Saturday, February 27, 2016

வேதாளர் - நினைவில் நீந்தும் கனவுகள்

எனது பால்யம் முழுவதும் சித்திரக்கதைகளால் நிறைந்திருந்தது.எனது வாசிப்பு வாயிலின் திறவுகோள் சித்திரக்கதைகள் என்றால் மிகையாகாது.சித்திரக்கதைகளை தொடர்ந்து வாசிக்க வேண்டுமென ஆர்வமேற்படுத்தியது முகமூடி வீரர் மாயாவியே.ராணி காமிக்ஸின் “இரும்புக்கூண்டு” என்ற கதைதான் நான் வாசித்த முதல் வேதாளர் கதை. முத்து மற்றும் இந்திரஜால் காமிக்ஸ் பரிச்சயமாகாத அந்நாட்களில் முதல் அறிமுகம் “முகமூடி வீரர் மாயாவி” என்றான பின்னே, மற்ற காமிக்ஸ்களின் அறிமுக காலகட்டத்தில் மாயாவியை - வேதாளராக ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது.தற்போதும் என் மனதில் வேதாளரை விட அதிக ஆதிக்கம் செலுத்துவது  முகமூடி வீரர் மாயாவியே (ராணி காமிக்ஸ் மூலம் காமிக்ஸ் உலகினுள் நுழைந்த பெரும்பாலானவர்கள் இந்த அனுபம் வாய்க்கப்பெற்றிருப்பர்).எனினும் பெரும்பாலான நண்பர்கள் வேதாளராகவே இவரை அறியப்பெற்றிருப்பதால் இப்பதிவில் “வேதாளர்” என்ற பதமே பயன்படுத்தப்படும்.  தனது 80-வது பிறந்தநாளைக்கொண்டாடும் வேதாளருக்கான இந்தப்பதிவுடன் நண்பர்களைச்சந்திப்பதில் மகிழ்ச்சி.


   சித்திரக்கதைகள் எனக்கான பொழுதுபோக்காக மட்டுமல்லாது என் ரசனையையும், உலகின் மீதிருந்த என் கண்ணோட்டத்தையும், என் திறமையையும், எனக்குள்ளான ஒரு தேடலையும், இப்பிரபஞ்ச வெற்றிடங்களின் சூன்யர்த்தங்களை புரிந்து கொள்ளவும் மேலும் என்னை செம்மைப்படுத்தவும் செய்தன.இது சற்று மிகையாகத்தோன்றினாலும் யாதார்த்தத்தின் நிழலிதுவே.எனது நண்பர்கள் எனது தெருவில் நடமாடிக்கொண்டிருக்கும்போது, நான் மட்டும் அரிஸோனா பாலைவனங்களில் நீரைத்தேடி அலைந்து கொண்டிருப்பேன். இரும்புக்கையில் மின்சாரம் பாய்ந்து அரூபமாகி நண்பர்களை பயமுருத்திக்கொண்டிருப்பேன்.கெளபாய்களையும், செவ்வியந்தியர்களையும், வெயில் சுட்டெரிக்கும் ஜீவ-மரண போராட்டத்துடன் கூடிய பாலைப்பரப்பு வாழ்க்கையும், Wild West-ன் சுவாரஸ்யமான விக்ஷயங்களும் காமிக்ஸ் படிப்பவர்களைத்தவிர எத்தனைபேருக்கு பரிச்சயம் அச்சிறுவயதில்!.

   நான் எனது ஒவ்வொரு கோடைவிடுமுறைக்கும் சிவகங்கையிலுள்ள எனது தாய்மாமா வீட்டிற்குச்செல்வேன். அங்கு நானும் எனது மச்சானும் சேர்ந்து பழைய  புத்தகக்கடைகள் ஒன்றுவிடாமல் காமிக்ஸ் வேட்டை நடத்துவோம்.அவருக்கு காமிக்ஸ் மேல் நாட்டம் இல்லை என்றாலும், எனக்கு தேடிக்கொடுத்து மகிழ்வதில் அவருக்கொரு மகிழ்ச்சி.ஊருக்குச்செல்லும் போது நிறைய காமிக்ஸ் வாங்கலாம் என்ற கனவோடு அப்பாவை நச்சரித்து ரூ.50 வாங்கிக்கொண்டு கிளம்பினேன். 1996-களில்  ரூ.50 என்பது பெரிய தொகை.அந்நாட்களில் செலவைக்குறைப்பதற்காக  பேருந்து மாறி-மாறி செல்வது வழக்கம்.மதுரைபேருந்துக்காக வத்தலகுண்டு பேருந்துநிலையத்தில் காத்திருக்கும்போது கண்ணில்பட்ட புத்தகக்கடையில் ஏகப்பட்ட காமிக்ஸ்கள் தொங்கவிடப்பட்டிருந்தது.சரிதான் வேட்டையை இங்கே ஆரம்பித்து விடலாம் என்ற முடிவில் என்னையுமறியாமல் கடைக்குச்சென்று புத்தகங்களை வாங்க ஆரம்பித்தேன். எனக்கு
பார்வதி சித்திரக்கதைகள் பரிச்சயமானது இங்கிருந்தே.
  1. கனவா? நிஜமா?--------------------------- (பார்வதி சித்திரக்கதைகள்) - ரூ.04/-
  2. டயல் 100-------------------------------------- (பார்வதி சித்திரக்கதைகள்) - ரூ.04/-
  3. க்ஷீலாவைக்காணோம்-----------------(பார்வதி சித்திரக்கதைகள்) - ரூ.04/- 
  4. அறிவின் விலை ஒரு கோடி---------(பார்வதி சித்திரக்கதைகள்) - ரூ.04/- 
  5. அவள் எங்கே?-------------------------------(பார்வதி சித்திரக்கதைகள்) - ரூ.04/- 
  6. பலிபீடம்----------------------------------------------------------------------( P C K ) - ரூ.04/- 
  7. தூங்காத துப்பாக்கி-------------------------------------------------------( P C K ) - ரூ.04/-
  8. நடுக்கடலில்--------------------------------------------( மேகலா காமிக்ஸ்) - ரூ.25/-
  9. ராக்கெட் ரகசியம்------------------------------------(டால்பின் காமிக்ஸ்) - ரூ. ?
  10. கொலைகார கேப்டன் -----------------------------(டால்பின் காமிக்ஸ்) - ரூ. ?


