புதுப்பொலிவுடன் இதழும் கைக்கு வந்து சேர்ந்தது.இருபது வருடங்களுக்கு முன்னர் எதிர்பார்ப்பில்லாமல் படிக்க ஆரம்பித்து படித்து-ரசித்த தெரிந்த கதையை, எதிர்பார்ப்புடன் வண்ணத்தில் படிக்க ஆரம்பித்தேன். வாசித்து முடிக்கும் போது ஏதொவொன்று குறைவதாக தோன்றியது. நமது ரசனையின் எல்லைகள் மாறிவிட்டதோ...! என்ற நினைப்பில் சிறிய சஞ்சலம் தட்டவே முதற்பதிப்பை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.It's always rock to read...!.இரண்டு பதிப்பும் வாசித்தவர்களுக்கே இரண்டுக்குமுள்ள வித்தியாசங்கள் அர்த்தப்படும்(வசனத்தில் ஆசிரியரின் பங்கு எவ்வளவு முக்கியமானதென்று). நேரடியாக வண்ணத்தில் வாசிக்க வாய்ப்பு கிடைத்தவர்களுக்கான அனுகூலம் முழுக்கதையையும் ஒரே தொகுப்பாக கிடைத்ததுதான்.இப்பொழுதும் நான் புத்தகக்காட்சிக்கு செல்லும்போதெல்லாம் முதலில் நான் கையில் எடுப்பது தங்கக்கல்லறையின் பிரதிகளைத்தான்.புதிய நண்பர்களுக்கு பரிசளிக்க எப்போதும் ஒரு 5 பிரதிகளாவது என் கையில் வைத்திருப்பேன்.இம்முறை பொங்கல் புத்தகக்கண்காட்சிக்கு சென்றிருந்தபொழுதும் நான் தேடியது தங்கக்கல்லறை பிரதிகளைத்தான், கண்காட்சிக்கு கடைசி தினம் என்பதால் ஸ்டாலில் Out of Stock.


   நான் விரும்புவதெல்லாம் மறுபதிப்பாகும் புத்தகங்கள் தரத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்குமென்பதே. தற்போதைய மும்மூர்த்திகளின் மறுபதிப்புத்தரம் நன்றாகவே உள்ளது. ‘கார்ஸனின் கடந்தகாலம்’ என்னால் ஜீரணிக்கவே இயலவில்லை. ஒரு பக்கத்திற்குள் நான்கு Image-களைப் பொருத்த முயன்று பக்கங்கள் முழுவதும் இழுத்தது போன்ற வடிவமைப்பில் ஒட்டுமொத்தமாக சொதப்பலான முயற்சியாக ஆகியிருந்தது. கதைத்தேர்விலும், புத்தக வடிவமைப்பிலும். குறைவான விலையிலும் நம்மை திருப்திபடுத்தும் ஆசிரியர்  இதுமாதிரியான விக்ஷயங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியம்.மீண்டுமொரு சுவாரஸ்யமான பதிவுடன் சந்திப்போம் நண்பர்களே.
- பயணங்கள் தொடரும்.

Thursday, January 14, 2016

மேக்னஸ் - ஒரு சித்திர சகாப்தம்


                    தீபாவளி இதழை வாசித்ததிலிருந்தே ஓவியர் மேக்னஸ் பற்றிய ஒரு பதிவிட வேண்டும் என்ற எண்ணவோட்டம் மனதோரம் ஒரு சாரலாய் தூறிக்கொண்டே இருந்தது.அதன் விளைவே இந்தப்பதிவு “மேக்னஸ் - ஒரு சித்திர சகாப்தம்”. மேக்னஸின் சித்திரத்தின் ஆழத்தைப்பற்றியும், தரத்தைப்பற்றியும் நான் இன்னொருமுறை விவரிக்க வேண்டியதில்லை.புத்தகத்தை வாசித்தவர்களுக்கும்,வைத்திருப்பவர்களுக்கும் தெரியும் அது எவ்வளவு பொக்கிக்ஷமானது என்று.


ஓவியங்கள் ஏன் ஓவியமாகின்றது: 
 ஓவியங்கள்தான் என்னை சென்னை கொண்டுவந்து சேர்த்தது.சிறு வயதிலிருந்தே ஏதாவது வரைந்துகொண்டே இருப்பேன்.நான் வரைவதைப்பார்த்த எனது அப்பாவின் நண்பர் ஒருவர் “உங்க பையனை சென்னைல ஓவியக்கல்லூரில சேர்த்துவிடுங்க, பய நல்லா படம் போடுறான்” என அப்பாவிடம் சொல்ல, அவரும் பார்க்கலாம் என்று சொல்லி வைத்தார்.பின்னாட்களில் திரைப்பட இயக்குனராவதுதான் லட்சியம் என்ற வெறியோடு ஒருவழியாக சென்னை வந்து சேர்ந்தேன். சென்னைக்கு வந்த புதிதில் அடையாறில் தங்கியிருந்தேன், கொடைக்கானலின் அமைதிக்கும்-சுகாதாரத்துக்கும் சற்றும் பொருத்தமில்லாத நேர்மாறான சென்னையின் சுற்றுசூழலமைப்பு  என்னை  கொஞ்சம் திணறடிக்கத்தான் செய்தது.நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக  சென்னையையும் அது அறிமுகப்படுத்திய மனிதர்களையும் புரியக்கற்றுக்கொண்டேன்.கணக்கிலடங்கா ஓவியர்களுடனும் அறிமுகமாகி பழகிக்கழித்தாயிற்று.சிலபேரை மறக்கமுடியாது, மன்னிக்கவும் மறக்கவேமுடியாது.

