Thursday, January 28, 2016

தங்கக்கல்லறை - கருப்பு & வெள்ளை நினைவுகள் . . . !

    “தங்கக்கல்லறை” நான் படித்த காமிக்ஸ் கதைகளில் ‘ULTIMATE' என்று இன்றளவும் என்னை எண்ணச்செய்யும் ஒரு அற்புதமான கதை. நான் காமிக்ஸ் வாசிக்க ஆரம்பித்த கொஞ்ச காலத்திலேயே எனக்கு வாசிக்க கிடைத்த இரண்டாவது கெளபாய் கதை, மட்டுமல்லாது எடிட்டரின் அருமையான மொழிபெயர்ப்பு, கதையின் ஆழம், சித்திரத்தரம் என  ஒட்டுமொத்தமாக  சிறப்பான புத்தகமாக “கேப்டன் டைகர்-இந்தியாவில் முதன் முறையாக” என்ற கம்பீரமான Caption - உடன்  என் (நம்) கையில் சேர்ந்த கதை.காமிக்ஸ் காதலர்கள் அனைவரது மனதிலும் “தங்கக்கல்லறை” நீங்கா இடம்பெற்றிருப்பதில் வியப்பேதுமில்லை.

தங்கக்கல்லறை I & II பாகங்களின் அட்டைப்படங்கள்

லயன் - முத்து காமிக்ஸ் அறிமுகமாகி தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வாசித்த கதைதான் தங்கக்கல்லறை என்றாலும்,அது ஏற்படுத்திய தாக்கம் ரசனையின் மற்றொரு பரிமாணத்தையும்,நான் காமிக்ஸ்-மேல் வைத்திருந்த ஒரு Image-யையும் ஒட்டுமொத்தமாக நொருக்கி “இதுதான்டா காமிக்ஸ் என்று எண்ணச்செய்தது”.

தங்கக்கல்லறை I & II பாகங்களின் காமிக்ஸ்-டைம் பக்கங்கள்

தங்கக்கல்லறையை  அச்சமயம் கருப்பு&வெள்ளை புத்தகத்தில் வாசித்ததற்கும், இக்காலத்தில் வண்ணத்தில் வாசித்ததற்குமான ஒப்பீடே இந்தப்பதிவின் முக்கிய நோக்கம்.அதற்கு முன்னர், நமது ஆசிரியர் “தங்கக்கல்லறை”-யின் மறுபதிப்பு + தரம் குறித்து சமீபத்திய 250-வது பதிவில்  நம்மிடம் பகிர்ந்துள்ள சில கருத்துக்களை படித்துக்கொள்வது நலம். எல்லாமே வெண்ணெய் பூசிய சாலைகள் மீதான பயணத்துக்கு சமானம் போலும் என்று ஒரு சின்னக் கனவு எனக்குள்ளே குடிபுகுந்திருந்த நாட்களில் தான் செவிட்டோடு விழுந்தது சாத்து  “தங்கக் கல்லறை“ ரூபத்தில்! ஒரிஜினலின் பக்கங்களில்  இருந்த பலூன்களைப் பெருசாக்கி, அதற்குள் நீள-நீள தமிழ் வசனங்களை அடைக்க முடியும் என்பதைக் கூட நானும், நமது DTP அணியினரும் அறிந்திருக்காப் பொழுது அது! தங்கக் கல்லறையின் நமது தமிழ் ஒரிஜினல் வசனங்களை வண்ணத்தில் அந்த பலூன்களுக்குள் அடைப்பது இயலாக் காரியம் என்பதை உணர்ந்த போதே அதனை rewrite செய்திட கருணையானந்தம் அவர்களிடம் அனுப்பியிருந்தேன்! அவரும் இயன்றளவு crisp ஆக எழுதி  சின்னதொரு குறிப்போடு எனக்கு அனுப்பியிருந்தார்! ‘நம் வாசகர்களிடம்  இரண்டு விதமான பாணிகளிலான ஒரே கதை இருக்கப் போகிறது! நிச்சயம் சந்தோஷப்படுவார்கள்‘ என்று ! அவர் அனுப்பிய ஸ்கிரிப்டை நான் மேற்கொண்டு rewrite செய்து  இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டுத் தயார் பண்ணி  இறுமாப்பாய் உங்களுக்குக் கூரியர் செய்த கையோடு இங்கே வலைப்பதிவின் முன்னே அமர்ந்து காத்திருப்பைத் தொடங்கினேன்! ஆனால் சீறி வந்ததோ ஒரு சாத்து மழை!! சும்மா தெளியத் தெளிய ஷிப்ட் போட்டு ஒரு வாரம் தொடர்ந்ததல்லவா மண்டகப்படி!! ‘என்னமாய் வசனத்தை மாற்றப் போச்சு?‘ என்று பொங்கிய நண்பர்களின் ஆத்திரத்தை என்னால் இன்றைக்கே முழுசுமாய் புரிந்து கொள்ள முடியாத நிலையில்  அன்றைய ‘கொழந்தைப் புள்ள‘ நாட்களில் கேட்கவும் வேண்டுமா? இன்றளவுக்கு எனக்கும், கருணையானந்தம் அவர்களுக்கும் அந்நாட்களது ஒரிஜினல் வசனநடையினை "காலத்தை வென்ற வரிகளாகப்" பார்த்திடவோ; புது version-ஐ கழிசடையாகக் கருதிடவோ துளியும் காரணங்கள் புரியவில்லை...!”. இந்தப்பதிவின் முழுவிபரங்களைக்கான “பயணமே பதிவாய்...”-யைக் காணவும்.