  எல்லாம் சேர்த்து ரூபாய்.50/- க்கும் மேல் வந்தது.கையில் ரூ.50/- தான் இருந்தது, மீதம் சில்லரையை மச்சான் தர மேற்குறிப்பிட்ட புத்தகங்களை வாங்கியாயிற்று. இவ்வாறாக அந்த வருட பயணத்தின் ஆரம்பமே சிறப்பாக இருந்தாலும்,கையில் இருந்த பணம் மொத்தமும் காலி - சிவகங்கைக்கு சென்று காமிக்ஸ் வாங்க பணத்திற்கு என்ன செய்வது...? இருக்கவே இருக்கிறார்கள் மாமாவும்,மச்சானும் என்ற எண்ணம் ஆறுதலலிக்க பயணம் தொடர்ந்தது.கையில் காமிக்ஸ் இருக்கும் பையுடனும், எப்போது மாமா வீடு வரும் புத்தகங்களை படிக்க ஆரம்பிக்கலாம் என்ற ஆர்வமும் சேர்த்து அன்றைய பயணத்தை நெடியதாக்கியது.மாமா சிவகங்கை “ரவிபாலா-தியேட்டர்”-ன் நேரெதிரே டீக்கடை வைத்திருந்தார் நான் எப்போதும் அவருடனே இருப்பது வழக்கம்.அங்கிருந்தே ஓரிரு நாட்களில் அனைத்து புத்தகங்களையும் வாசித்து முடித்துவிட்டேன்.முன்னெப்போதும் இல்லாமல்  தற்போது நான் அதிக புத்தகங்களை வாசிக்க பழகியிருப்பது  எனது மாமாவிற்கு வியப்பளித்திருக்க வேண்டும், கடைக்கி வருவோரிடமெல்லாம் எனது மருமகன் என பெருமையாக கூறுவார்.அனைத்து புத்தகங்களையும் வாசித்தாயிற்று...! என மச்சானிடம் கூற, அவரும் நாளை பழைய புத்தகக்கடைக்கு செல்லலாம் என்றார். அந்த “நாளை”-யின் எதிர்பார்ப்பு பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
 
   அந்த “நாளை”-யும் வந்தது, புத்தகவேட்டைக்கு கிளம்பினோம்.வழியெல்லாம் காமிக்ஸ் பற்றிய நினைவே.அந்நாட்களில் அரண்மனை வாசல் தெருவில் நிறைய பழைய புத்தகக்கடைகள் இருக்கும்.பழைய புத்தகக்கடைகளில் காமிக்ஸ் புத்தகங்கள் தேடுவதும் நம் காமிக்ஸ் பிரியர்களுக்கு ஒரு ஆனந்தமே. நாலைந்து புத்தகக்கடைகள் ஏறி இறங்கி ஒரு இருபது புத்தகங்கள் வரை  தேற்றிய பின்னரே வீடு திரும்பினோம். பூந்தளிர் இதழ்களும் அவற்றில் அடக்கம்.அவற்றில் தற்போது என்னிடம் இருப்பது ஒன்று மட்டுமே.அட்டை இல்லாத காரணத்தினால் நிறைய புத்தகங்களை வாங்கவில்லை,அதற்காக தற்போதும் வருந்துவதுண்டு.சந்தோச நாட்களவை...!

   காமிக்ஸ் கனவில் வராத வாசகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்...? அப்படி இருந்தாலும் மிக சொற்பமே இருக்க முடியும்!. பழைய புத்தகக்கடைக்குச்சென்று பார்த்தால் ஒரு அட்டைப்பெட்டியில் மொத்த காமிக்ஸும் நமக்கு கிடைப்பது போலவும்,நண்பர்கள் நமக்கு காமிக்ஸ் பரிசளிப்பது போலவும்,நம்மிடமிருந்து தொலைந்து போன காமிக்ஸ் திரும்ப கிடைப்பது போலவும் என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் ஒரு படி மேலே சென்று காமிக்ஸ் களங்களில் நாம் உலவுவது போலவும்,நாமே அந்த கதாபாத்திரமாக உலா வருவதும், கதைக்களங்கள் காட்சிகளாக விரிவடைவதும் நிகழும்.அப்படியானதொரு கனவின் நிகழ்வை சற்று கற்பனைக்கலந்து தங்களுக்கு விவரிக்கிறேன்.கனவுகள் என்றைக்குமே விசித்திரமானவைகள்தான்.அப்படியொரு விசித்திரக்கனவுதான் வேதாளர் சூப்பர்மேன் போல பறப்பது.இக்கனவை மூலமாக வைத்துக்கொண்டு என் சக நண்பர்களுக்கு நான் கூறிய கதை என் மனதில் இவ்வளவு காலம் தங்குகிறது என்றால் அது முழுக்க முழுக்க காமிக்ஸின் மகிமையே...!

சூப்பர் மாயாவி (மன்னிக்கவும் பழக்தோக்ஷம்) சூப்பர் வேதாளர்:
   22-ம் வேதாளர் தனது மகனுக்கு பயிற்சி கொடுத்து கொண்டிருக்கையில் எதிர்பாராமல் ஏற்பட்ட காயத்தின் காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டு அவரது மகன் மரணிக்கிறார்.இதனால் வேதாளரின் குடும்பமே கவலையில் மூழ்குகிறது “சாகாவரம் பெற்றவர் வேதாளர்” என்ற வரலாறு பொய்த்து விடுமோ என்ற பயம் வேதாளரின் மனதை வாட்டியெடுத்தது.  நாட்கள் வேதனையுடன் நகர்கின்றது.நிலவொளியின் வெளிச்சத்தில் மூழ்கிருந்த ஈடன் தீவின் அமைதியை கிழித்துக்கொண்டு ஓர் விண்வெளி ஓடம் மின்னற்கீற்று போல் தரையிறங்கியது.அது வேதாளர் உட்பட தீவிலுள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.சற்று நேரத்தில் வேதாளர் வந்து சேர்வதற்கும், விண்கலத்தின் அலாரம் ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. வேதாளர் விண்கலத்தை ஆராய முற்பட, தானியாங்கி செயல் முடுக்கு விசையால் தூண்டப்பட்டு அதன் கதவுகள் திறக்க உள்ளிருக்கும் பச்சிளங்குழந்தையைக்கண்டு அனைவருக்கும் ஆச்சர்யம்.(இந்த விண்கலம் ‘கிரிப்டான்’- னிலிருந்து வந்தது என்று சொல்லவும் வேண்டுமா என்ன). வேதாளரின் பராமரிப்பில் குழந்தை வளர ஆரம்பிக்க, இக்குழந்தை சாதாரணது அல்ல என வேதாளருக்கு புரிய ஆரம்பிக்கிறது.இவ்வாறாக சூப்பர் சக்தியுடன் வேதாளரின் அடுத்த வாரிசு “சூப்பர் வேதாளராக” உருவாகின்றார்.இவ்வாறாக நீண்டு செல்லும் கதை.

கனவுலகில் உதயமான “சூப்பர் வேதாளர்”.

      இப்பதிவை ஆரம்பிக்கும்போது இல்லாத - மறந்திருந்த நினைவுகள் திடீரென்று ஞாபகத்தில் முளைத்தது கொஞ்சம் புதிராகத்தான் இருக்கின்றது.கொஞ்சமே என் நினைவில் இருக்கும் சில கதைகளின் ஞாபகமீதிகள் மட்டும் என் மனத்திரையில் நிழலாடுகின்றது. அடர்ந்த கானகத்தினுள்  சிலந்தி வலை போன்ற பொறி ஆங்காங்கே காணப்படும்(நிச்சயமாக இது ஸ்பைடர் கதை அல்ல), அதில் மாட்டிக்கொண்டுவிட்டால் விடுபடுவது கடினம்.அந்த சிலந்தி வலையில் மாட்டிக்கொண்ட ஒரு மனிதனின் எலும்புக்கூடு போன்ற ஓவியம் இன்னும் என் நினைவுகளை விட்டு அகலவில்லை(கதையின் பெயர் தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே). மற்றொரு கதையில் ஒரு வைரம் தன்னை சொந்தமாக்கி கொள்ள முயல்பவர்களை தன்னிடமிருந்து அதீத வெப்பத்தை வெளிப்படுத்துவதன் மூலம் காவு வாங்கும். ‘உருகும் பனிமலை’ என்ற பெயரே நினைவில் தங்கியுள்ளது.இந்தக்கதைகள் யாரிடமாவது உள்ளதா நண்பர்களே...?.இல்லையென்றால் தேடத்தொடங்குவோம்.அப்படியும் கிடைக்கவில்லையா இருக்கவே இருக்கிறது கனவு...!. காமிக்ஸ் எனும் கடலினுள் என்றைக்குமே உறங்காமல் விழித்திருக்கும் மீனினைப்போல் நம் நினைவுகள் ஓயாமல் நீந்திக்கொண்டிருக்கின்றன.
- நினைவுகள் நீந்தும்.