  •  Watchman-ஆக அறிமுகமாகி சிறந்த ஓவியனாக புரிந்து-தெரிந்து கொண்டு அதை வெளியுலகிற்கு கொண்டு வரும் முன் இறந்துபோன பாண்டி அண்ணாவிற்கு அவரிடம் ஒரு அசாத்திய திறமை இருப்பது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை,நெருங்கிப்பழகியவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்பிருந்தது.
  • அடையாறின் இந்திரா நகர் நூலகத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம். ஒரு நாள் வழக்கமாக நான் கடந்து செல்லும் வழியிலுல்ல சுவர் வழக்கத்தை மீறி என் கவனத்தை ஈர்த்தது,காரணம் எப்போதும் அழுக்காக காணப்படும் அந்த சுவரில் கரித்துகள்களாலும்,சோப்புக்கட்டிகளாலும், சாக்பீஸ் துணுக்குகளையும் கொண்டு தென்னைமரம், ஒரு சிறிய பாலம், ஒரு அழகிய குடிலை உள்ளடக்கி சூரிய உதய Lighting-உடன் கூடிய இயற்கைக்காட்சி ஓவியம் மிக நேர்த்தியாக வரையப்பட்டிருந்தது.அந்த ஓவியத்தை வரைந்த நபரை சந்திக்க விரும்பி தேடத்தொடங்கினேன். ஆங்காங்கே அவ்வப்போது சில  சுவர்களில் திடீரென்று தோன்றும் இந்த ஓவியங்கள் யாரால் எப்போது வரையப்படுகின்றது என்பது பார்க்கும் அனைவருக்கும் பொதுவான கேள்வியாக இருந்தது. தேடும்போது கிடைக்காமல் யதார்த்தமாக ஒரு நாள் ஒரு ஆதரவற்ற சுவரை தன் இயற்கை காட்சியால் அழகுபடுத்த தயாராகிக்கொண்டிருந்த அந்த கலைஞனையும் சந்திக்க நேர்ந்தது.(நான் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் சந்திப்பு . . . !)அவன் ஓவியத்தில் இருந்த நேர்த்தி அவனிடமுமில்லை, கிழிந்த அவன் உடைகளிலுமில்லை - அவன் கண்களைத்தவிர.அந்த கலைஞன் ஓவியம் வரைய சுவர்களை சுத்தப்படுத்தியது ஒரு தாய் மண்ணில் விளையாடிய தன் குழந்தையை, புத்தாடை அணிவிப்பதற்காக நீரில் கழுவி தயார்படுத்துவதை போலிருந்தது.வரைந்து முடிக்கும்வரை மொளனித்திருந்தேன். அதே ஓவியம், நிறக்கலப்பில் மட்டுமே வித்தியாசம். அதே நேர்த்தியுடன் ஒரே ஓவியத்தை பல தடவை எந்தவித அலுப்புமில்லாமல் அவரை வரையத்தூண்டுவது எது? அவரிடம் பேச முயன்று தோற்றுப்போனேன்.அவருக்கு ஏதாவது பண்ணவேண்டும் என்ற எண்ணம் உந்தித்தள்ள ஒரு நூறு ரூபாயை எடுத்து அவரிடம் நீட்டினேன், என்னையும்-பணத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார்.ஏறத்தாழ இரண்டு நிமிடங்கள் நீடித்த இந்த நிகழ்வை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்தவனாய், பணத்தை கையில் மடித்துக்கொண்டு குற்றவுணர்ச்சியுடன் விருவிருவென நடையைக்கட்டினேன் . எதிர்ப்பட்ட டீக்கடையில் ஒரு டீ வாங்கிக்கொண்டு வேகமாக அவரிடம் கொடுக்க வந்தேன்- அவரில்லை, சுவற்றில் அந்த கலைஞன் விட்டுச்சென்ற கலையின் மிச்சம் அத்தனையும் என்னைப்பார்த்து  ஏளனம் செய்வதான பிரம்மை இன்னமும் என்னைவிட்டு நீங்கவில்லை.
  • கோடீஸ்வரக்கடவுள் ஏழுமலையானை பலவண்ணங்களில் ராயப்பேட்டை மருத்துவமனை பேருந்து நிருத்தத்தில் கொண்டு வந்து நிருத்திருந்தார் ஓவியர் சாமி. “எங்கப்பா சாமி படம் போடுறவரு,ஊருல இருக்கிறதுல முக்காவாசிபேரு வீட்ல அவரு வரஞ்ச படந்தான் இருக்கும்.அவருட்டர்ந்து கத்துகிட்டதுதான் இதெல்லாம்.இதுலதான் பொழப்பு ஓடிட்ருக்கு, என்ன ஒரே வித்தியாசம் எங்க அப்பனாரு சாமிய வீட்டுக்குள்ள கூட்டிபோனாரு நான் ரோட்டுக்கு கூட்டியாந்திருக்கேன் அவ்வளவுதான்”.என்றவரிடம் “ஏன் நீங்க உங்கப்பா பண்ணதையே பண்ணலாமே? என கேட்க, “எங்க தம்பி ஃபிளெக்ஸ்ன்றான் - பிரிண்டிங்றான், முன்ன மாதிரி இல்ல தம்பி...!” என்று கூறிவிட்டு, ஏதோ மறந்தவராக “ரோட்ல போட்ருக்கேனே இந்த படம் படமாதான் தெரியுதில்லையா ஏன்?” தெரியாது என்று தலையசைத்து வைக்க “பணம் சம்பாரிக்கத்தான்” என்றார் பெருஞ்சிரிப்புடன்.
  3D படம் வரையும் ராம்தாஸ் அண்ணன்,கஞ்சா அடிக்க காசு சேர்க்க 'Portrait'-வரையும் கொடைக்கானல் தாமஸ் அண்ணன், சுவரில் கட்சித்தலைவர்களை வரைந்து கொண்டே “பிக்காஸோவைப்”-பற்றி பேசும் ஆறுமுகம் என பட்டியலிட்டால் எழுதிக்கொண்டே போகலாம்.மேக்னஸைப்பற்றிய பதிவில் இவர்களைப்பற்றி நான் குறிப்பிட்டதற்கு காரணம், இவர்களும் ஓவியர்கள் என்பதோடு - என்னுள்ளான இவர்களின் தாக்கம் தான்.

எமனின் வாசலில் (La Valle Del Terrore):
      புத்தகத்தை திறந்ததும் நேராக படிக்க ஆரம்பித்தது “எமனின் வாசலில்”-கதையைதான், காரணம் மேக்னஸ்.கதையொன்றும் ஆஹா-ஓஹோ ரகமில்லையென்றாலும், பக்கத்திற்கு பக்கம் மேக்னஸின் அபார உழைப்பால் இழைக்கப்பட்டிருப்பதென்னவோ! மறுக்க இயலாத உண்மை.

            வழக்கமான டெக்ஸ் கதை.ஒற்றை வரியில் சொல்வதானால் “எச்சரிக்கை முத்திரை குத்தப்பட்டு  அதன் தொடர்ச்சியாக எச்சரிக்கப்பட்ட நபர்கள் கொல்லப்பட்டுவரும் ஒரு பள்ளத்தாக்கின் மர்மத்தை வில்லரும் - கார்ஸனும் கட்டவிழ்ப்பதே கதை”.இக்கதையின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அவ்வளவு அழகாக செதுக்கப்பட்டிருக்கும்.