தங்கக்கல்லறை - கதைச்சுருக்கம்:
   எல்லாமே ஆரம்பிப்பது அரிஸோனா மாநிலத்தின் சிறுநகரமான பலோமிடாவில்-தான்.பணத்தாசை பிடித்த தங்கவேட்டையர்களை பிரஜைகளாகக்கொண்ட அந்நகரத்தில் ஜனங்களிடையே சட்டம் ஒழுங்கை பராமரிக்க மார்க்ஷலாக அனுப்பி வைக்கப்பட்ட யு.எஸ். இராணுவ அதிகாரிதான் நம்முடைய கதாநாயகன் கேப்டன் டைகர்.அவருடைய டெபுடிதான் குடிகாரன் ஜிம்மி.லக்னர், பார்னட்டிடம் வாங்கிய 250 - டாலரை திருப்பித்தராமல் ஏமாற்றியதாலும், தன்னுடைய தங்கச்சுரங்கத்தில் பாதி தருவதாக மேலும் ஏமாற்றுவதாலும் மதுபானக்கடையில் இருவருக்குமிடையே துப்பாக்கிச்சண்டை ஏற்படுகின்றது.டைகரின் தலையீட்டால் சண்டை முடிவுக்குவர, பாதுகாப்பைக்கருத்தில் கொண்டு லக்னரை கைது செய்து ஜெயிலில் அடைக்கிறார் டைகர்.இதற்கிடையே வெகுமதி வேட்டையர்களான கோலேவும்,வாலியும் லக்னரைத்தேடி வருகின்றனர்.பார்னட் கும்பலின் சூழ்ச்சியால் டைகர் நகரின் மறுமூலையில் சிக்கிக்கொள்ளகிறார்.இதற்கிடையே பார்னட் கும்பல் ஜெயிலை தகர்த்து லக்னரை பழிவாங்க முயற்சிக்கிறது. சூழ்நிலையையும் - ஜிம்மியின் பேராசையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறான் லக்னர். தனது திறமையினாலும் ஜிம்மியின் மதியூகத்தாலும் டைகர் உட்பட அனைவரது கண்ணீரிலும் மண்ணைத்தூவிவிட்டு,இருவரும் ஊரைவிட்டு வெளியேறுகின்றனர்.