Saturday, February 13, 2016

வாடகை நினைவுகள்

மற்றுமொறு புதிய பதிவுடன் நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!.இம்முறை பதிவின் சாராம்சம் நமக்கு மிகவும் பரிச்சயமான சில (வா.மு.கோமு. / எஸ்.ராமகிருக்ஷ்ணன்) எழுத்தாளர்களின் காமிக்ஸ் நினைவுகளே!. ஒவ்வொருவரின் காமிக்ஸ் நினைவுகளும் பலவித அனுபவங்களை உள்ளடக்கியதாக இருக்கும்,மேலும் வாசிப்பவர்களை தத்தமது பால்யங்களுக்கு இட்டுச்செல்லும் காலயந்திரம் என்று கூட  இந்த அனுபவக்கட்டுரைகளை வர்ணிக்கலாம்.அதற்காகவே இப்பதிவிற்கு “வாடகை நினைவுகள்” என்று காரணப்பெயர்.இன்றைக்கும் எனது பயணத்தில் துணைக்கு அழைத்துச்செல்வது எஸ்.ராமகிருக்ஷ்ணன் புத்தகங்களையே.இவருடைய காமிக்ஸ் நினைவுகள் பனிக்கால மத்திமபொழுதுகளின் கதகதப்பை வாசிப்பவர்களுக்கு அளிக்க வல்லது.

சனி, ஏப்ரல் 11, 2015 

வா.மு.கோமு.

இரவுக்கழுகாரின் காமிக்ஸ்.

டெக்ஸ் வில்லரின்,  “சிகப்பாய் ஒரு சொப்பனம்!காமிக்ஸ் வெறியர்களை எனக்கு சிறுவயது முதல்கொண்டே தெரியும். கோவையில் ஒருவன் தன் இல்லத்தில் காமிக்ஸ் பலவற்றை வைத்துக் கொண்டு ஊருக்கே பத்துப் பைசாவுக்கு ஒரு நாள் வாடகைக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். அன்று காமிக்ஸ் ஒரு ரூபாய் விலை தான் பத்துப்பேருக்கு கொடுத்தான் என்றாலே போட்ட முதல் கிடைத்து விடும். அவனிடம் பள்ளி விடுப்பு மாதத்தில் பைசா கொடுக்காமல் தூக்கி வந்து வாசித்தவன் நானாகத்தான் இருப்பேன். ஏனெனில் என்னிடமும் அவனிடமில்லாத காமிக்ஸ் மற்றும் மாயாஜால புத்தகங்கள் இருந்தனஅவைகளை பண்டமாற்று முறையில் கொடுத்து வாசித்தேன். அவைகள் என்னிடம் இருக்க காரணம் என் அப்பிச்சி.

அவர் இந்துநேசன் நாவலில் இருந்து காமிக்ஸ் வரை கைக்கு கிடைப்பதை வாங்கி வாசிப்பவர்அவர் ராணுவத்திலிருந்து வெளிவந்து கோத்தகிரி மில்லில் வாட்ச்மேன் உத்தியோகம் பார்த்தவர்இன்று மில்லும் இல்லை அவரும் இல்லைகாமிக்ஸில் “மஞ்சள் பூ மர்மம்” கதையை இன்றும் பேசுகிறார்கள்அதை நான் வாசித்திருந்தாலும் இப்போது நினைவில் இல்லை

இன்று சிறுவர்கள் காமிக்ஸ் படிக்கும் பழக்கத்திற்கு வரவே இல்லைஅவர்களுக்கு வேறு விதமான பொழுது போக்கு அம்சங்கள் பெருகி விட்டன.  பள்ளியின் பாடப்புத்தக வாசிப்புக்கு இணையாக போரான ஒன்றாக நினைக்கிறார்கள்அவர்களுக்கு மொபைல் போன்களில் விளையாட விளையாட்டுகள் குவிந்து கிடக்கின்றன.

சரி யார் தான் இப்போது காமிக்ஸ் புத்தகங்களை வாசிக்கிறார்கள் என்று பார்த்தால் அதே பழைய காமிக்ஸ் ரசிகர்கள் தான்இப்போது லயன் காமிக்ஸ் நிறுவனம் விலையைப் பற்றி கவலைப்படாமல் உயர்தர தாளில் வர்ணத்தில் புத்தகங்களை கொண்டு வருகிறதுஅவைகள் மார்க்கெட்டில் உடனடியாக தீர்ந்தும் விடுகின்றதுவர்ணத்தில் இருந்தால் மட்டுமே குழந்தைகள் வாசிக்கின்றன என்ற உண்மையை நானே நம்ம பயலை வைத்து கண்டறிந்தேன்கருப்பு வெள்ளையில் காமிக்ஸ் புத்தகங்களை வாசித்துப் பழகிய எனக்கு வர்ணம் ஒரு ஒவ்வாமையை தருகிறது என்பேன்அதில் ஒரு திருப்தி இல்லை.

பழைய காமிக்ஸ் ரசிகர்களே கண்ணில் தென்படும் புத்தகங்களை வாங்கி யாரேனும் கண்ணில் பார்த்தால் சிரிப்பார்களோஎன்ற பயத்தில் வீட்டில் வாசிக்க பழகியிருக்கிறார்கள்.  காமிக்ஸ் புத்தகங்களை வாசிப்பவர்களின் மனநிலையை எந்த வகையிலும் விளக்க முடியுமாஎன்றால் அது முடியாதெனத்தான் தோன்றுகிறதுஅது நிஜமாகவே ஒரு வகையான ஈர்ப்பு என்றே சொல்லலாம்காமிக்ஸ் புத்தகங்களை பிண்டு செய்து பாதுகாத்து வைத்தவர்களின் இறப்பால் அவைகள் பல பழைய புத்தகக் கடையில் எடைக்குப் போடப்பட்ட விசயங்களே நடந்தன.

என்னிடம் என் அப்பாவின் புத்தகங்களூக்கு இணையாக இரண்டு பெட்டிகளில் காமிக்ஸ்கள் இருந்தனராணிகாமிக்ஸ் ஆரம்பித்த காலத்தில் ஒரு இதழ் விடாமல் நான்கு வருட சேமிப்பு இருந்தனஇன்று வளைதளத்தில் சில பழைய புத்தகங்கள் பதிவேற்றப்படுகின்றன.  இப்பொழுது இரண்டு வருடகாலமாக டெக்ஸ் வில்லரின் புத்தகங்களை மட்டும் என் நண்பர் வருகையில் பெருந்துறையிலிருந்து அழைத்துச் சொல்வார்சென்று வாங்கி வரும் வழக்கத்தை வைத்திருக்கிறேன்.