மேக்னஸின் கைவண்ணத்தில் “எமனின் வாசலில்”- கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்.


         எமனின் வாசலில் - தனிப்புத்தகமாக Hardbound அட்டையில் வெளியிட்டு மேக்னஸிற்கு நியாயம் செய்திருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.மேக்னஸ் இறந்தும், புத்தகம் வெளியாகியும் இருபது வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் நம் கையில் வாசிக்க கிடைத்திருக்கிறது.இதே வேளையில் மேக்னஸின் இருபது வருட நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக அவரது பல்வேறு - கிட்டத்தட்ட 140 விதமான படைப்புகளின் கண்காட்சி 2015 டிசம்பர் 22 முதல் 2016 ஜனவரி 06 வரை  இத்தாலியில் நடைபெற்று முடிந்திருக்கிறது.
மேக்னஸின் தூரிகை ஜாலம்

இக்கதையின் சித்திரங்களை முடிக்க  மேக்னஸிற்கு முழுதாக ஏழு வருடங்கள் ஆகியிருக்கின்றது.கல்லீரல் புற்றுநோயுடன் போராடிக்கொண்டிருந்தவர் 1996-ம் ஆண்டு, அதாவது புத்தகங்கள் வெளிவருவதற்கு சில மாதங்கள் முன்னராக காலமானார்.எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் தமது படைப்பின் மூலம் வலம் வரும் மேக்னஸ் நம் மனதிலும், உலக காமிக்ஸ் ரசிகர்கள் மனதிலும் என்றென்றும் வாழ்வார் அதுவே அவரது சாதனையும் கூட.RIP-MAGNUS.

மேக்னஸிற்கு நமது வாசகர்களின் சார்பாக டெக்ஸ் வில்லர் - கார்ஸனின் அஞ்சலிகள்.

- பயணங்கள் தொடரும்



Sunday, November 15, 2015

காமிக்ஸிம் சில “common” சிந்தனைகளும்

நண்பர்களுக்கு வணக்கம், மீண்டும் ஒரு பதிவுடன் உங்களை தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி. இந்த மாதத்து இதழ்களை  அதிகம் எதிர்பார்த்திருந்தேன். பட்டியலில் சாகஸ வீரர் ரோஜர் இருப்பது மற்றொன்றுதீபாவளி with TEX”-ம் தான் எதிர்பார்ப்பிற்கான காரணம்.டெக்ஸ் என்றாலே ஹிட் என்ற நிலையில், இந்த மாதம் டெக்ஸ் புத்தகத்தை எதிர்பார்த்திருந்தது டெக்ஸிற்காக அல்ல, அதன் ஓவியத்திற்காக. எடிட்டர் ஏற்கனவே இக்கதையின் ஓவியங்களை சிலாகித்தும்,கதையின் சில பேனல்களை வெளியிட்டும் எதிர்பார்ப்பைத் தூண்டியிருந்தார்.ஒவியரின் 7 வருட உழைப்பு ஒவ்வொரு கோடுகளிலும் தெரிகிறது.ஓவியருக்கு ஒரு மிகப்பெரிய Thumbs up. உண்மையில் படித்து, ரசித்து பாதுகாக்க வேண்டிய கலைப்பொக்கிக்ஷம் இந்த தீபாவளி with TEX”.

என் பெயர் டைகர்: 
 “என் பெயர் டைகர்” - முன்பதிவிற்கு கீழே உள்ள Link-யை க்ளிக் செய்யவும்.
“என் பெயர் டைகர்” முன்பதிவிற்கு கிளிக் செய்யவும்

ஆர்வமுடன் இந்த மாதத்து இதழ்களை புரட்டிக்கொண்டிருக்கும்போதே, கூடவே மனதும் சில விக்ஷயங்களைப்புரட்டிக்கொண்டிருந்தது. என்னதான் வயதாகியிருந்தாலும் காமிக்ஸ் கையில் வந்தவுடன்  நடப்பு வயது காலாவதியாகி நம்மை இளம் பருவத்துக்கிட்டுச்செல்வது நம் காமிக்ஸ் காலர்களுக்கே வாய்க்கும் ஒன்று.ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை  “எனக்கு மட்டும்தான் இப்படித்தோன்றுகிறதா. . . ?” என நான் நினைக்கும் விக்ஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.இதில் ஒன்றிரெண்டு அல்ல பல விக்ஷயங்கள்  நீங்களும் நினைத்திருக்கலாம்-நிகழ்ந்திருக்கலாம், ஏனென்றால் நாம் அனைவரும் ‘காமிக்ஸ்’ என்ற ஒரே மழையின் கீழ் நனைந்துகொண்டிருக்கிறோம் அல்லவா.அதனாலே இந்தப்பதிவிற்கு “காமிக்ஸிம் சில common சிந்தனைகளும்” என்கிற காரணப்பெயர்.

