Saturday, August 19, 2017

காமிக்ஸ் சேகரிப்பாளனின் கதை - அன்றும் / இன்றும்

நண்பர்களுக்கு வணக்கம்,
        தபால்தலை, ரூபாய்நோட்டுக்கள் ஏன் "Brandy" பாட்டில் சேகரிப்பு கூட உண்டு.இதிலிருந்து “காமிக்ஸ்” அல்லது “காமிக்ஸ் சேகரிப்பாளன்”   எவ்வாறு வேறுபடுகிறான். காமிக்ஸ் மட்டுமே கண்களுக்கு மட்டுமல்லாது கற்பனைக்கும் சிறகுகள் தரவல்லது. ஒரு காமிக்ஸ் வாசகன் - சேகரிப்பாளன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.               “சித்திரக்கதைப்புத்தகம்” - ஒரு பழைய புத்தகவியாபாரி, இவ்வகை புத்தகத்தைப்பற்றிய ஞானமே இல்லாதவர், பள்ளி புத்தகத்தைத்தவிர வேறு புத்தகத்தையே தொடாத (தற்கால) சிறுவர்கள், பெண்கள்(அனைவரும் அல்ல - பெரும்பாலானோர்), படிப்பறிவில்லாத பொதுமக்கள், குப்பைப்பொறுக்கும் நபர்கள், ஏன் டீக்கடையில் பஜ்ஜி மடித்து கொடுக்கும் நபரிடம் கூட ஒரு காமிக்ஸ் புத்தகமோ அல்லது புத்தகத்தின் சில பக்கங்களோ கிடைக்கப்பெற்றால் முழுப்புத்தகமாக இருந்தால் அதைக்கிழிக்காமலும், பக்கங்கள் என்றால் தூக்கி எறியாமலும் பத்திரப்படுத்தி அதை புரட்டுவதோ, ஒரு சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு கொடுப்பதோ (குறைந்தபட்சம் வண்ணம் தீட்ட பயன்படுமே என்ற புரிதலுடன்) அல்லது மேலும் ஒரு படி சென்று அது சம்பந்தமான நபர்களிடம் சேர்ப்பிப்பதையோ நான் கண்கூடாக கண்டிருக்கிறேன், ஏன் எனக்கே கூட சில நபர்கள் “ஏம்ப்பா...! நீ கூட இந்த மாதிரி பொஸ்தகமெல்லாம் படிப்பியே,எங்க மொதலாளி வீட்ல எடைக்குபோட வச்சிருந்தாங்க மெனக்கெட்டு எடுத்தாந்தேன்! டீ-காபிக்கு எதுனா. . . ?” என்றபடிக்கு சில/பல புத்தகங்கள் கிடைக்கப்பெற்றிருக்கிறேன்( US - சென்ற அந்தப்பையன் வாழ்க பல்லாண்டுகள்).சித்திரக்கதைப்பற்றி தெரியாதவர்களுக்கே அதன்மேல் இவ்வளவு  ஈர்ப்பென்றால் அதையே சுவாசித்து வாழும் நம் காமிக்ஸ் அன்பர்களுக்கு எவ்வளவு காதலிருக்கும் இப்புத்தகங்களின்மீது.

சித்திரங்கள்-சித்திரக்கதைகள் மீதான ஈர்ப்பு நம்மவர்களுக்கு கொஞ்சம் அதிகமே,அதை மையல் என்றும் கூட சொல்லலாம்.புராதான குகை ஓவியங்கள், கோயில் சிற்பங்கள் முதல் இன்றைய “தினத்தந்தி-சிந்துபாத்” வரையான காலம் வரை ரசனைகளில் என்றைக்குமே நாம் தனித்துவம் மிக்கவர்கள்தான்.ஏன் சிந்துபாத்-யை மட்டும் குறிப்பிட்டு முன்மொழிகிறேனென்றால், தமிழ்நாட்டில் சிந்துபாத்தை தெரியாதவர்கள் இருக்க முடியுமா...? எனவே தெரிந்தோ தெரியாமலோ அனைவரும் சித்திரக்கதை ஞானம் பெற்றவர்களாகிறோம்.இல்லையென்றால் உலகின் எங்கோ ஓரிடத்தில் உருவாக்கப்படும் சித்திரக்கதைப்பொக்கிக்ஷங்களுக்கு தென் தமிழ்நாட்டில் இப்படிப்பட்டதொரு அருமையான ரசிகர் பட்டாளம் இருக்குமா என்ன...? ஆங்கிலத்தில் அழகாக சொல்வார்கள் “Die Hard Fans" - என்று, அப்படிப்பட்ட நம் காமிக்ஸ் சேகரிப்பாளர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.