கதையின் இறுதிக்காட்சிகள் நடைபெரும் “சூப்பர்ஸ்டிசன்” மலையின் எழில்மிகுத்தோற்றம்.
கேப்டன் டைகர், வாலி-கோலே மூவரும் அவரவர் வழியில் லக்னரையும்-ஜிம்மியையும் தேடிச்செல்வதில் ஆரம்பிக்கிறது  கதை.தங்களது இலக்கை அடையும் வரை அவர்களுக்குள் விதி விளையாடும் ஆட்டங்கள் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கும்.இச்சுவாரஸ்யத்தை புத்தகத்தை வாசித்தே பெற முடியும்.நமது பெரும்பாலான வாசகர்களால் கொண்டாடப்படும் இப்புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும்“தங்கக்கல்லறை - Online Purchase".

மறுபதிப்பு - ஒரு வாசகனின் எதிர்பார்ப்பில்:
  தங்கக்கல்லறை 1995-ம் வருட முதற்பதிப்பின்போதே வாசிக்க பாக்யம் கிடைத்த வாசகர்களுள் நானும் ஒருவன்.முத்து காமிக்ஸ் வரலாற்றில் முதன்முறையாக ஒரு கதையை இரண்டு பாகமாக வெளியிட்டனர்.படிக்க ஆரம்பித்த உடனேயே கதையின் போக்கில் உள்ள விறுவிறுப்பு நம்மையும் தொற்றிக்கொள்ளும் என்பதில் மாற்றுகருத்து கிடையாது.முதல் பாகத்தை முடித்ததும் அதன் கிளைமாக்ஸ் என்னவாகும் என சிந்தனையிலேயே இரண்டு மூன்று நாட்களை கடத்திவிட்டேன்.அந்த இரண்டு மூன்று நாட்களுக்குள் முதல் பாகத்தை ஒரு நான்கைந்து முறையாவது படித்திருப்பேன்(இன்றுவரை தங்கக்கல்லறை எத்தனை முறை மீள்வாசித்திருக்கிறேன் என்பது கணக்கிட்டு கூற முடியாத அளவிற்கு மீள்வாசித்தாயிற்று).புத்தகத்தை தருவிப்பதில் உள்ளூர் ஏஜெண்டின் தாமத்ததையும் சேர்த்து ஒன்றறை மாத இடைவெளியில் கிடைத்த இரண்டாம் பாகத்தை வாசித்து முடித்தவுடன்தான் நிம்மதியாயிற்று.எடிட்டரும் ஒட்டுமொத்த முத்து காமிக்ஸில் அவருக்கு பிடித்த கதைகள் என ஒரு பத்து புத்தகங்களின் பெயரை ஒரு இதழில் பட்டியலிட்டிருப்பார், அதில் முதல் இடம் தங்கக்கல்லறைக்குத்தான்.பெரும்பாலான வாசகர்களுக்கும் நினைவில் நின்ற கதைவரிசையில் டைகரின் இந்த Out & Out, Wild West சாகஸத்திற்கு நிச்சய இடமுண்டு.