  1. பொதுவாகவே பெண்கள் புத்தகம் படிப்பது குறைவு என்றாலும் ‘காமிக்ஸ்’ என்றவுடன் காத தூரம் ஓடுவது ஏன்? (வாழ்க்கையில் ‘துணைவியர்’ கதாபாத்திரம் ஏற்றவர்கள் காத தூரம் ஓடுவதில்லை என்றாலும், காமிக்ஸை கண்டவுடன் காதில் புகை வராத குறையாக கணவன்மார்களை முறைப்பது ஏனென்பது அனைவரும் அறிந்ததே).
  2. ராணி காமிக்ஸ் மாதமிருமுறை சரியாக கிடைப்பதெல்லாம் O.K தான், ஆனால் லயன் - முத்து காமிக்ஸ் போல கதையைப்பற்றிய ஆசிரியரின் எண்ணவோட்டத்தை அறியவும், திட்டமிடல்கள், காமிக்ஸ் விளம்பரங்கள் என புத்தகத்தை இன்னும் மெருகூட்டவும் முயற்சித்திருக்கலாம்.
  3.  பழைய புத்தகக்கடைக்குச் சென்று காமிக்ஸ் தேடாத காமிக்ஸ் நண்பர்களும் உண்டா? (2000-க்கு முந்தைய காலகட்டத்தில் பழைய புத்தகக்கடைக்கு சென்றாலே கண்டிப்பாக காமிக்ஸ் கிடைக்கும்.தற்போதும் அதே நினைவில்  சமீபத்தில் ஓரிரு கடைகளுக்கு சென்று காமிக்ஸ் என்று கேட்டதும் சிலர் மேலும்-கீழும் பார்ப்பதும்,பெருவாரியான பதில் ‘இப்பெல்லாம் காமிக்ஸ் வர்றதில்லீங்க’ என்பதும், அதிகபட்சமாக ‘Tinkle Digest' கிடைப்பதுமாக இருக்கிறது.)
  4. அந்நாட்களில் இரத்தப்படலம் (XIII)  முழுத்தொகுப்பை ஒருமாதகால முயற்சியில் முழுவதும் படித்துமுடித்துவிட்டு கதை புரிகிறதா-புரியவில்லையா என எனக்கே புரியாமல் XIII-யைவிட அதிகம் குழம்பித்திரிந்தது நான் மட்டும் தானா? (பின்னாட்களில் மீள்வாசித்து கதையை சிலாகித்து நண்பர்களுக்கு புத்தகத்தை பரிசளித்து திரிந்தது தனிக்கதை).
  5. லயன்-முத்து காமிக்ஸின் புத்தகங்களில் வெளியாகும் மாதம்/ஆண்டு (Ex: நவம்பர் - 2015) குறிப்பிட்டால் பிற்காலத்தில் வரிசைப்படுத்துவதற்கு வசதியாக இருக்கும்.
  6. இன்னுமா இந்த சின்னபுள்ளைங்க படிக்கிற பொம்மை புக்கெல்லாம் படிக்கிற. . . ? இந்த கேள்வியை எதிர்கொள்ளாத நண்பர்கள் எத்தனை பேர்? (இந்தக்கேள்வியை எதிர்கொள்ளும்போதெல்லாம் கேட்பவர்கள் மீது கோபமும், காமிக்ஸின் ரசனையை அறிய இந்த ஜென்மத்தில் கடவுள் இவர்களுக்கொரு வாய்ப்பளிக்கவில்லையே என்ற வருத்தமும் ஒருசேர ஏற்படும். இதைப்பற்றி பேச ஆரம்பித்தால் இதற்கே தனிப்பதிவிட வேண்டிவரும்).
  7. ஒரு காலத்தில் நமக்கு மிகவும் பிடித்தது, பிடிக்காமல் போவதும் - பிடிக்காமல் இருப்பது  மிகவும் பிடித்தமான ஒன்றாகிப்போவதும் உலகத்தின் இயல்பு என்பதுபோல, விருப்பமான காமிக்ஸின் மீதிருந்த நேசம் விலகி புத்தகங்களை விற்றோ,நண்பர்களுக்கு கொடுத்துவிட்டோ அல்லது எடைக்கு போட்டுவிட்டோ அதற்காக தற்போது வருந்துவோர் எத்தனைபேர் . . . ? 
  8. சிவகாசிக்கு சென்று ஆசிரியரை நேரில் சந்தித்து உரையாடிவிட்டு, காமிக்ஸிம் அள்ளிவர வேண்டும் என்று திட்டமிட்டு ஆயிற்று 8 ஆண்டுகள்.இவ்வாறு திட்டத்துடன் நிறுத்திக்கொண்டதும், செயல்படுத்தியதும் எத்தனை பேர்?
  9. காமிக்ஸ் டைம், ஹாட்லைன் படிப்பதற்காகவே பழைய வெளியீடுகளை தற்போதும் புரட்டிக்கொண்டிருக்கிறேன். காரணம் காமிக்ஸைப்பற்றி கலந்துரையாடுவதும், படிப்பதும், விவாதிப்பதும்  ஒரு காமிக்ஸ் காதலனுக்கு என்றைக்குமே விருப்பமான விக்ஷயங்களே.
  10. என்னதான் பணம்,பட்ஜெட் என்று பல்லைக்கடித்தாலும் மாதம் 4 காமிக்ஸ் வந்தாலும், மனது இன்னும் வேண்டும் என்றுதான் கேட்கிறது.காசுக்கு என்றைக்குமே கலையை கட்டிப்படுத்தக்கூடிய ஆற்றல் இல்லைதான்.
  11. படிக்ககொடுத்த காமிக்ஸ் திரும்பி வரவில்லையே என்ற ஆதங்கத்தில் இனிமேல் காமிக்ஸ் இரவல் கொடுக்கக்கூடாது என்ற முடிவுடன் தூக்கம் தொலைத்தும், மறுநாளே மற்றொரு காமிக்ஸை இழந்த கொடுமையை என்னவென்று சொல்வது.
  12. காமிக்ஸ் திரும்பவும் வருதா? வண்ணத்தில் வருகிறதா? என்பவர்களிடம் காமிக்ஸ் வருவது பற்றியும், லயன் ஆபிஸ் முகவரி கொடுத்தும், online-னிலும் வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறிவிட்டு மகிழ்வது,மொழிதெரியாத ஊரில் ஒரு தமிழனைப்பார்த்துவிட்டு பரஸ்பரம் உதவிக்கொள்வதற்கு சமமானது.
  13. வரும்புத்தகங்களை எல்லாம் படிக்க முயற்சித்தாலும் வேலைப்பளுவின் காரணமாகவும்,நேரமிண்மையின் காரணமாகவும் வாசிக்காமல் கிடப்பில் இருப்பது ஒரு டஜனாவது தேரும். 
இது ஒரு மழைநாள் மாலை நேரத்து சிந்தனைகளே.மீண்டுமொரு சுவாரஸ்யமான பதிவுடன் சந்திப்போம்.தங்கள் கருத்துக்கள், நிறை,குறைகளைத்தெரிவியுங்கள்.Have a lot fun with 'COMICS'.

- சிந்தனைகள் தொடரும். . .