ஆரம்பகாலங்களில் இரும்புக்கை மாயாவி புத்தகங்கள் என்றால் அப்படி விழுந்தடித்து சென்று வாங்கி வந்து வாசித்தவனுக்கு அவரின் கடைசிக் கதையை இரண்டு வருடம் முன்பாக ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு லயன் வெளியீட்டில் வாசித்த போது, அட சைத்தானேஎன்றே தோன்றியதுஅது அவ்வளவு போர்மீண்டும் வாசிக்க இயலாதோ காமிக்ஸ்களை என்று பயந்தேன்எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வேறு காமிக்ஸ் ரசிகர் என்று எங்கோ படித்தேன்.  கடைசிக்கு லக்கி லுக் என்னால் வாசிக்க இயலாவிடினும் பயலுக்காக பிடித்து விடுவது நடந்து விடுகிறது.வாசிப்பை பயல்களுக்கு மெதுவாகத்தான் நுழைத்து பயிற்சி கொடுக்க வேண்டும்முன்பெல்லாம் செல்ப்பில் இருக்கும் புத்தகங்களை என் தந்தையாரே வாசிக்க கொடுத்ததில்லைநானாக வாசித்துப் பழகியது தான்.

ஆக நம்பயல் இறுதியாக தன் நிலைப்பாட்டை தெரிவித்து விட்டான்வர்ணத்தில் இருந்தால் மட்டுமே வாசிக்க இயலும் என்றுகாமிக்ஸ் புத்தகங்களின் விற்பனை பரவலாக இலக்கிய அந்தஸ்து போல இப்போது ஆகிவிட்டது.இலக்கிய வாசிப்பாளர்கள் தொடர்ந்து காமிக்ஸ்களை வாங்குகிறார்கள்இது எதுக்கு வெட்டியா!? என்று காமிக்ஸ் ஸ்டாலை கடந்து அவர்கள் செல்வதில்லைசென்ற வருடம் வியட்நாமிய போர்க்கால சம்பவங்களை வைத்து வர்ணத்தில் ஒரு புத்தகம் லயன் காமிக்ஸ் கொண்டு வந்ததுஅது இலக்கிய வாசிப்பாளர்களை கவர்ந்தது நினைவிருக்கலாம்.

டெக்ஸ் வில்லரின் கதைகள் துப்பாக்கிச் சத்தங்கள் நிறைந்ததுஇவரைப்பற்றி விளக்கமாய் சொல்ல நான் கூகிளில் தேடி எடுத்து சொல்லிப்போகும் எழுத்தாளனல்லசிகப்பாய் ஒரு சொப்பனம் டெக்ஸ் வில்லர் அண்ட் கோ இணைந்து செவ்விந்தியர்களின் கொட்டத்தை அடக்கும் கதைவழக்கமாக எல்லாமே அப்படித்தான் என்ற போதிலும் இந்தக் கதை செவ்விந்தியர்களும் அவர்கள் பிரிவில் இருக்கும் பல குழுக்களும் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட இறங்கும் கதைஅதற்காக அவர்கள் துப்பாக்கிகளின் தேவையை உணர்ந்து கள்ளத்தனமாக சேகரிக்க இறங்கிய கதை.

தமிழில் துப்பறியும் நாவல்கள் அத்தியாயத்திற்கு அத்தியாயம் மாறி மாறி வருவது போன்று டெக்ஸ்வில்லரும் அவரது உதவியாளன் டைகரும் ஒருபுறம் கிளம்பமறுபுறம் இரவுக்கழுகாரின் மகனும் அவன் மாமா கிட் கார்சனும் பயணப்பட கதை இருதிசையில் பயணிக்கிறது.  கீழே வைக்க முடியாத விறுவிறுப்பு ! ஹூவால்பை மலைப்பகுதி செவ்விந்தியன் தேவதையோடு பேசி மக்களை ஒருங்கிணைப்பது என்பதெல்லாம் திரைப்பட பாணியே தான்ஆக ஒரு ஆங்கில திரைப்படத்தை பார்த்து ரசித்த நிறைவை நாம் அடைகிறோம்!

இரவுக் கழுகாரேஉம்மை சிலகாலம் வாசிக்கலாம் தான்.

-வா.மு.கோமு.

எஸ்.ராமகிருக்ஷ்ணன்

கனவெங்கும் காமிக்ஸ்.

கையில் கிடைத்த வார இதழ்கள், நாளிதழ்களில் வெளியான விளம்பரங்கள், மற்றும் புகைப்படங்களை வெட்டி எடுத்து அதை ஒரு நோட்டில் படக்கதை போல ஒட்டி ஒவ்வொன்றின் மேலும் சிறிய சிறியதாக ஸ்கெட்ச் பென்சிலில் எழுதி நானே ஒரு காமிக்ஸ் புத்தகத்தை தயாரித்த போது எனது வயது பதினைந்து.

அந்த வயதில் என் உலகம் காமிக்ஸ் புத்தகங்களால் நிரம்பியிருந்தது. அதிலும் இரும்புக்கை மாயாவியை போல ஆவது என்பது மட்டுமே வாழ்வின் பிரதான நோக்கமாக இருந்தது. உடல் மறைந்து போய் கைமட்டும் தனியே காற்றில் மிதந்து செல்கிறது என்ற வரிகள் தந்த வியப்பு எளிதில் மறக்ககூடியதில்லை.பள்ளிபுத்தகங்கள் மனதில் இருந்த கனவுகளை கொஞ்சம் கொஞ்சமாக உதிரச் செய்து கொண்டிருந்த போது சாசகத்தின் மீதும் விசித்திரங்களின் மீதும் மனதை குவிய செய்தன காமிக்ஸ் புத்தகங்கள்.

தனித்து மேயும் எருமையை போல மிக சாவகாசமாக நகரும் சூரியனும், தூரத்து பனைகளும், மழையற்று போய் அடிவானம் வரை வீழ்ந்து கிடக்கும் வெம்பரப்பும், வெக்கை குடித்து வாழ்ந்த மனிதர்களும் கொண்ட கிராமப்புறத்தில் வளர்ந்த எனக்கு வீட்டில் இருந்த புத்தகங்களும் கிராம நூலகமும் துணையாக இருந்தன.

அந்த நாட்களில் எனக்கிருந்த ஒரே குறை ஏன் நூலகங்களில் காமிக்ஸ் புத்தகங்கள் வாங்குவதில்லை என்பதே. மாதந்தோறும் வெளியாகும் தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் எதுவும் நூலகத்தில் படிக்க கிடைக்காது. ஆயிரம் புத்தகங்கள் உள்ள கிராம நூலகத்தில் வீட்டிற்கு எடுத்து வந்து படிக்க ஒரு காமிக்ஸ் புத்தகம் கூட இருக்காது. பல முறை இதை பற்றி நூலகரிடம் கேட்டிருக்கிறேன். அவர் காமிக்ஸ் படிப்பதால் அறிவு வளராது என்று பொதுவாக கூறுவார். அது உண்மையில்லை என்று அந்த வயதிலே தோன்றியது. காமிக்ஸ் புத்தகங்களின் வழியே நான் நிறைய கனவு கண்டேன். கெய்ரோ நகரம், தங்கவிரல் கொண்ட புத்தர்சிலை, நயாகரா அருவி, வேதாளம் வசிக்கும் காடு, நியூயார்க் நகரம், சிவப்பிந்தியர்கள், இரட்டை குழல் துப்பாக்கி, கடற்கொள்ளையர்கள் என்று கனவெங்கும் காமிக்ஸ் உலகம் நிரம்பி வழிந்தது.எழுத்தின் மீதான எனது முதல் ஆசைகளை உருவாக்கியது காமிக்ஸ் புத்தகங்களே. ஒரு நாள் விருதுநகரில் நான் படித்த பள்ளி அருகில் இருந்த பழைய பேப்பர் கடை ஒன்றில் ஆங்கிலத்தில் இருந்த டின்டின் காமிக்ஸ் புத்தகம் ஒன்றை பார்த்தேன். அதை விலைக்கு கேட்ட போது ஐம்பதுபைசா என்றார் கடைக்காரர். நண்பனிடம் கடன் வாங்கி அதை பெற்றேன். ஒரு வார காலம் டின்டின் இன் அமெரிக்கா என்ற அந்த சித்திரகதையின் மீது தமிழில் நானாக ஒரு கதையை எழுதி ஒட்டி நண்பனுக்கு படிக்க தந்தேன். அவனால் நம்பவே முடியவில்லை. எப்படி இந்த கதையை எழுதினாய் என்று ஆச்சரியப்பட்டான். 