இழப்பின் வலி:
     காமிக்ஸ் சேகரிப்பாளர்கள்,அது தொடர்புடைய நபர்களைத்தவிர வேறு நபர்களிடமிருந்து  காமிக்ஸ் பெரும்போது, நான் அவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி புத்தகம் எங்கிருந்து கிடைத்தது என்பதாகத்தான் இருக்கும்.எதற்காக கூறுகிறேனென்றால் “இழப்பின் வலி”-யை நான் நன்கறிவேன். ஒருமுறை எனது நூலக நண்பரொருவரிடம் எனது காமிக்ஸ் சேகரிப்பு அது தொடர்பான சில விக்ஷயங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.அப்போது அவருடைய நண்பரொருவர் காமிக்ஸ் சேகரிப்பாளரென்றும்,தற்போது புத்தகங்கள் தொடர்ந்து சேகரிக்கிறாரா என தெரியவில்லை எனவும் கூறினார். நானும் எதேச்சையாக “காமிக்ஸ் புத்தகங்கள் விற்பனைக்கு கிடைத்தால் தொடர்பு கொள்ளுங்கள் சார்,எனக்கு கட்டுபடியான விலை கிடைத்தால் வாங்கிக்கொள்கிறேன்” எனவும் கூறினேன்.எவ்வளவு தருவீர்கள் என்றவருக்கு பதிலாய் “அது புத்தகங்களைப்பொறுத்தது” என கூறிவிட்டு நகர்ந்தேன். வழக்கமான வேலைகளில் நாட்கள் நகர ஒரு புதிய எண்ணிலிருந்து தொலைபேசி அழைப்பு...! அழைத்தவர்  “நூலக நபர்” (அவருக்கு தொலைபேசி எண்ணைக்கொடுக்கத்தெரிந்த எனக்கு அவருடைய எண்ணை சேமிக்க தோணவில்லை - அன்றிலிருந்து இன்றுவரை புது நபர்கள் நட்பு ரீதியாக அறிமுகமாயின் முதலில் செய்வது தொலைபேசி எண் பரிமாற்றம் மற்றும் சேமிப்பு).
   
     அழைத்தரை ஒரு சில நொடிகளில் இனம் கண்டு “ஓ...! சார் எப்படி இருக்கீங்க?” என்ற வினவலுடன், “என்ன திடீர்னு போன் பண்ணிருக்காப்ல - எதாவது காமிக்ஸ் கிடைச்சிருக்குமோ...!” என்று நினைத்து முடிப்பதற்குள், “சார், காமிக்ஸ் கேட்டீங்கள்ள? ஒரு 30-35 புக் இருக்கு சார்...! வேணுமா...?” என்றார். நமக்கு சொல்லவும் வேண்டுமா என்ன “எப்ப சார்? இன்னைக்கு சாயந்திரம் பார்க்கலாமா...?” என்றேன். அவரும் சரி என்று பணத்திலேயே குறியாக இருந்தார். அன்றைய மாலை அவரை சந்தித்து புத்தகத்தை பெற்றுக்கொண்டேன். எவ்வளவோ போராடிப்பார்த்தும் புத்தகத்தின் மதிப்பைவிட  சற்று அதிகமான பணத்தைப்பெற்றுக்கொண்டே நகர்ந்தார் “நூலக நபர்” (வழக்கம்போலவே அதிக விலை கொடுத்து புத்தகங்கள் வாங்க வேண்டிய நிலை - புத்தகங்களை பார்ப்பதற்கு முன்னரே விலையை கூறியிருந்தால் கூட சற்று நிதானித்திருக்கலாம், புத்தகங்களைப்பார்த்த பின்னர் ஒரு காமிக்ஸ் காதலனுக்கு காமிக்ஸா...? - காசா...? எது முக்கியமாக தோன்றியிருக்குமென்பதை கருவிலிருக்கும் குழந்தைகூட கூறிவிடும்.ஹும்ம்ம்...!)