Wednesday, October 28, 2015

காமிக்ஸ் - ஒரு முடிவில்லா தேடல்

நண்பர்களுக்கு வணக்கம், சாகஸ வீரர் ரோஜர், வேய்ன் ஷெல்டன்,டெக்ஸ் வில்லர், கமான்சே,மாடஸ்டி என இந்த வருட விருந்தே இன்னும் பாக்கியிருக்க, நாம் 2016-ம் வருட சந்தாவை புதுப்பிக்க ஆரம்பித்து விட்டோம் - உண்மையில் மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றது(ஜனவரி 2012 B.C.[Before Comics] ஆண்டுக்கு முந்தைய சூழலை நினைத்துப்பாருங்கள், உங்கள் மனமும் குதியாட்டம் போடுவது உறுதி).2002 - ம் ஆண்டு சென்னை புதுக்கல்லூரியில்(The New College), இளங்கலைப்பயில வந்து சேர்ந்ததில் இருந்து எனக்கும் காமிக்ஸ்-க்குமான இடைவெளி கொஞ்சம்,கொஞ்சமாக நீண்டுகொண்டே வந்து ஒரு கட்டத்தில் நின்றே போனது.சற்றே பெரிய இடைவெளிதான் கிட்டத்தட்ட 10 வருடங்கள்.ஒரு காலகட்டத்தில் திடீரென ஞானோதயம் வந்தவனாய் காமிக்ஸை தேடத்தொடங்கினேன்.இடைப்பட்ட காலத்தில் நடந்த சம்பவங்களைப் பகிர்ந்துகொள்வதே இந்தப்பதிவின் நோக்கம். 

கல்லூரியும் காமிக்ஸிம்:
   நான் கல்லூரியில் சேர்ந்திருந்த காலகட்டத்தில்தான் நமது லயன் - முத்து காமிக்ஸின் வெளீயீடுகள் ரொம்பவே குறையத்தொடங்கிருந்தன.ராணி காமிக்ஸ் மட்டும் சரியாக வந்துகொண்டிருந்தது. ராணி காமிக்ஸிம் அட்டைப்படங்கள் முதல் கதைகள், மொழிபெயர்ப்பு என ஒட்டுமொத்தமாக சொதப்பி கடையை மூடியதும் இத்தருணத்தில்தான். ஆடிக்கொன்றும் அமாவாசைக்கொன்றுமாக வந்துகொண்டிருந்த லயன் - முத்து காமிக்ஸிம் ஒரு புத்தகத்திற்கே ஒன்றிரண்டு மாதங்கள் புத்தகக்கடைக்கு அலையவிட்டுக்கொண்டிருந்தனர். அடித்து பிடித்து வரும் புத்தகங்களை, படிக்க எடுத்தால் கல்லூரி நண்பர்கள் “இன்னூமாடா மாப்ள , காமிக்ஸெல்லாம் படிக்கிற என்பார்கள்...?” தவிர  60 சதவீதம் நண்பர்களுக்கு “இரும்புக்கை மாயாவி” பற்றி தெரிந்திருந்தது.புதிய சூழல்,நட்பு வட்டம், காமிக்ஸ்-கள் சரிவரக்கிடைக்காத நிலை என அனைத்தும் சேர்ந்து காமிக்ஸ் எனும் உயிர்நண்பனை ஏறத்தாழ நினைவில் இருந்து அகற்றியிருந்தன...!.அவ்வப்போது ஊருக்கு வரும்போது ஒருசில புத்தகங்களைப்படிப்பதும், உன் புத்தக அட்டைப்பெட்டி ஃபுல்லா பூச்சி அரிச்சுட்டு இருக்குடா... நான் என்ன பண்ணட்டும்? என்று அம்மா தொலைபேசியில் பேசும்போதும், பால்ய நண்பர்கள் சிலரிடம் பேசும்போதும் மட்டுமே காமிக்ஸ் நினைவில் வந்துசென்றது.

ஒரு தேடலின் ஆரம்பம்:
   கல்லூரி முடித்து,ஒரு வேலை தேடி அந்தவேலையில் ஒருவன் தன்னை
நிலைநிறுத்திக்கொள்வதற்குள் விதி அவனது வாழ்க்கையில் கபடி முதல் காபரே வரை ஆடித்தீர்த்திருக்கும்,அடியேனும் அதற்கு விதிவிலக்கல்ல .எல்லாம் அமைதியாக அமைந்த ஒரு ஞாயிறு மாலையில் வலைப்பக்கங்களில்(Internet) மேய்ந்து கொண்டிருக்கும்போது கண்ணில் ஒருசில காமிக்ஸ் வலைப்பூக்கள் தென்பட்டன.கண்களில் ஆர்வமும், கைகளில் உற்சாகமும் தொற்றிக்கொள்ள அன்றிரவு முழுவதும் வலைப்பூக்களில் மூழ்கிக்கிடந்தேன். “காமிக்ஸ் கிடைக்காத காலகட்டத்திலும், தங்கள் வலைப்பூக்களின் மூலம் காமிக்ஸ் - காதலை உயிர்ப்புடன் வைத்திருந்த”மைக்கு வலைத்தள நண்பர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்.

   திரும்பவும் காமிக்ஸ் தேடல் ஆரம்பமானது.வலைத்தளத்தில் ஆரம்பித்து பழைய புத்தகக்கடைகள், நண்பர்கள், லெண்டிங் லைப்ரரிகள்,பதிப்பகங்கள் என வெறித்தனமாக ஒன்றிரண்டு மாதங்கள் தேடியதன் பலனாக ஒரேயொரு புத்தகம் . . . . ! (அட உண்மையாதாங்க) மாடஸ்டி’யின் “காட்டேரிக் கானகம்”  கிடைத்தது.அதன் மூலமே இரத்தப்படலம் முழுத்தொகுப்பு வந்த விக்ஷயமும் தெரிந்தது. லயன் அலுவலகத்திற்கு ஃபோன் செய்து கைவசம் உள்ள அனைத்துப்பிரதிகளையும் வாங்கியபிறகே உறக்கம் வந்தது.சூட்டோடு சூடாக ஊருக்கு சென்று அனைத்து புத்தககங்களையும் தூசிதட்டி, சுத்தம் செய்து  அடுக்கி வைத்த பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டேன். 2012-ம் ஆண்டு லயனின் மறுவருகையான “Lion Come Back Special"-ல் இருந்து ஆட்டம் ஆரம்பம்தான். இருந்தாலும் வேலை பளு + இன்னபிற காரணங்களால் அந்த வருட சில முக்கிய வெளீயீடுகளும் missing. அதன் பின்னர் சந்தா தவறாமல் கட்டுவது தனிக்கதை.இன்னும் பழைய புத்தகங்களை நண்பர்கள் மூலமாகவும் இன்னும் ஏதோவொரு வழியிலும் நான் மட்டுமல்ல நாம் ஒவ்வொருவரும் தேடிக்கொண்டே இருக்கிறோம் . . . ஆம் இது ஒரு முடிவில்லா தேடல் தான் நண்பர்களே . . .!.
 என் பெயர் டைகர்!
   விடைபெருவதற்கு முன்பாக "Mike.S.Bluberry" (A) "கேப்டன் டைகர்”-ரின் விசிறி என்கிற வகையில் சிறியதொரு நினைவூட்டல் பட(ல)ம். முன்பதிவிற்கு கீழே உள்ள Link-யை க்ளிக் செய்யவும்.