    “தங்கக்கல்லறை” - நான் கையில் வைத்திருக்கும் புத்தகத்திற்கு வயது இருபது.இடைபட்ட காலங்களில் எத்தனையோ தடவை புத்தகத்தை வாசித்தாலும் கடுகளவும் சுவாரஸ்யம் குறையவில்லை. Internet பரவலான காலகட்டத்தில் கூகிலாண்டவரின் உதவியோடு வண்ணத்தில் இதன் ஆங்கில பதிப்பு வாசிக்கக்கிடைத்தது.பேராசை யாரைதான் விட்டது.என்னதான் வண்ணத்தில் - கணினியில் வாசித்தாலும் அந்த புத்தக வாசனையுடன், கையில் புத்தகம் தவழ, கண்கள் குளிர நமது தாய்மொழியில் வாசிக்கும் அனுபவமே வேறில்லையா...!?.ரூபாய்.10/-க்கு வந்துகொண்டிருந்த  நமது இதழ்களே ஒழுங்காக வருவதில்லை,இதில் விலை அதிகம்  என்கிற Complaint - வேறு.இந்த நிலையில் “த ங் க க் க ல் ல றை...... அதுவும் வண்ணத்தில்...... வெறும் பிதற்றலென்று  என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.இவ்வுலகம் ஒவ்வொரு நொடியும் ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் மாயலோகம் என்பது உண்மைதான் என எண்ணச்செய்யும் விதமாக நமது லயன் - முத்து காமிக்ஸின் வண்ணமிகு மறுவருகையும் நடந்தேறியது.அதே வேகத்தில் “தங்கக்கல்லறை” வண்ணத்தில்-மறுபதிப்பாக  என்ற முத்து காமிக்ஸின் அறிவிப்பையும் சேர்த்து.வழக்கமான அறிவிப்புடன் நின்றுவிடாமல் புதுப்பொலிவுடன் இதழும் கைக்கு வந்து சேர்ந்தது.இருபது வருடங்களுக்கு முன்னர் எதிர்பார்ப்பில்லாமல் படிக்க ஆரம்பித்து படித்து-ரசித்த தெரிந்த கதையை, எதிர்பார்ப்புடன் வண்ணத்தில் படிக்க ஆரம்பித்தேன். வாசித்து முடிக்கும் போது ஏதொவொன்று குறைவதாக தோன்றியது. நமது ரசனையின் எல்லைகள் மாறிவிட்டதோ...! என்ற நினைப்பில் சிறிய சஞ்சலம் தட்டவே முதற்பதிப்பை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.It's always rock to read...!.இரண்டு பதிப்பும் வாசித்தவர்களுக்கே இரண்டுக்குமுள்ள வித்தியாசங்கள் அர்த்தப்படும்(வசனத்தில் ஆசிரியரின் பங்கு எவ்வளவு முக்கியமானதென்று). நேரடியாக வண்ணத்தில் வாசிக்க வாய்ப்பு கிடைத்தவர்களுக்கான அனுகூலம் முழுக்கதையையும் ஒரே தொகுப்பாக கிடைத்ததுதான்.இப்பொழுதும் நான் புத்தகக்காட்சிக்கு செல்லும்போதெல்லாம் முதலில் நான் கையில் எடுப்பது தங்கக்கல்லறையின் பிரதிகளைத்தான்.புதிய நண்பர்களுக்கு பரிசளிக்க எப்போதும் ஒரு 5 பிரதிகளாவது என் கையில் வைத்திருப்பேன்.இம்முறை பொங்கல் புத்தகக்கண்காட்சிக்கு சென்றிருந்தபொழுதும் நான் தேடியது தங்கக்கல்லறை பிரதிகளைத்தான், கண்காட்சிக்கு கடைசி தினம் என்பதால் ஸ்டாலில் Out of Stock.


   நான் விரும்புவதெல்லாம் மறுபதிப்பாகும் புத்தகங்கள் தரத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்குமென்பதே. தற்போதைய மும்மூர்த்திகளின் மறுபதிப்புத்தரம் நன்றாகவே உள்ளது. ‘கார்ஸனின் கடந்தகாலம்’ என்னால் ஜீரணிக்கவே இயலவில்லை. ஒரு பக்கத்திற்குள் நான்கு Image-களைப் பொருத்த முயன்று பக்கங்கள் முழுவதும் இழுத்தது போன்ற வடிவமைப்பில் ஒட்டுமொத்தமாக சொதப்பலான முயற்சியாக ஆகியிருந்தது. கதைத்தேர்விலும், புத்தக வடிவமைப்பிலும். குறைவான விலையிலும் நம்மை திருப்திபடுத்தும் ஆசிரியர்  இதுமாதிரியான விக்ஷயங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியம்.மீண்டுமொரு சுவாரஸ்யமான பதிவுடன் சந்திப்போம் நண்பர்களே.
- பயணங்கள் தொடரும்.