டின்டின் காமிக்ஸில் இருந்த கதைக்கும் நான் எழுதியதற்கும் ஒரு சம்பந்தமில்லை. நான் எழுதிய கதை இரும்புகை மாயாவி படித்து படித்து உருவானது. கிட்டதட்ட அது போன்ற ஒரு சாகசம். அந்த புத்தகத்தை நூலகத்தில் படிப்பதற்கு கொண்டு போய் போடலாம் என்ற யோசனையை அவனே சொன்னான்.

மறுநாள் அதை கையில் எடுத்து கொண்டு நூலகரை பார்க்க சென்றிருந்தேன். என்ன புத்தகமது என்று புரட்டி பார்த்தபடியே அவர் இதை எல்லாம் படிக்க போட முடியாது என்று மறுத்தார். நான் விடாப்பிடியாக நின்று கொண்டிருந்தேன்.

நீண்ட யோசனைக்கு பிறகு..சரி அந்த மேஜையில் போடு என்று சொல்லி கையை காட்டினார்.தினசரி பேப்பர்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் போடப்படும் மேஜையது. நானாக தயாரித்த காமிக்ஸ் புத்தகத்தை அதில் போட்டேன். அன்றிலிருந்து தினமும் இரண்டு முறை நூலகம் சென்று அதை யாராவது ஒருவர் கையில் எடுத்து படிக்கிறார்களா என்று பார்த்து கொண்டேயிருந்தேன். நான் அறிந்து ஒருவர் கூட புரட்டி பார்க்கவில்லை. ஒரு நாள் மாலை அதை தேடிய போது மேஜையில் காணவில்லை. யார் எடுத்திருப்பார்கள் என்று புரியாமல் நூலகரை விசாரித்த போது எவராவது திருடிக் கொண்டு போயிருப்பார்கள் என்றார்.

உண்மையில் எனக்கு அது சந்தோஷமாகவே இருந்தது. இந்த கிராமத்தில் என்னை போலவே காமிக்ஸ் படிக்கும் இன்னொருவன் இருக்கிறான். அவன் திருடி காமிக்ஸ் படிக்குமளவு வெறி கொண்டிருக்கிறான். அவன் யார் என்று எப்படி கண்டுபிடிப்பது என்று யோசனையோடு இருந்தேன்.களவு போன காமிக்ஸ் தந்த உற்சாகம் தான் நானாக இன்னொரு காமிக்ஸ் புத்தகத்தை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது. தந்தி பேப்பர் துவங்கி ரஷ்ய குழந்தைகள் இதழான மாஷா வரை வெளியாகி இருந்த படங்கள், ஒவியங்கள், புகைப்படங்களை வெட்டி எடுத்து ஒரு நோட்டில் ஒட்டி காமிக்ஸ் புத்தகம் போலவே தயாரித்தேன். நான் எழுதிய தயாரித்த காமிக்ஸ் என்பதில் இருந்த சந்தோஷம் அளவற்றது. 

அதற்கு என்ன தலைப்பு வைப்பது என்று யோசனையாக இருந்தது. கதையில் வரும் வில்லனுக்கு ஒற்றைகண் மட்டுமே இருக்கும். அவனை கண்டுபிடிக்க இரும்புகை மாயாவி மதுரையில் அலைந்து திரிவார். அவன் நாயக்கர் மகால் அடியில் உள்ள சுரங்கபாதைக்குள் குடியிருப்பான் என்று இரும்புகை மாயாவியமதுரையில் ரிக்ஷாவில் அலைய விட்டிருந்தேன். ஆகவே அந்த கதைக்கு ஒற்றைகண் மாயாவி என்ற தலைப்பு வைத்தேன்.

பள்ளி புத்தகங்களுக்கு நடுவில் அதை மறைத்து வைத்து எடுத்து போய் மதியஉணவு வேளையின் போது நண்பனுக்கு படிக்க தந்தேன். அவன் அதன் இரண்டு மூன்று பக்கம் படித்து முடித்தவுடன் எதை பார்த்துடா எழுதினாய் என்று கேட்டான். நானாக எழுதினேன் என்று பலமுறை சொல்லியும் நம்பவில்லை. இரண்டு கைகளிலும் சத்தியம் செய்துபோதாமல் அவன் உச்சந்தலையில் அம்மா பெயரால் சத்தியம் செய்தேன். இதை வாடகைக்கு படிக்க விடலாம் என்ற யோசனையை நண்பன் சொன்னான்.

எங்கள் பள்ளியின் அருகில் ஒரு பெட்டிகடை இருந்தது. அங்கே காமிக்ஸ் விற்பார்கள். காமிக்ஸ் விலைக்கு வாங்க முடியாதவர்களுக்காக கடைக்காரர் ஒரு சலுகை அறிவித்திருந்தார். அதன்படி அதே கடையின் முன் உள்ள பெஞ்சில் அமர்ந்து ஒரு காமிக்ஸ் புக்கை படித்து முடித்து தருவதற்கு பத்து காசு தர வேண்டும்.

 இதற்காகவே பள்ளிக்கு காலையில் வேகமாக கிளம்பி வந்திருக்கிறேன். கடையின் முன்னால் கிடந்த பெஞ்சில் அமர்ந்தபடியே வேகவேகமாக காமிக்ஸ் புத்தகங்களை வாசிப்பேன். ஒட்டகம் தண்ணீர் கண்ட இடத்தில் வயிறு நிறைய உறிஞ்சி குடித்துவிட்டு தேவைபடும் அதே தண்ணீரை கொஞ்சமாக எதுக்களித்து தாகம் தீர்த்து கொள்ளும் என்கிறார்களே அது போன்றது தான் என் வாசிப்பும். அந்த கடையில் தொங்கிய அத்தனை காமிக்ஸ் புத்தகங்களையும் வாசித்துவிட வேண்டும் என்று வெறி கொண்டிருந்தேன்.