“என் பெயர் டைகர்” முன்பதிவிற்கு கிளிக் செய்யவும்

மீண்டுமொரு புதிய பதிவில் சந்திப்போம் நண்பர்களே. Thank You Folks . . .
- தேடல் தொடரும்...
0000
ன் 

Tuesday, October 20, 2015

விரியனின் விரோதி - ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில்

   வணக்கம், மீண்டும் ஒரு புதிய பதிவுடன் நண்பர்களைச்சந்திக்கிறேன்.ஒரு உண்மையைச்சொல்வதானால் இந்த தளத்திற்கு தாங்கள் தந்த ஆதரவும், பின்னூட்டங்களும், சில-பல புதிய நட்புக்களும் என ஆரம்பித்த நாளில் இருந்தே இந்த வலைப்பக்கம் மூலம் எனக்கு ஏற்பட்ட புதிய அனுபவங்களுமே என்னைத்தொடர்ந்து எழுதத்தூண்டுகின்றன. எனவே இப்பதிவு இங்கு வருகை தந்த (தரும்) நண்பர்களுக்கான “SPECIAL" பதிவு. (பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தியவர்களுக்கும், மெளனப்பார்வையாளர்களாகவே இருந்து ஆதரவு கொடுப்பவர்களுக்கும் மற்றும் அனைவருக்காகவும்).

   நான் மிகவும் ரசித்துப்படித்த காமிக்ஸ்-களைப் பற்றிய கருத்துக்களை எனது பார்வையில் தங்களுக்கு வழங்கலாம், என்ற முறையில்  எனது முதல் “விமர்சனப்பதிவு”-யைத் துவக்குகிறேன்.சென்ற ஆண்டு நாம் படித்து ரசித்திட்ட “விரியனின் விரோதி”-தான் எனது முதல் களம் (கதை என்பதைவிட களம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து).


   “சூழ்நிலைதான் ஒரு மனிதனை உருவாக்குகிறது” என்பது எத்தனை நிஜம் என்பதை பல சந்தர்ப்பங்களில் நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் உணர்ந்திருப்போம்.அவ்வாறு  சூழ்நிலையின் காரணமாக கொலையைத் தன் தொழிலாக ஏற்றுக்கொண்ட ஒரு ‘தொழில்முறைக் கொலையாளி’-யின் கதைதான் “விரியனின் விரோதி” (The Mongoose). XIII,ஸ்டீவ் ரோலாண்ட், கர்னல் ஆமோஸ், சார்ஜெண்ட் ஜோன்ஸ் என பலதரப்பட்ட கதாப்பாத்திரங்களையும், XIII கதைதொடர் என மற்ற அனைத்தையும் மறந்துவிட்டு, “த மங்கூஸ்” என்றறியப்படும் வஞ்சிக்கப்பட்ட தொழில்முறைக் கொலையாளி ஒருவனைப்பற்றிய கதையாக, என் விமர்சனத்தைப்பதிவிடுகிறேன்.

த மங்கூஸ்
   Flashback - யுக்தியில் சொல்லப்படும் இக்கதையை பொதுவாக “க்ஷ்ரைனர் - ஜான் ஸ்மித் - த மங்கூஸ்” என மூன்று EPISODE - களாக பிரித்துக்கொள்ளலாம்.
I).க்ஷ்ரைனராக வேப்பருடன்.
II).க்ஷ்ரைனராக ஹான்ஸிடம் சென்று ஜான் ஸ்மித்தாக மெருகேறுவது.
III).ஹான்சிடமிருந்து முழுமையாக மங்கூஸாக உருப்பெறுவது. 



க்ஷ்ரைனர் - வேப்பர்
   அக்டோபர் 08,1947-ல் பெர்லினில் இரக்ஷ்யர்கள் ஆக்ரமித்துக்கொண்டிருந்த பகுதியில் கதை ஆரம்பமாகின்றது. தச்சர் வேபரின் பராமரிப்பில் வளர்கிறான் க்ஷ்ரைனர் (யுத்தத்திற்கு முன்னராக ஒரு அனாதைகள் அமைப்பின் மூலம் வேபரிடம் ஒப்படைக்கப்படுகிறான் க்ஷ்ரைனர்).சொந்த மகனைப்போல் க்ஷ்ரைனரிடம், வேபர் காட்டிய அன்பும்-அரவணைப்பும், அவர் மீது விவரிக்க இயலாத பாசத்தையும், பக்தியையும் க்ஷ்ரைனருக்குள் கொண்டுவருகிறது.


   க்ஷ்ரைனரின் வாழ்வில் மாற்றத்தைக்கொண்டுவரும் நாளும் உதயமாகின்றது.ரக்ஷ்யர்களால் வேபரும்,க்ஷ்ரைனரும் தாக்கப்பட உதவிக்கு வந்து சேர்கிறார் ஹான்ஸ்.மூன்று கொலையில் முடிந்த அந்த நிகழ்வு தற்செயலானது அல்ல என்பதும்,வேபர்தான் சூழ்நிலையின் உக்கிரம் புரிந்துகொண்டு தற்காப்புக்காக ஹான்ஸை அமர்த்தியிருக்கிறார் என்பதும் பின்னாட்களில் க்ஷ்ரைனருக்கு தெரிய வருகிறது.ஹான்ஸின் செயல்வேகமும், அவர் எதிரிகளைக்கையாண்ட விதமும் க்ஷ்ரைனரை வெகுவாகக் கவர்கின்றது.தன் வாழ்க்கைப்பாதையை மாற்றப்போவது ஹான்ஸ்-தான் என்ற உண்மை க்ஷ்ரைனருக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லைதான்.
      அங்கிருக்கும் பொருட்களைக்கொண்டே ஹான்ஸ் எதிரிகளைச்சமாளித்த விதம் சிறுவனான க்ஷ்ரைனரை வியப்பில் ஆழ்த்துகிறது.  “சில்லரைப் பொறுக்கிகள்தானே . . . ? கோழியை அடிக்க குறுந்தடி எதற்கு? என்று நினைத்தார் போலும் . . . ! ஹான்ஸ் இங்கே வந்தபோது எதையுமே எடுத்துக்கொண்டு வரவில்லை.ஹாய்யாக கையை வீசிக்கொண்டுதான் வந்திருந்தார். . . .” என்று ஹான்ஸைப் பற்றிய க்ஷ்ரைனரின் வர்ணனை, ஹான்ஸ் அவன் மீது ஏற்படுத்திய தாக்கத்தையும் ஹான்ஸின் மீதுள்ள அபிமானத்தையும் பிரதிபலிக்கின்றது.தேவையான சூழ்நிலையில் கிடைத்தப்பொருட்களை ஆயுதமாக்கிக்கொள்ளும் லாவகமும்,நுணுக்கமும் க்ஷ்ரைனருக்கு அப்போதே உரைப்பது கதாசிரியராலும்,ஒவியராலும் நளினமாக அடிக்கோடிடப்படுகிறது.