     செலவழித்தது கணிசமான தொகை என்றாலும், அப்புத்தகக்குவியல் ஏற்படுத்தும் மகிழ்ச்சிக்கு ஈடு-இணை ஏதுமில்லை என்பது திண்ணம்.ஆனால் பிரச்சனையின் ஆரம்பமே இந்தப்புள்ளிதான் என்பதை அப்போது நான் அறிந்திருக்க நியாயமில்லைதான்.மனிதனுக்கு சபலம் எங்கே விட்டது, ஓரிரு வாரங்களில் அவரை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. அலைபேசி எப்போதும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது.நான் அவரை கடைசியாக சந்தித்ததும்,பேசியதும் புத்தக பரிமாற்றத்தின்போதே.அன்றிலிருந்து மிகச்சரியாக ஆறு வாரங்கல் கழித்து “நூலக நபரி”-ன் பெயரைக்கூறிக்கொண்டு ஒரு புதிய அலைபேசி எண்ணிலிருந்து அழைப்புவந்தது. பேசிய நபரின் வார்த்தைகளைக்கேட்டு சற்று அதிர்ந்தேதான் போனேன், “என்ன சார்...? என் ஃபிரெண்ட் கிட்ட ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணிங்கன்னுதான் புக் கொடுத்தேன் ஒன்றை மாசமாகுது அவனும் சரியா ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டேன்றான், உங்ககிட்டருந்தும் புக் வர மாட்டேங்குது,நான் உங்க வரைக்கும் வர வேணாம்னுதான் நினைச்சேன் - என்ன பண்றது எல்லாமே கக்ஷ்டப்பட்டு சேர்த்து பாதுகாக்குற பொக்கிக்ஷம்...!” எனப்பேசிக்கொண்டே போனவரிடம்  “சார்? ஒரு நிமிக்ஷம்...! என் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சது...?” என்க, “ஏங்க! என்ன கேள்விங்க இது? நமக்கு முன்ன-பின்ன தெரியாது, என் ஃபிரெண்ட்தான் கொடுத்தான், ஏன்? புக்குக்கு சொந்தகாரன் போன் பண்ணான்னு தெரிஞ்சிருந்தா போனை எடுத்திருக்க மாட்டீங்களா...?” என்றவரிடம் குழப்பமும்,கோபமுமாக “சார் உங்க ஃபிரெண்ட் நம்பர் கிடைக்குமா?” எனக்கேட்க அவர் இன்னும் சூடாகி “நானே அவனைபிடிச்சு உங்க நம்பர் வாங்குறதுக்குள்ள போதும்-போதும்னு ஆய்டுச்சி, ஏதோ கேட்காதவன் புக்கு கேட்கிறானேனு கொடுத்தா ஒரு ஃபிரெண்ஸிப்பையே கட் பண்றளவுக்கா நடந்துகிறது...!” எனக் கூறியவரிடம்  “சார்! நான் கொஞ்சம் வெளியில இருக்கேன், நாளைக்கு காலைல நானே கால் பண்றேனே...!” எனக் கூற, அவரும் “சரி...! சரி...! நாளைக்கு கால் பண்றது இருக்கட்டும், நாளைக்கே புக்க கொடுக்கிற வழிய பாருங்க...!” எனக்கூறி போனை வைக்க எனக்கு தலை கிறுகிறுத்தது.
   
     பணம் போனால் போகட்டும், ஆனால் காமிக்ஸ்...? நம்பவைத்து ஏமாற்றிவிட்டார் என அவர் மீதும், இப்படி ஏமாளியாகி விட்டோமே என எனக்கே என் மீதும் ஆற்றாமையுடன் கூடிய கோபம் ஏற்பட்டது.ஏதேதோ சிந்தனைகள் மனதையும்-புத்தியையும் ஆக்கிரமித்து என்னை சுழலடித்துக்கொண்டிருந்தன.சிறிது நேரம் செல்ல-செல்லத்தான் ஒரு விக்ஷயம் எனக்கு பிடிபட ஆரம்பித்தது, அவரும் நம்மைப்போல ஒரு காமிக்ஸ் சேகரிப்பாளர் தானே அவருடைய நிலையில் நான் இருந்திருந்தால் இன்னும் மோசமாக நடந்துகொண்டிருப்பேன். புத்தகம் நமதில்லை என்றாகிவிட்டது, விடிந்ததும் முதல் வேலையாக புத்தகத்தை உரியவரிடம் ஒப்படைத்து விட வேண்டுமென முடிவுசெய்து உறங்கச்சென்றேன் - மோசமானதொரு இரவு.
   