வீட்டில் தின்பண்டம் வாங்க தரும் காசை சேர்த்து வைத்து காமிக்ஸ் வாங்கி படிப்பேன். நண்பர்கள் வைத்திருந்த காமிக்ஸ் புத்தகங்களை பரிமாற்றம் செய்து கொள்வோம். பள்ளியில் காமிக்ஸ் வைத்திருந்ததற்காக கண்டுபிடிக்கபட்டு அடிவாங்கியிருக்கிறேன். அந்த மொத்த ஆசையின் வடிவமாக ஒற்கைகண் மாயாவி உருவாகியது.

அதை வாடகைக்கு கொடுக்க இயலுமா என்று நண்பன் தயங்கி தயங்கிகடைக்காரரிடம் கேட்டான். இதை யாரு படிப்பா என்று கேலி பேசியதோடு எங்களை விரட்டிவிட்டார் கடைக்காரர்.

நூலகத்திலே போடலாம் என்று முடிவு எடுத்தேன். அப்போது முன்பு நூலகர் சொன்ன ஒரு யோசனை நினைவிற்கு வந்தது. அதன்படி புத்தகத்தின் கடைசி இரண்டு பக்கம் வாசகர்கள் பதில் எழுதுவதற்கு வசதியாக வெறுமனே விட்டு வைத்திருந்தேன்.

 ஆர்வத்துடன் காமிக்ஸ எடுத்து கொண்டு கிராம நூலகத்திற்கு சென்றேன். அன்று நூலகம் திறக்கபடவில்லை. வெள்ளிகிழமை மட்டும் தானே விடுமுறை இன்று ஏன் அவர் திறக்கவில்லை என்று காத்துக் கொண்டேயிருந்தேன். நூலகர் ஒரு விவசாயி. கிராமத்தில் மழை பெய்துவிட்டால் அவர் விவசாயம் பார்க்க சென்றுவிடுவார். அதனால் சில நாட்கள் நூலகம் பூட்டியே கிடக்கும். அன்றும் அவர் விதை வாங்குவதற்காக சென்றிருந்தார் என்று கேள்விபட்டேன். மூடிக்கிடந்த நூலகத்தின் வாசலில் உட்கார்ந்தபடியே அந்த காமிக்ஸ் புத்தகத்தை நானாக வைத்து கொண்டிருந்தேன்.

மனதில் இரும்பு கைமாயாவி, ஜானி நீரோ, ரிப்கெர்பி, டேவிட் லாரன்ஸ், வேதாளம், மாண்ட்ரெக், என்று காமிக்ஸ் கதாநாயகர்கள் ஒவ்வொருவரையும் வைத்து இது போல நானாக ஒரு படக்கதை தயாரிக்க வேண்டும் என்ற கனவு ஒடிக் கொண்டிருந்தது. மறுநாள் நூலகம் திறந்த போது முதல் ஆளாக நான் அந்த காமிக்ஸ நூலகத்தில் போட்டேன்.

இரண்டு வாரங்கள் வரை அதில் யாருமே ஒரு வரி கூட எழுதவில்லை. பழைய இதழ்களை மாற்றுவதற்கான நாளின் போது நூலகர் காமிக்ஸ எடுத்து கொள்ள சொன்னார். தோற்றுப்போன மனதுடன் அதை கையில் எடுத்தேன். கசங்கி, நசுங்கி போயிருந்தது. தற்செயலாக கடைசி பக்கத்தை புரட்டிய போது அதில் காமிக்ஸ் புத்தகம் நன்றாக உள்ளது ஜி.முத்துசெல்வி என்றிருந்தது. நூலகரிடம் அதை காட்டி யார் அது என்று கேட்ட போது அது அருகாமை மில்லில் வேலை பார்க்கும் ஒருவரின் மனைவி என்று சொன்னார். அந்த பெண்ணை ஒருமுறையாவது பார்க்க வேண்டும்என்று நினைத்து கொண்டேயிருந்தேன். பின்னொரு நாள் அந்தபெண் புத்தகம் எடுக்க சைக்களில் வரும்போது பார்த்தேன். இருபத்தைந்து வயதிருக்கும். மெலிந்த தோற்றத்திலிருந்தார். நூலகர் அந்த பெண்ணிடம் இந்த பையன் தான் அந்த காமிக்ஸ் புத்தகத்தை தயாரித்தவன் என்று என்னை காட்டி சொன்னார். அவள் மெல்லிய புன்சிரிப்புடன் நல்லா இருந்துச்சிடா தம்பி என்று சொல்லிவிட்டு தன் வீட்டில் கொஞ்சம் காமிக்ஸ் புத்தகம் இருக்கிறது வேண்டுமானால் வந்து வாங்கிகொள் என்றாள்.எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. அடுத்த நாளே மில்காலனியில் இருந்த அவளது வீட்டிற்கு சென்றேன். மிகச் சிறிய வீடு. குழந்தை தொட்டிலில் உறங்கி கொண்டிருந்தது. ஒரு நார்பெட்டியில் பத்து பதினைந்து காமிக்ஸ் புத்தகங்களை போட்டு வைத்திருந்தார் அந்த அக்கா. அதில் நான் தயாரித்த டின்டின்னும் இருந்தது. அதை காட்டிய போது சிரித்தபடியே அங்கே உட்கார்ந்து படிக்க நேரமில்லை அதான் எடுத்துட்டு வந்துட்டேன் என்றபடியே எல்லா காமிக்ஸ் புத்தகங்களையும் எடுத்து கொள்ள சொல்லிவிட்டு என்னை அழைத்து கொண்டு அருகாமையில் உள்ள பெட்டிகடையில் குடிப்பதற்காக டொரினோ வாங்கி தந்தார்.

என்னிடம் நிறைய காமிக்ஸ் இருக்கிறது. படிக்க வேண்டுமா அக்கா என்று கேட்டேன். குழந்தையை கவனிக்கவே நேரமில்லை என்று மறுத்தபடியே நீ நல்லா எழுதுறே என்றார். அந்த வயதில் அவர் தந்த உற்சாகம் அளப்பறியது.

அதன் சில வாரங்களில் நூலகத்திற்கு புதிய நூலகர் மாறுதலில் வந்து சேர்ந்தார். அவர் அரசு அனுமதிக்காத எதையும் நூலகத்தில் படிக்க போட முடியாது என்று கறாக இருந்தார். அத்துடன் என்னை போன்ற சிறுவர்களை புத்தகங்களை தேட உள்ளே அனுமதிக்கவே மறுத்தார். அவர் மீதிருந்த கோபத்தில் நூலகம் பக்கம் போகவேயில்லை.

ஒரேயொரு முறை நகரில் அந்த அக்காவை குழந்தையுடன் பொது மருத்துவமனை வெளியே பார்த்தேன். அதன் பிறகு ஒரு முறை அவர்கள் வீட்டை தேடி சென்ற போது எட்டயபுரத்தில் உள்ளஒரு மில்லுக்குமாறி போய்விட்டதாக சொன்னார்கள். இரண்டு மூன்று நாட்களுக்கு வருத்தமாக இருந்தது. 

என்ன உறவு அது. எப்படி அந்த அக்காவிற்கு காமிக்ஸ் படிக்கும் பழக்கம் வந்தது. ஏன் அவள் திருமணமாகி குழந்தைகள் பெற்ற பிறகும் சாகசகதைகளிலிருந்து விலகிவராமலே இருந்தாள். எல்லா காமிக்ஸ் புத்தகங்களை விடவும் புதிரானதும் முன்அறிய முடியாததும் தான் நமது வாழ்க்கை என்பதை அவளே புரிய வைத்தாள். 