   பிரச்சினையின் உக்கிரம் தீவிரமாகவே, க்ஷ்ரைனரை 300 டாலர்கள் செலவு செய்து அமெரிக்காவிற்கு அனுப்புகிறார் வேப்பர்.தான் அங்கே காலூன்றியதும் வேபரை அழைத்துக்கொள்வது என்கிற வாக்குறுதியுடன் அமெரிக்கா செல்கிறான் க்ஷ்ரைனர்.கட்டிட வேலை செய்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் க்ஷ்ரைனருக்கு, வேபரிடமிருந்து அவசர தொலைபேசி அழைப்பு வருகின்றது, “இவர்களுடைய ஆயுதங்களைப் புதைத்து விடுங்கள், குறிப்பாக விற்க முயற்சிக்காதீர்கள்... மாட்டிக்கொண்டுவிடுவீர்கள் . . . !” என்ற ஹான்ஸின் எச்சரிக்கையை மீறி, துப்பாக்கியை விற்று 300 டாலர்கள் பெற்றதன் விளைவாக 3 ரக்ஷ்யர்கள் பற்றிய உண்மை வெளிவர வேப்பர் தேசத்துரோக வழக்குப்பதியப்பட்டு குற்றவாளியாகின்ற உண்மை க்ஷ்ரைனருக்குத் தெரியவருகின்றது.
   அதிகாரிகளுடனான பேரம் டாலர்களில் பேசப்படுகின்றது.கிடைக்கும் வருமானம் சொற்பமே. பணம் . . . ! குறுகிய காலத்தில் பணம், சம்பாதிப்பதற்கான வழி. . . ? க்ஷ்ரைனர் அதிகம் யோசிக்கவில்லை.காலம்...! அது திட்டமிட்டபடி  அவனை “ஹான்ஸ்”-சிடம் இழுத்துச்செல்கின்றது.க்ஷ்ரைனரின் யோசனையெல்லாம் ‘வேபர்’  விடுதலைப்பற்றியும் - அதற்கான டாலர்களைப் பற்றியுமே இருந்தது.

க்ஷ்ரைனர் - ஹான்ஸ் - ஜான் ஸ்மித்
    வேபரின் வழிகாட்டுதலின்படி, ஹான்சின் வழக்கமான வழிமுறைகளைக் கண்டறிந்து அவனைச் சென்றடைகிறான் க்ஷ்ரைனர்.தனது தேவைகளைப்பற்றியும்,நீ செய்த குற்றத்திற்கு வேப்பர் தண்டனை அனுபவித்து வருகிறார் என்றும் இன்னும் சிலபல வாக்குவாதங்களின் முடிவில் ஹான்ஸ், க்ஷ்ரைனரை தனது சிக்ஷ்யனாக ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்குகிறது.(ஹான்ஸ் தொழிலை விரும்பி விடவில்லை என்பதும்,தான் இழந்த ஒரு கையாக க்ஷ்ரைனரை பயன்படுத்திக்கொள்வதும் க்ஷ்ரைனர் விரும்பியதும் அதைத்தான் என்பதும் கதையின் போக்கில் சொல்லப்படுகிறது).


 தொடரும் நாட்களில் தொழிலின் ஆட்ட விதிமுறைகளை ஒவ்வொன்றாக கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கிறார் ஹான்ஸ்.
1.முதல் கொலை - பயத்தைப்போக்கும் 
  முதல் கொலை முடிந்த அன்றிரவே க்ஷ்ரைனர் தன் தலைமுடியை நீக்கிவிட்டு மங்கூக்ஷின் பிரத்யேக அடையாளமான மொட்டைத்தலைக்கு மாறுகின்றான்.
2.கிக்-பாக்சிங்
  கிக்-பாக்சிங்’கில் கடும்பயிற்சி தரப்பட்டது.விரியன்களையும் வெற்றிபெறலாம் இரைக்கும்-வேட்டையனுக்குமிடையேயான மெல்லிய வேற்றுமையான “மரண பயத்தை” புரிந்துகொண்டால் என்கிற அறிவுரையோடு.
3.சுடும் பயிற்சி
 வயலின் வாசிப்பது போன்ற அன்றாட நிகழ்வாக இருக்க வேண்டும் என்ற கட்டளையுடன் சுடுவதில் கடும் பயிற்சி தரப்படுகிறது.
4.அடிப்படை நிபந்தனைகள்
  எதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்,கட்டிடக்கலை, மனித உடற்கூறு, எந்த ஒரு சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் லாவகம் என இன்னும் பல வழிமுறைகளில் பயிற்சி தொடர்கிறது.பயிற்சியின் முடிவில்  “நீ ஒரு தொழில்முறைக்கொலையாளி ஆதாயம் தரா எந்தவொரு கொலைமுயற்சியிலும் நீ ஈடுபடக்கூடாது” என்கிற அடிப்படை நிபந்தனையுடன் க்ஷ்ரைனர் பயிற்சியில் தேர்ந்ததாக ஹான்ஸ் அறிவிக்கிறார்.(இந்த அடிப்படை பாடம்தான் கப்பலில் ‘கிம் ரோலண்டை’ உயிருடன் விட்டுச்செல்ல மங்கூஸைப் பணிக்கிறது).


  க்ஷ்ரைனரின் புது அவதாரம் ஜான் ஸ்மித்தாக ஆரம்பமாகிறது.எண்ணற்ற வாடிக்கையாளர்கள், பலதரப்பட்ட காரணங்கள், தடயமில்லா சம்பவங்கள், காரணங்களை கண்டறிய இயலா மரணங்கள்( இதுவே மங்கூஸின் அடையாளம்) என அவனுடைய வளர்ச்சி வாழ்வின் இருவேறு பக்கங்களை வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பைத்தருகின்றது.வெண்டியுடனான காதல் அறிமுகமானதும் இந்த காலகட்டத்தில்தான்.