     இன்றைய நாள் எனக்கு வழக்கமானதொரு நாளாக இருக்கப்போவதில்லை என்றாலும் - வழக்கமான பேப்பர் போடும் பையனின் சத்தத்தில் கண்விழித்த எனக்கு நேற்றிரவு நடந்த சம்பாக்ஷணைகள் அனைத்தும் கனவு போல் தோன்ற, மறுநொடி வந்த தொலைபேசி அலைப்பு அது கனவில்லை என்பதை பறைசாற்றியது.  “புக்க தான் கொடுக்குறோம்னு சொல்லியாச்சுல்ல அப்பறம் ஏன் இவ்ளோ காலைலே போன் பண்றார்...!” என எண்ணிக்கொண்டே போனை எடுத்து  “ஹலோ...! சொல்லுங்க சார்...?” என்க, மறுமுனையிலிருந்து எந்த பதிலும் இல்லை. “ஹலோ...! ஹலோ சார்...!” மறுபடியும் எந்த பதிலும் இல்லை. போனை அனைத்து, பின்னர் நானே அவருக்கு கால் செய்தேன் - அழைப்பு துண்டிக்கப்படும் நேரத்தில் போனை எடுத்த அவர் “தம்பி...! என்னை மன்னிசிடுங்க தம்பி...!” எனக்கூற,இதை சற்றும் எதிர்பார்க்காத  நான் ஸ்தம்பித்துப்போனேன். “சார்! எதுக்கு சார் பெரிய வார்த்தையெல்லம் பேசிக்கிட்டு, அது உங்க புக்.இடையில ஏதோ குழப்பம் நடந்துருச்சு, அதுக்காக நான் தான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கனும்...!? என்க, அவரும் விடாக்கண்டனாய் “விடுங்க தம்பி தப்பு பண்ணவனே அவன்பாட்டுக்கு கெடக்குறான், நாம மாறி-மாறி மன்னிப்பு கேட்டுகிட்டு இருக்கோம் சரி அதை விடுங்க,என்ன இருந்தாலும் நான் அப்படி பேசி இருக்க கூடாதுதான் இல்லையா...?” என்றவரிடம்  “சார், இன்னைக்கு உங்களைப்பார்த்து புக்க கொடுத்தடறேன் சார்,நாளைக்கு பெங்களூர் போறேன் வர இருபது நாள் ஆகும், அதுவுமில்லாம இன்னைக்கு நான் ஃப்ரீயாதான் இருக்கேன்...!” என்க “சரி தம்பி புக்கெல்லாம் படிச்சுட்டீங்களா..?” என்றார். “இல்ல சார்! கொஞ்சம் படிச்சுருக்கேன் - கொஞ்சம் பொரட்டிருக்கேன்...!” என்றேன். (இப்படி ஆகும்னு யார் நினைச்சது,நம்ம புக் எப்ப வேணும்னாலும் படிசுக்கலாம்னுதான தோனும் - என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.). “சரி தம்பி...! நீங்க படிச்சிட்டு மொத்தமாவே கொடுங்க,ஆனா கொஞ்சம் சீக்கிரம் கொடுங்க...!” என்றார். பேருக்கு சரி என்று தலையாட்டி வைத்தேன்.