ஆனால் காமிக்ஸின் மீதான விருப்பம் அந்த அக்காவால் அதிகம் தூண்டப்பட்டது. சிவகாசிக்கு சென்று அங்கே முத்துகாமிக்ஸ் வாங்க ஆரம்பித்தேன். அச்சக கழிவு காகிதம் ஒன்றில் காமிக்ஸ் புத்தகம் ஒன்றின் பல பக்கங்கள் சிதறி கிடந்ததை சேகரித்து ஒட்டி படித்திருக்கிறேன்.காமிக்ஸ் கதாநாயகர்கள் பெரியவர்களா, சினிமா கதாநாயகர்கள் பெரியவர்கள என்ற போட்டி சிறுவர்களுக்குள் நடக்கும். அப்போது ஏன் இரும்பு கைமாயாவி, ஜானி நீரோ போன்ற கதாபாத்திரங்களில் எனக்கு விருப்பமான நடிகர்கள் நடிப்பதில்லை என்று குழம்பியிருக்கிறேன். காமிக்ஸ் கற்பனையின் எல்லையற்ற சாத்தியங்களை திறந்துவிட்டது. பள்ளி இறுதியாண்டு தேர்வு என்பதால் படிப்பில் கவனம் சிதறி போகிறது என்று வீட்டில் உருவாக்கிய கட்டாயம் கெடுபிடி என்னை காமிக்ஸில் இருந்து விலகி படிப்பின் மீது கவனம் கொள்ள செய்ததது. அதன் பிறகு பல வருசங்கள் காமிக்ஸ் படிக்கவேயில்லைகல்லூரி நாட்களில் ரஷ்ய இலக்கியம் தமிழ் இலக்கியம் என்று தேடிதேடி வாசித்தபோது ஒரு ஆசை உருவானது. நான் தமிழில் படித்த காமிக்ஸ் புத்தகங்களை ஒரு முறை ஆங்கிலத்தில் படிக்க வேண்டும். அப்போது தான் அவை எப்படி தமிழில் உருமாற்றம் பெற்றிருக்கின்றன என்று தெரிந்து கொள்ள முடியும் என்று தமிழின் வெளியான முக்கிய காமிக்ஸ் புத்தகங்களை ஆங்கிலத்தில் தேடி வாசிக்க துவங்கினேன். அப்போது தான் தமிழ்காமிக்ஸின் முக்கியத்துவம் உணர முடிந்தது.தமிழ் காமிக்ஸின் வரலாறு தனித்து நூலாக எழுதப்பட வேண்டியது. குறிப்பாக முத்துகாமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் அதன் பாதையில் இன்று தொடர்ந்து வரும் காமிக்ஸ் பதிப்புகள் குறித்து விரிவான ஆய்வும் பதிவுகளும் அவசியமானவை. இன்று இணையத்தில் ஒரளவு இதை பற்றிய கவனமும் அக்கறையும் இருக்கிறது. உலகெங்கும் உள்ள காமிக்ஸ் வாசகர்கள் தேடி தேடி காமிக்ஸ் வாங்குகிறார்கள். படிக்கிறார்கள். விவாதிக்கிறார்கள். ஆனால் தமிழ்காமிக்ஸ் பற்றி விரிவான நூல் எதுவும் இதுவரை வெளியாக வில்லை. ஒருவராக இல்லாமல் பலரும் காமிக்ஸ் குறித்து எழுதிய கட்டுரைகளாக கூட அதை தொகுக்கலாம்.

புகழ்பெற்ற தமிழ் காமிக்ஸ்களை வெளியிட்ட முதல் நிறுவனம் முத்துகாமிக்ஸ். சிவகாசியில் இருந்து சௌந்திர பாண்டியன் அவர்களால் நடத்தபட்ட முத்துகாமிக்ஸ் 1971 ம் ஆண்டு அதன் முதல் காமிக்ஸ வெளியிட்டது. இரும்பு கை மாயாவி என்ற அந்த காமிக்ஸ் புத்தகம் 128 பக்கம் கொண்டது. விலை 90 பைசா.

1962-ல் லண்டனில் Fleetway பதிப்பகத்தின் வழியே அறிமுமாகி பிரபலம் அடைந்த The Steel Claw தான் இரும்பு கை மாயாவியாக தமிழில் உருமாற்றம் பெற்றார். ப்ளீட்அவே பதிப்பகம் காமிக்ஸ் பதிப்பு துறையில் முன்னோடி நிறுவனம். அவர்கள் சிறார்களுக்காக இதழ்கள், சித்திர கதைகள் வெளியிடுவதில் முன்னோடியாக இருந்தார்கள்.

தமிழில் ஆரம்ப நாட்களில் வெளியான பெரும்பான்மை காமிக்ஸ் புத்தகங்கள் ப்ளீட்அவே பதிப்பக வெளியீடுகளே. இங்கிலாந்தில் பரபரப்பான விற்பனையான இந்த காமிக்ஸ் புத்தகங்களின் உரிமையை முறையாக வாங்கி அந்த சித்திரங்களையும் முகப்பு அட்டைகளையும் அப்படியே பயன்படுத்தி கொண்டு அதை சரியாக தமிழுக்கு உருமாற்றம் செய்தார்கள். அந்த பணியை மேற்கொண்டவர் முல்லை தங்கராசு.

அவர் தான் முத்துகாமிக்ஸின் பொறுப்பாசிரியராக இருந்தார்.காமிக்ஸ்புத்தங்களுக்கு என்றே ஒரு தனிதமிழை அவர் உருவாக்கினார். வில்லன்கள் விடும் சவாலும், அதற்கு மாயாவி தரும் பதிலடியும் வியக்கவைக்குமளவு தமிழ்நடையில் எழுதப்பட்டிருந்தது.அவை இன்னொரு மொழியில் இருந்து தமிழுக்கு வந்தவை என்ற பேதம் அறியாதபடி கதை மிக அழகாக விவரிக்கபட்டிருந்தது. மாறுபட்ட கலாச்சாரம், கதைக்களம் யாவும் அந்நியமாக இருந்தபோதும் அதை உணர முடியாதபடியே தமிழ் மொழிபெயர்ப்பின் சரளம் உள்ளுர் காமிக்ஸ் ஒன்றை வாசிப்பதை போல உணர செய்தது.

ஸ்பானிய சித்திரக்காரரான Jesus Blasco தான் இரும்புகை மாயாவியை வரைந்தவர Henry Kenneth Bulmer  ,இதற்கான கதையை எழுதியிருக்கிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என்று இந்தியாவெங்கும் இரும்புகை மாயாவி புகழ்பெற்ற காமிக்ஸ் கதாநாயகனாக அறிமுகமானார்.இரும்பு கை மாயாவி கதாபாத்திரம் உருவான கதை சுவாரஸ்யமானது. அவரது உண்மை பெயர் லூயிஸ் கிராண்டேல். இவர் பாரிங்கர் என்ற பேராசிரியரின் உதவியாளராக வேலை செய்கிறார். ஒருமுறை லேப்பில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவரது கை துண்டிக்கபட்டு செயற்கை கரம் பொருத்தபடுகிறது. அந்த செயற்கை கரத்தில் மின்சாரம் பாயும் போது அவர் உடல் மறைந்து கை மட்டுமே தனியே செயல்படுகிறது என்ற உண்மையை ஒரு நாள் தற்செயலாக கிராண்டேல் கண்டுபிடிக்கிறார். எவ்வளவு மின்சாரம் உடலில் பாய்கிறதோ அவ்வளவு மணி நேரம் அவர் அரூபமாக இருக்க முடியும் என்பதை அறிந்து கொள்கிறார்.