ஹான்ஸ் - மங்கூஸ்
   ஹான்ஸிற்கு ஒரு பெரிய ஒப்பந்தத்திற்கான அழைப்பு வருகின்றது.அமெரிக்கா பிரஸிடெண்ட் க்ஷெரிடனைக்கொல்ல வேண்டும்,கூலியாக 2 மில்லியன் டாலர்கள் தொகை பேசப்படுகிறது.எவரையும் சபலப்படுத்தும் தொகைதான்...!முதல் முறையாக “கிம் ரோலண்டை” சந்திக்கிறான் மங்கூஸ். அவர்களுக்கு மங்கூஸ், ஹான்ஸ் மட்டுமல்லாது வேபர் உட்பட அனைத்து சங்கதிகளும் தெரிந்திருக்கின்றன(உபயம் - வெண்டி) . பணத்தைத்தவிர வேபரின் விடுதலையும் கூடுதல் ஆதாயமாக மங்கூஸ்க்கு கிடைக்கின்றது.இதை ஹான்ஸிடமிருந்து மறைக்கும் சூழல் மங்கூஸிற்கு உருவாகின்றது.


இவையனைத்துமே தங்களை சிக்க வைக்க பின்னப்பட்ட சதிவலை என்பதை உணருமுன் அனைத்துமே நடந்துவிட்டிருக்கிறது.
உண்மையனைத்தையும் உணர ஹான்ஸின் உயிரை விலையாக கொடுக்கவேண்டியிருக்கிறது.இழப்பைச்சரிகட்ட காரணமாணவர்களை பழிவாங்க புறப்படுகிறான் மங்கூஸ்.
ஒரு ரசிகனாக . . .
   ஒரு அகாலவேளையில் இரயில்வே ஸ்டேக்ஷனில் தன் முதல் கொலையை வெற்றிகரமாக முடித்து, யாருக்காக இந்த கொலைத்தொழிலுக்கு மங்கூஸ் நுழைகிறானோ,அவரே (வேபர்) மங்கூஸைப்பற்றிய உண்மையறிந்து இரயிலில் விழுந்து தன் உயிரை மாய்த்துக்கொள்வது விதியின் குரூர விளையாட்டு. . . ! வாழ்க்கையின் யதார்த்தம், எப்பேர்ப்பட்ட மனிதனையும் நெற்றிப்பொட்டில் அடிக்கும் என்று சொல்லாமல் சொல்கின்றது இந்த முரண். கதாசிரியருக்கு ஒரு க்ஷொட்டுக்கள்.

 “விதியின் குரூர விளையாட்டு”

 ஹான்ஸ் முதல் கொலைக்கு ஆயுதமாக கொடுத்தனுப்புவது “ஸ்குரு டிரைவர்”. (ஹான்சின் மதிநுட்பம் இந்த இடதில் கதாசிரியரால் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது - பெர்லினில் 3 ரக்ஷ்யர்களிடம் ஹான்ஸ் சண்டையிட்டுக்கொண்டிருக்கும்போது க்ஷ்ரைனர் தன்னை தற்காத்துக்கொள்ள பயன்படுத்துவது “ஸ்குரு டிரைவர்”-ஜத்தான்.கப்பலில் கிம் ரோலண்டிடம் நடக்கும் மோதலில் ரோலண்ட் தற்காப்பிற்காக மங்கூஸை தாக்க பயன்படுத்தும் ஆயுதம் வேறு என்றாலும் அதன் தாக்கம் முன்பு நடந்த சம்பவங்களை பிரதிபலிக்கிறது. ( அந்த தாக்குதலின் விளைவாகவும் மங்கூஸ் தான் இரை-யாக இருக்கும்போது இருந்த மனநிலை + அடிப்படை விதிகள் இவற்றையும் கருத்தில்கொண்டு கிம் ரோலண்டை உயிருடன் விட்டுச்செல்கிறான்).
இந்தக் கதையில் “ஸ்குரு டிரைவர்” கூட ஒரு கதாபாத்திரம் தான்.
மொத்தத்தில் காமிக்ஸ் ரசிகர்களுக்கான ஒரு விருந்து இந்த “விரியனின் விரோதி”(The Mongoose).இந்த புத்தகத்தைப்படிக்காதவர்கள் விரைவில் படிக்க முயற்சி செய்யுங்கள்.படித்தவர்கள் திரும்ப ஒரு முறை படித்துப்பாருங்கள்.இந்த புத்தகத்தை வாங்க விரும்புபவர்கள் இந்த இணைப்பை கிளிக் செய்யவும் “Viriyanin Virodhi Online Purchase".விரைவில் மீண்டும் ஒரு புதிய பதிவுடன் விரைவில் சந்திப்போம் நண்பர்களே. . . ! நிறை,குறைகளை சுட்டிக்காட்டுங்கள் நண்பர்களே.
- பயணம் தொடரும்.

Sunday, October 11, 2015

காமிக்ஸ். . . காமிக்ஸ். . .

              வணக்கம் நண்பர்களே, தங்களின் நல்லாதரவுக்கு நன்றிகள்.இப்பதிவில் நான் Design செய்த சில அட்டைப்படங்களை பதிவிடுகிறேன். இவற்றுள் சில நம் லயன் காமிக்ஸில் பின்னட்டைகளாக பிரசுரம் ஆகியுள்ளன.

 டேஞ்ஜர் டயபாலிக்:  நீண்ட நாட்களுக்கு பிறகு ‘டயபாலிக்’-கின் மறுவறுகை குறித்து ஆசிரியர் அறிவித்தார். அப்பொழுது சில Image-களை Download செய்து உருவாக்கிய டயபாலிக் புத்தக அட்டை.
இது எனது முழு அட்டைப்படம்



கேப்டன் டைகர்: தங்கக்கல்லறை படித்த பின்னர் போடப்பட்ட Design - கள் இவை.இன்றளவும் சி.ந.ப (உடைந்த மூக்கார்) மீது தீராக்காதல் உண்டு. சமீபத்திய வெளியீடான “மின்னும் மரணம்” Collectors Edition-யை ஒரு சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு அமர்ந்து ஒரே மூச்சாய் இரவு 11:00 மணிக்கு படித்து முடிக்கும்போது, மண்டையில் விழுந்த கொட்டின் வீக்கம் இன்னும் வடியவில்லை.

- பயணம் தொடரும் . . .