     இருபது நாட்களின் கடுமையான வேலைப்பளு அவர் கொடுத்த புத்தகங்களின் வாசிப்பிலும், அவருடனான அலைபேசி உரையாடலிலும் எவ்வாறு கழிந்தது என்றே தெரியாமல் கழிந்தது.ஒருவழியாக அவரை சந்திக்கும் நாளும் வந்தது, எப்படியோ நிகழ வேண்டிய சந்திப்பு இப்படி அமைந்தது. அவருடைய புத்தகங்களுடன் அடையார் நூலகத்தின் வாசலில் காத்துக்கொண்டிருந்தேன். நெடுநாள் பழகிய நண்பனைப்பிரிந்து பின்னர் சந்திக்க நேர்ந்திடும் போது அதில் ஒரு அழகியல் இருக்கும் அவ்வாறான மனநிலையில் தான் இருவரும் இருந்தோம் என்றே கூறலாம். முன்/பின் சந்தித்ததில்லை என்பதால் குரலை வைத்தே அவரை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. அவரின் குரலை விட அவருக்கு வயது அதிகமென்பது அவரை பார்க்கும்போது தான் புலப்பட்டது. இருவரும் நெடுநேரம் உரையாடிக்கொண்டிருந்தோம் (அதையெல்லாம் விவரித்தால் அது அவருடைய சுயபுராணக்கதை ஆகிவிடுமென்பதால், நமக்கு என்ன தேவையோ அதை மட்டும் விவரிக்கிறேன்). அவருடன் பேசியதிலிருந்து அவர் வாழ்க்கையில் காமிக்ஸ் மட்டுமல்லாமல் பெரும்பாலான விஷயங்களில் ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்து இருக்கிறார் என தெரிந்தது. நெடுநேர உரையாடலின் இறுதியில் விடைபெரும்போது அவருடைய புத்தகங்களை அவரிடம் ஒப்படைத்தேன். புத்தகம் தாங்கிய பையை வாங்கிய அவர் ஏதோ சொல்ல யத்தனித்து பின் தயங்கியதை கண்டு “சொல்லுங்க சார்...!” என்றேன், “இல்ல தம்பி, வாழ்க்கைங்றது சாதரண விக்ஷயம் கிடையாது.இப்ப என்ன எடுத்துகங்களேன் எல்லாம் இருந்தும் ஒன்னும் இல்லாத மாதிரினு சொல்லுவாங்கல்ல அதுக்கு சிறந்த உதாரணம் நாந்தான்.புரியிர மாதிரி சொல்றேன் கேட்டுக்கங்க, நான் உங்ககிட்ட காட்டுன கோவம்,பாசம் எல்லாத்துக்கும் காரணம் நான் கிடையாது-என்னோட தனிமைதான். ரெண்டு பொண்ணு ஒரு பையன் எல்லாரையும் செட்டில் பண்ணி விட்டுட்டேன். பொண்ணுங்க அவங்கவுங்க வேலையப்பார்த்துட்டு இருக்காங்க,பையன் US-ல செட்டில் ஆய்ட்டான் அப்பப்ப பேசுவான்.என் மனைவி மூனு வருசத்துக்கு முன்னாடி போய்ட்டா...!” என்றவாறு கண் கலங்கினார். சிறிது நேர அமைதிக்குப்பின்னர் தொடர்ந்தார் “இதுக்குமேல இழக்கிறதுக்கு என் கிட்ட ஒன்னும் இல்ல தம்பி...! ஒரு விசயம் மட்டும் சொல்றேன் தம்பி புள்ளைங்களுக்கு பாசம்னா என்னனு புரியவச்சு வளங்க தம்பி” என்றவாறு புத்தகப்பையை கையில் வைத்து அழுத்தினார். “சார்...!” என்றேன் இது  “என்கிட்ட இருக்கிறத விட உங்ககிட்ட இருந்தா அதுக்கு ஆயுள் அதிகம்...!” என்றவாறு விடுவிடுவென நடையைக்கட்டினார்.

     காமிக்ஸ் சில நேரங்களில் வாழ்க்கையையும் கற்றுக்கொடுக்கின்றது என நான் உணர்ந்த தருணம் அது.

அன்றும் / இன்றும்:
                    நமது பால்யத்தை மீட்டெடுக்க ஒரு “காலயந்திரம்” கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், ஆம் நண்பர்களே நாம் உண்மையிலேயே அதிர்க்ஷ்டசாலிகள் தான் நாம் “காமிக்ஸ்” எனும் காலயந்திரத்தில் பயணம் செய்து நமது நினைவுகளின் மூலம் பால்யத்தை மீட்டெடுக்கிறோம்.அதற்காகவே பெரும்பான்மையான சேகரிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன. அதிகபட்ச காமிக்ஸ்கள் விற்பனை செய்யப்பட்ட அன்றைய நாளில் சேகரிப்பின் நிலையும்,இந்நாட்களில் சேகரிப்பின் நிலையும் எனது பார்வையில்...!