Thursday, January 14, 2016

மேக்னஸ் - ஒரு சித்திர சகாப்தம்


                    தீபாவளி இதழை வாசித்ததிலிருந்தே ஓவியர் மேக்னஸ் பற்றிய ஒரு பதிவிட வேண்டும் என்ற எண்ணவோட்டம் மனதோரம் ஒரு சாரலாய் தூறிக்கொண்டே இருந்தது.அதன் விளைவே இந்தப்பதிவு “மேக்னஸ் - ஒரு சித்திர சகாப்தம்”. மேக்னஸின் சித்திரத்தின் ஆழத்தைப்பற்றியும், தரத்தைப்பற்றியும் நான் இன்னொருமுறை விவரிக்க வேண்டியதில்லை.புத்தகத்தை வாசித்தவர்களுக்கும்,வைத்திருப்பவர்களுக்கும் தெரியும் அது எவ்வளவு பொக்கிக்ஷமானது என்று.


ஓவியங்கள் ஏன் ஓவியமாகின்றது: 
 ஓவியங்கள்தான் என்னை சென்னை கொண்டுவந்து சேர்த்தது.சிறு வயதிலிருந்தே ஏதாவது வரைந்துகொண்டே இருப்பேன்.நான் வரைவதைப்பார்த்த எனது அப்பாவின் நண்பர் ஒருவர் “உங்க பையனை சென்னைல ஓவியக்கல்லூரில சேர்த்துவிடுங்க, பய நல்லா படம் போடுறான்” என அப்பாவிடம் சொல்ல, அவரும் பார்க்கலாம் என்று சொல்லி வைத்தார்.பின்னாட்களில் திரைப்பட இயக்குனராவதுதான் லட்சியம் என்ற வெறியோடு ஒருவழியாக சென்னை வந்து சேர்ந்தேன். சென்னைக்கு வந்த புதிதில் அடையாறில் தங்கியிருந்தேன், கொடைக்கானலின் அமைதிக்கும்-சுகாதாரத்துக்கும் சற்றும் பொருத்தமில்லாத நேர்மாறான சென்னையின் சுற்றுசூழலமைப்பு  என்னை  கொஞ்சம் திணறடிக்கத்தான் செய்தது.நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக  சென்னையையும் அது அறிமுகப்படுத்திய மனிதர்களையும் புரியக்கற்றுக்கொண்டேன்.கணக்கிலடங்கா ஓவியர்களுடனும் அறிமுகமாகி பழகிக்கழித்தாயிற்று.சிலபேரை மறக்கமுடியாது, மன்னிக்கவும் மறக்கவேமுடியாது.