 • அன்றைய காமிக்ஸ் வாசகர்களை 1970 முதல் - 1980 முதல் - 1990 +1995 முதல்  என பொதுவாக மூன்று வகையாகப்பிரிக்கலாம். தற்போதும் விடாமல் காமிக்ஸ் வாசிப்பது-வாங்குவது இக்காலகட்டத்தினரே.இவர்கள் “காமிக்ஸ்” என்ற ஒரு வட்டத்திற்குள் கட்டுண்டு கிடக்காமல் சிறுவர்மலர் முதல் பொன்னியின் செல்வன் வரை பிரித்து மேயும் புத்தகப்புழுக்களாக சிக்குண்டு கிடப்பவர்கள்.புத்தகம் மற்றும் ஏனைய சில விளையாட்டுக்களைத்தவிர வேறு பொழுதுபோக்கு இல்லாத காரணமும் ஒன்று.
 • இன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்கிற்கா பஞ்சம்.அதையும் தாண்டி, தங்கள் வாரிசுகளை காமிக்ஸ் உலகிற்கு அழைத்துவர பெரும் பிரயத்தனப்படுவதும் இவர்களே.

 • காமிக்ஸ் உலகின் பொற்காலம் என கருதப்பட்ட 1980-களில் நாலாபக்கத்திலிருந்தும் முளைத்த காமிக்ஸ் பதிப்பகங்களின் மூலம் பலதரப்பட்ட காமிக்ஸ்கள் வெளிவந்தன. இன்றைய வாசகர்களில் 80 சதவீதத்தினர் அன்றைக்கு அரைநிஜார் போட்ட பள்ளி சிறார்களே.எனவே தொடர்ச்சியாக வாங்கும் புத்தகங்களைத்தவிர வெளியான பெரும்பாலான புத்தகங்கள் பட்ஜெட் காரணமாகவும், பள்ளிப்படிப்பு பாதிக்கும் என பேற்றோர்களின் அறிவுறுத்தலாலும் வாங்காமல் தவிர்க்கப்பட்டன.
 • அன்றைக்கு தவறவிட்ட ரூ.60 /- பைசா மதிப்புள்ள புத்தகங்களை இன்று ரூ.1000 கொடுத்து வாங்க தயாராக இருப்பதும் இவர்களே.என்ன இங்கு மட்டும் விற்பவருக்கும்-வாங்குபருக்கும் ஒரு சிறிய புரிதல் இருக்க வேண்டியது அவசியமாகிறது.


 • காமிக்ஸ் பரிமாற்றத்திற்கும், விற்பனைக்கும் ஆசிரியரே “BOOK MARKET” பகுதியினை ஆரம்பித்து வாசகனுக்கு உதவினார்.என்ன கடிதம் எழுதிவிட்டு காத்திருக்க வேண்டும்.பதில் கிடைக்க ஒரு வாரமென்ன ஒரு மாதம்கூட ஆகலாம்.பின்னர்தான் புத்தகம் நமக்கா இல்லையா என்பதே தெரியவரும்.இதைத்தவிர பெரும்பாலான வாசகர்களும் ஒருவருக்கொருவர் கடிதத்தொடர்பில் தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை ஆரோக்யமான முறையில் பரிமாறிக்கொண்டிருந்ததையும் நானறிவேன்.
 • இன்றைய நவீன காலகட்டத்தில் Mobilephone, Facebook Group, Whatsup Group என அனைத்தையும் நம் வாசகர்கள் சிறப்பாகவே பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் பெரும்பாலான புதிய வாசகர்கள் பயனடைகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. (புத்தகம் விற்பனை செய்பவர்கள் புத்தகங்களுக்குரிய நியாயமான விலையில் விற்பனை செய்வது நலம் / வாங்குபர்களும் அடிமாட்டு விலைக்கு புத்தகங்களை விலை பேசுவதையும் தவிர்க்கலாம்.) புத்தகங்களின் பராமரிப்பு செலவிற்கே மாதம் ஒரு தொகையாகும் என்பது அனைவரும் அறிந்ததே.


 • புத்தகங்களின் வெற்றி-தோல்வி பற்றிய நிலவரம் வெளியிடும் நிறுவனத்தின் அடுத்த புத்தகம்வரும்போதுதான் தெரியவரும்.
 • இன்றோ புத்தகம் வெளியான ஒரிரு நாட்களில் முழு விமர்சனமும் அனைவராலும் பகிரப்பட்டு பிரிண்டிங், மொழிபெயர்ப்பு, சித்திரத்தரம், விலை, கதையமைப்பு என அக்குவேர்-ஆணிவேராக பிரித்து மேய்ந்துவிடுகின்றனர் நம் வாசகர்கள். இது ஆசிரியரின் நேரடிப்பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு இந்தக்கதைத்தொடரை தொடர்வதா அல்லது முழுக்கு போடுவதா என உடனடி முடிவும் எடுக்கப்படுகின்றது.இது நல்ல மாற்றமே என்றாலும், ஒரு சில கதைத்தொடர்கள் ஓரிரு ஆல்பங்களுக்குப்பின்னரே சூடு பிடிக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 

 • எத்தணையோ நிறுவனங்கள் காமிக்ஸ் இதழ்களை வெளியிட்டாலும் முத்து காமிக்ஸ் தரத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கியது கண்கூடான உண்மை.என்ன ஒரு விசயம் அடுத்த மாதம் எந்த தேதியில் புத்தகம் வருமென்பது படைத்தவனே அறியாதது. பல மாதங்கள் புத்தகமே வெளிவராமல் இருந்ததுமுண்டு. புத்தகம் வந்திருக்கிறதா என்பதையறிய கால் செருப்புதேய கடைக்கு அலையவிட்ட பெருமை சிவகாசி சிங்கமுத்து நிறுவனத்தையே சேரும். 
 • வண்ணத்தில், மாதம் தவறாமல், பல நிறுவனங்களின் கதைகள், பல்வேறுப்பட்ட நாயகர்கள் என போட்டியே இல்லாமல் சிங்கம் சிங்கிளாக வலம் வந்து நம்மை மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. "PRINTRUN" - யை அதிகப்படுத்தி விலையை மட்டுப்படுத்தினால் வாசகன் இன்னும் மகிழ்வான்...!

 • அன்றைய விமர்சனம் கடிதம் வாயிலாக சென்றடைந்து,புத்தகம் வாயிலாக அனைவரின் பார்வைக்கு வரும்.அது காமிக்ஸ் வாசகர்களைத்தாண்டி அவர்களின் வீட்டினர் பார்வைக்கு செல்வதுகூட அரிதானது. மேலும் விமர்சனமென்பது புத்தகங்களின் மீது மட்டுமே இருக்கும்.
 • இன்றைய விமர்சனமென்பது "SOCIAL MEDIA"-க்களில் பகிரப்படுகிறது. இவ்விமர்சனங்கள் புத்தகங்கள் மீது மட்டுமல்லாமல் சில நேரங்களில் தனிமனித தாக்குதல்களாகவும் மாற்றம் பெருகின்றன.சில பதிவுகளுக்கு இடப்படும் "COMMENT"-கள், நாம் பொதுவெளியில் உரையாடுகிறோம் என்பதையும் தாண்டி அவரவரின் குணாதிசயத்தை பிரதிபலிப்பதாக இருந்துவிடுகிறது.ஒருவர் மணம் புண்படும்படியோ அல்லது தவறான வார்த்தைபிரயோகிப்போ நமது தரத்தை நாமே தாழ்த்திக்கொள்வதற்கு ஒப்பானதாகும். போர் புரியும் வேலையில் கூட அதற்கான ஒழுக்கத்தை கடைபிடிப்பது நமது தமிழர் நாகரிகம் மற்றும் பண்பாடு.

 • காமிக்ஸ் சேகரிக்க ஆரம்பித்த காலகட்டத்தில், என்ன ஒரு 10 முதல் 20 புத்தகங்கள் சேர்ந்து இருக்கும்.எடுத்து அடுக்கி வைத்து அழகு பார்த்துக்கொண்டிருப்பேன்,அம்மா கூட கேலி செய்வார்கள்.இதையெல்லாம் அடுக்க பிரத்யேகமாக இதற்கென்றே ஒரு அலமாரி செய்ய வேண்டும் என்ற ஆசை மீது கடவுளின் கருணைப்பார்வை இன்னமும் விழவேயில்லை. என்னிடம் 20 புத்தகங்கள் இருந்த போது இன்னும் நிறைய புத்தகங்கள் சேர்க்க வேண்டும் என்ற ஆசை எவ்வளவு இருந்ததோ, இன்று அதைவிட இன்னும் அதிகரித்துதான் இருக்கின்றது (அதற்காக உங்களிடம் எவ்வளவு புத்தகங்கள் உள்ளது என்று கேட்கக்கூடாது). 
 • இன்றைய காமிக்ஸ் வாசக வட்டம் என்பது பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துபரில் ஆரம்பித்து - ஃபாரின் சுற்றுலா போய் வரும்போது காமிக்ஸ் வாங்கி வருபவர்களையும் உள்ளடக்கியது.தற்போதைக்கு அவரவர் வசதிக்கேற்ப அவரவர் பொக்கிக்ஷங்களை  வாங்கியும்,பாதுகாத்தும் வருகிறோம்.
பதிவு நீண்டுகொண்டே செல்வதால் இப்பதிவின் தொடர்ச்சி வரும்காலங்களில் இடப்படும்.இப்பதிவின் தொடர்ச்சி சில ஆச்சரியங்களையும், அதிர்ச்சிகளையும் உள்ளடக்கியத்தாய் இருக்கும் என்பதை மட்டும் சொல்லி தற்போது விடைபெருகிறேன்.அதுவரை "HAVE A LOT FUN WITH COMICS".