  •  Watchman-ஆக அறிமுகமாகி சிறந்த ஓவியனாக புரிந்து-தெரிந்து கொண்டு அதை வெளியுலகிற்கு கொண்டு வரும் முன் இறந்துபோன பாண்டி அண்ணாவிற்கு அவரிடம் ஒரு அசாத்திய திறமை இருப்பது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை,நெருங்கிப்பழகியவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்பிருந்தது.
  • அடையாறின் இந்திரா நகர் நூலகத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம். ஒரு நாள் வழக்கமாக நான் கடந்து செல்லும் வழியிலுல்ல சுவர் வழக்கத்தை மீறி என் கவனத்தை ஈர்த்தது,காரணம் எப்போதும் அழுக்காக காணப்படும் அந்த சுவரில் கரித்துகள்களாலும்,சோப்புக்கட்டிகளாலும், சாக்பீஸ் துணுக்குகளையும் கொண்டு தென்னைமரம், ஒரு சிறிய பாலம், ஒரு அழகிய குடிலை உள்ளடக்கி சூரிய உதய Lighting-உடன் கூடிய இயற்கைக்காட்சி ஓவியம் மிக நேர்த்தியாக வரையப்பட்டிருந்தது.அந்த ஓவியத்தை வரைந்த நபரை சந்திக்க விரும்பி தேடத்தொடங்கினேன். ஆங்காங்கே அவ்வப்போது சில  சுவர்களில் திடீரென்று தோன்றும் இந்த ஓவியங்கள் யாரால் எப்போது வரையப்படுகின்றது என்பது பார்க்கும் அனைவருக்கும் பொதுவான கேள்வியாக இருந்தது. தேடும்போது கிடைக்காமல் யதார்த்தமாக ஒரு நாள் ஒரு ஆதரவற்ற சுவரை தன் இயற்கை காட்சியால் அழகுபடுத்த தயாராகிக்கொண்டிருந்த அந்த கலைஞனையும் சந்திக்க நேர்ந்தது.(நான் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் சந்திப்பு . . . !)அவன் ஓவியத்தில் இருந்த நேர்த்தி அவனிடமுமில்லை, கிழிந்த அவன் உடைகளிலுமில்லை - அவன் கண்களைத்தவிர.அந்த கலைஞன் ஓவியம் வரைய சுவர்களை சுத்தப்படுத்தியது ஒரு தாய் மண்ணில் விளையாடிய தன் குழந்தையை, புத்தாடை அணிவிப்பதற்காக நீரில் கழுவி தயார்படுத்துவதை போலிருந்தது.வரைந்து முடிக்கும்வரை மொளனித்திருந்தேன். அதே ஓவியம், நிறக்கலப்பில் மட்டுமே வித்தியாசம். அதே நேர்த்தியுடன் ஒரே ஓவியத்தை பல தடவை எந்தவித அலுப்புமில்லாமல் அவரை வரையத்தூண்டுவது எது? அவரிடம் பேச முயன்று தோற்றுப்போனேன்.அவருக்கு ஏதாவது பண்ணவேண்டும் என்ற எண்ணம் உந்தித்தள்ள ஒரு நூறு ரூபாயை எடுத்து அவரிடம் நீட்டினேன், என்னையும்-பணத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார்.ஏறத்தாழ இரண்டு நிமிடங்கள் நீடித்த இந்த நிகழ்வை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்தவனாய், பணத்தை கையில் மடித்துக்கொண்டு குற்றவுணர்ச்சியுடன் விருவிருவென நடையைக்கட்டினேன் . எதிர்ப்பட்ட டீக்கடையில் ஒரு டீ வாங்கிக்கொண்டு வேகமாக அவரிடம் கொடுக்க வந்தேன்- அவரில்லை, சுவற்றில் அந்த கலைஞன் விட்டுச்சென்ற கலையின் மிச்சம் அத்தனையும் என்னைப்பார்த்து  ஏளனம் செய்வதான பிரம்மை இன்னமும் என்னைவிட்டு நீங்கவில்லை.
  • கோடீஸ்வரக்கடவுள் ஏழுமலையானை பலவண்ணங்களில் ராயப்பேட்டை மருத்துவமனை பேருந்து நிருத்தத்தில் கொண்டு வந்து நிருத்திருந்தார் ஓவியர் சாமி. “எங்கப்பா சாமி படம் போடுறவரு,ஊருல இருக்கிறதுல முக்காவாசிபேரு வீட்ல அவரு வரஞ்ச படந்தான் இருக்கும்.அவருட்டர்ந்து கத்துகிட்டதுதான் இதெல்லாம்.இதுலதான் பொழப்பு ஓடிட்ருக்கு, என்ன ஒரே வித்தியாசம் எங்க அப்பனாரு சாமிய வீட்டுக்குள்ள கூட்டிபோனாரு நான் ரோட்டுக்கு கூட்டியாந்திருக்கேன் அவ்வளவுதான்”.என்றவரிடம் “ஏன் நீங்க உங்கப்பா பண்ணதையே பண்ணலாமே? என கேட்க, “எங்க தம்பி ஃபிளெக்ஸ்ன்றான் - பிரிண்டிங்றான், முன்ன மாதிரி இல்ல தம்பி...!” என்று கூறிவிட்டு, ஏதோ மறந்தவராக “ரோட்ல போட்ருக்கேனே இந்த படம் படமாதான் தெரியுதில்லையா ஏன்?” தெரியாது என்று தலையசைத்து வைக்க “பணம் சம்பாரிக்கத்தான்” என்றார் பெருஞ்சிரிப்புடன்.
  3D படம் வரையும் ராம்தாஸ் அண்ணன்,கஞ்சா அடிக்க காசு சேர்க்க 'Portrait'-வரையும் கொடைக்கானல் தாமஸ் அண்ணன், சுவரில் கட்சித்தலைவர்களை வரைந்து கொண்டே “பிக்காஸோவைப்”-பற்றி பேசும் ஆறுமுகம் என பட்டியலிட்டால் எழுதிக்கொண்டே போகலாம்.மேக்னஸைப்பற்றிய பதிவில் இவர்களைப்பற்றி நான் குறிப்பிட்டதற்கு காரணம், இவர்களும் ஓவியர்கள் என்பதோடு - என்னுள்ளான இவர்களின் தாக்கம் தான்.