குறிப்பு: நண்பர்கள் வெறும் மெளனப்பார்வையாளர்களாக மட்டுமல்லாது நிறை/குறைகளையும் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.நண்பர்களுக்கு நன்றிகள்.
  

Saturday, August 5, 2017

பெல்ஜியம் to ஈரோடு...! (ஒரு மினி பயணம் & பதிவு)

நண்பர்களுக்கு வணக்கம்,
ஒருவழியாக “இரத்தக்கோட்டை”யும் வெளிவந்துவிட்டது (அன்பளிப்பாக அறிவித்த “இரத்தக்கோட்டை” புத்தகம் எங்கே என்கிற நண்பர்களின் கேள்விகள் என் செவிகளை எட்டாமலில்லை, இந்த வார இறுதிக்குள் அதற்கான அறிவிப்பு உண்டாகும்.) ஈரோட்டில் நண்பர்கள்-ஆசிரியர் சந்திப்பு இனிதே நடைபெற்றது என்பதை அறியப்பெற்றோம்.இரத்தப்படலம், டெக்ஸ் வில்லர் ஒருசில மறுபதிப்புகள் பற்றிய அறிவிப்புகள் என விழா சிறப்பாக ஆரம்பித்திருக்கிறது.இருந்தாலும் “வேதாளர்” பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லையே என்கிறதொரு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.
ஒரு பெல்ஜிய காமிக்ஸ் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ்நாட்டில் இப்படிப்பட்டதொரு  ஏகபோக ரசிகர்பட்டாளம் இருக்குமென்பதை அதன் படைப்பாளிகளே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்நேரத்தில் “என் பெயர் டைகர்’’  இதழுக்காக நான் முயற்சித்த அட்டையை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


இரத்தக்கோட்டையை பற்றிய ஆசிரியரின் கருத்துடன் இப்பதிவை நிறைவு செய்கிறேன் கதையைப் பொறுத்தவரை - உங்களில் அநேகப் பேர் இதனை மனப்பாடமாக ஒப்பிக்கக் கூடியவர்கள் என்பதால் நான் பில்டப் என்று மொக்கை போடப் போவதில்லை ! மாறாய் - வண்ணத்தில், இந்த பெரிய சைசில் - உங்களின் ஆதர்ஷ நாயகரை ரசிக்கும் அனுபவத்தை இயன்றமட்டுக்கு நம்மோடு பகிர்ந்து கொள்ள மட்டுமே கோரிடுவேன் ! இந்த சாகசத்துக்குமே ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுப் பின்னணியுள்ளது என்பதை மட்டுமே நீங்கள் புதிதாய்த் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள் என்பேன் !

இந்த மெகா சாகசத்தை முதன்முறையாக ரசிக்கவிருக்கும் நண்பர்கள் நிச்சயமாய் மச்சக்காரர்களே ! அன்றைக்கு நியூஸ் பிரிண்டில் - கச்சா முச்சா என்ற frame அமைப்புகளில், கருப்பு-வெள்ளையில், பிரித்துப் பிரித்து நாங்களெல்லாம் ரசித்ததை இன்று நீங்கள் அழகாய், தரமாய், 'ஏக் தம்மில்' வாசிக்கப் போவது நிச்சயமாய் ஒரு அதிர்ஷ்ட அனுபவம் என்பேன் ! Happy Reading  guys !!”இதழைப்பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுவொரு மினி-பதிவே, சுவாரஸ்யத்துடன் மேலும் சில தகவல்களை சுமந்து வரும் அடுத்த பதிவுடன் நண்பர்களை விரைவில் தொடர்பு கொள்கிறேன். அதுவரை Happy Reading Folks...!.