எமனின் வாசலில் (La Valle Del Terrore):
      புத்தகத்தை திறந்ததும் நேராக படிக்க ஆரம்பித்தது “எமனின் வாசலில்”-கதையைதான், காரணம் மேக்னஸ்.கதையொன்றும் ஆஹா-ஓஹோ ரகமில்லையென்றாலும், பக்கத்திற்கு பக்கம் மேக்னஸின் அபார உழைப்பால் இழைக்கப்பட்டிருப்பதென்னவோ! மறுக்க இயலாத உண்மை.

            வழக்கமான டெக்ஸ் கதை.ஒற்றை வரியில் சொல்வதானால் “எச்சரிக்கை முத்திரை குத்தப்பட்டு  அதன் தொடர்ச்சியாக எச்சரிக்கப்பட்ட நபர்கள் கொல்லப்பட்டுவரும் ஒரு பள்ளத்தாக்கின் மர்மத்தை வில்லரும் - கார்ஸனும் கட்டவிழ்ப்பதே கதை”.இக்கதையின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அவ்வளவு அழகாக செதுக்கப்பட்டிருக்கும்.

மேக்னஸின் கைவண்ணத்தில் “எமனின் வாசலில்”- கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்.


         எமனின் வாசலில் - தனிப்புத்தகமாக Hardbound அட்டையில் வெளியிட்டு மேக்னஸிற்கு நியாயம் செய்திருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.மேக்னஸ் இறந்தும், புத்தகம் வெளியாகியும் இருபது வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் நம் கையில் வாசிக்க கிடைத்திருக்கிறது.இதே வேளையில் மேக்னஸின் இருபது வருட நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக அவரது பல்வேறு - கிட்டத்தட்ட 140 விதமான படைப்புகளின் கண்காட்சி 2015 டிசம்பர் 22 முதல் 2016 ஜனவரி 06 வரை  இத்தாலியில் நடைபெற்று முடிந்திருக்கிறது.
மேக்னஸின் தூரிகை ஜாலம்

இக்கதையின் சித்திரங்களை முடிக்க  மேக்னஸிற்கு முழுதாக ஏழு வருடங்கள் ஆகியிருக்கின்றது.கல்லீரல் புற்றுநோயுடன் போராடிக்கொண்டிருந்தவர் 1996-ம் ஆண்டு, அதாவது புத்தகங்கள் வெளிவருவதற்கு சில மாதங்கள் முன்னராக காலமானார்.எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் தமது படைப்பின் மூலம் வலம் வரும் மேக்னஸ் நம் மனதிலும், உலக காமிக்ஸ் ரசிகர்கள் மனதிலும் என்றென்றும் வாழ்வார் அதுவே அவரது சாதனையும் கூட.RIP-MAGNUS.

மேக்னஸிற்கு நமது வாசகர்களின் சார்பாக டெக்ஸ் வில்லர் - கார்ஸனின் அஞ்சலிகள்.

- பயணங்கள் தொடரும்