இந்த சக்தியை கொண்டு நல்வழிகளில் பயன்படுத்தலாம் என்று பாரிங்கர் அறிவுரை சொல்கிறார். இதனால் பிரிட்டனின் உளவுபிரிவான நிழல்படையில் சேர்கிறார் கிராண்டேல். அழிவு கொள்ளை தீமை கழகம் எனப்படும் அகொதீகவின் செயல்பாடுகளை முறியடிக்கும் வீரராக அவதாரம் கொள்கிறார். இப்படி தான் இரும்புகை மாயாவியின் சாகசம் துவங்கியது. இன்றைய ஜேம்ஸ்பாண்டின் சாகசங்கள் அத்தனையும் இரும்புகை மாயாவியிடமிருந்து பெற்ற உந்துதல்களே.இரும்புகை மாயாவியை அழிக்க நினைக்கும் அமைப்பின் பெயர் FEAR அதை தமிழில் திறம்பட அகொதீகழகம் என்று மாற்றியது இன்று வாசிக்கையிலும் வியப்பளிக்கிறது.இரும்புகை மாயாவிக்கு கிடைத்த வெற்றி தொடர்ந்து ப்ளீட்அவே காமிக்ஸ் தமிழில் வெளியாக தளம் அமைந்து தந்தது. தமிழ் காமிக்ஸிற்கு என தனி ரசிகர்கள் உருவானார்கள். முத்து காமிக்ஸ் நிறுவனமே லயன் காமிக்ஸ் என்ற துணை நிறுவனத்தை உருவாக்கி விஜயனை ஆசிரியராக கொண்டு தமிழ் காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட துவங்கியது.

ஆரம்ப நாட்களில் தமிழில் வெளியான காமிக்ஸில் பெரும்பான்மை காமிக்ஸ் ஹீரோக்கள் ஆங்கில கதாபாத்திரங்கள். ஆங்கிலம் அறியாத பிற மொழி கதாநயாகர்களை அறிமுகப்படுத்து பணி 1980 களில் துவங்கியது. பிரெஞ்ச் மற்றும் அமெரிக்க சித்திர கதைகள் தமிழில் வெளியாக துவங்கின. கௌபாய்கள் தமிழில் அறிமுகமானார்கள். மெக்ஸிக கொள்ளையர்களின் துப்பாக்கி சண்டைகள் பரபரப்பாக வாசிக்கபட்டன. லக்கிலுக்கின் வேடிக்கையான சாகசம் பெரிதும் ரசிக்கபட்டது.டெக்ஸ்வில்லர் படிக்க ரசிகர்கள் காத்துகிடந்தார்கள். முத்து காமிக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் முந்நூறுக்கும் மேலான காமிக்ஸ் புத்தகங்களை தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

இதில் பல காமிக்ஸ் புத்தகங்கள் இந்தியாவில் தமிழில் மட்டுமே வெளியாகி உள்ளன. சில ஆங்கிலத்தில் வெளியாவதற்கு முன்பு நேரடியாக ஸ்பானிய மொழி அல்லது இத்தாலியில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

தமிழ் காமிக்ஸின் தலைநகரம் சிவகாசியே. இன்றுள்ள எந்த இணைய வசதியும் இல்லாமல் தபால் மூலமாகவே காமிக்ஸ் வெளியிடும் வெளிநாட்டு பதிப்பகங்களை தொடர்பு கொண்டு பலமாதங்கள் காத்திருந்து அதற்கான உரிமை பெற்று அந்த மூலச்சித்திரங்களை வரவழைத்து அதே நேர்த்தியுடன் அச்சிட்டு குறைவான விலையில் விற்பனை செய்தது பெரிய சாதனையே. ஒவ்வொரு காமிக்ஸ் புத்தகத்தின் பின்னும் அதை வெளியிடுவதற்கு ஏற்பட்ட நெருக்கடிகள் மற்றும் மொழிமாற்றத்தின் போது ஏற்பட்ட சிக்கல்கள் என்று பலர் அறியாத ரகசியங்கள், சுவாரஸ்யஙகள் ஒளிந்திருக்கின்றன.வீடு தோறும் சிறுவர்கள் படிக்கும் புத்தகமாக இருந்த காமிக்ஸ் தொலைக்காட்சியின் வருகையும். ஆங்கில பள்ளிகளின் கெடுபிடிகளும், புத்தக வாசிப்பில் அக்கறையற்ற புறச்சூழலும் இணைந்து கொள்ள கடந்த பதினைந்து வருடங்களில் மெல்ல குறைந்து போக துவங்கின. கடந்த சில ஆண்டுகளில் தமிழ் காமிக்ஸ் மீது புதிய விருப்பம் உருவான போதும் இன்றுள்ள சிறார்கள் இந்த காமிக்ஸ் கதைகளை படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லைகிராபிக் நாவல், மாங்கா, விஞ்ஞான புனைகாமிக்ஸ், என்று அதிநவீன மாற்றம் கொண்டுள்ள காமிக்ஸ் புத்தகங்களே அவர்களது விருப்பமாக உள்ளது. சென்ற புத்தக கண்காட்சியின் போது ஐம்பது பழைய காமிக்ஸ் புத்தகங்களை வாங்கினேன். அவற்றில் ஒன்றை கூட படிக்க எனது பிள்ளைகள் விருப்பம் கொள்ளவேயில்லை . அந்த சாகசங்களை விடவும் பெரியதாக தாங்கள் வீடியோ கேமில் விளையாடி பார்த்துவிட்டதாக சொல்கிறார்கள். கூடுதலாக அதே விளையாட்டுகள் திரைப்படமாகவும் வந்துவிடுகின்றன.

சாகசத்தின் மீதான விருப்பம் சிறார்களுக்கு அப்படியே தானிருக்கிறது. ஆனால் வாசிக்கபடும் புத்தகம் மாறியிருக்கிறது. 1960 துவங்கி 1980 வரையான உலகெங்கும் உள்ள முக்கிய காமிக்ஸ்களை முத்து காமிக்ஸ் போன்ற நிறுவனம் தமிழில் வெளியிட்டு அறிமுகம் செய்து வைத்தது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் உலகம் முழுவதும் புதிது புதிதாக காமிக்ஸ் புத்தகங்கள் வெவ்வேறு வடிவங்களில்,வெவ்வேறு வயதினர் படிக்கும்படியாக , மாறுபட்ட துறை சார்ந்து வெளியாகின்றன. அதில் ஒரு சில கூட தமிழில் வெளியாகவேயில்லைபதினைந்து வயதில் நானாக ஒரு காமிக்ஸ் புத்தகம் தயாரித்து விளையாடியது போன்று இன்றும் நானாக ஒரு கிராபிக் நாவல் ஒன்றினை உருவாக்க முனைந்திருக்கிறேன். ஆர்வமான ஒவியர்களின் உதவியில்லாமல் அது சாத்தியமாகாது. ஆனால் காமிக்ஸ் மீதான விருப்பம் கொண்ட ஒவியர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். அவர்கள் முழுமையாக தங்களை இந்த துறையில் ஈடுபடுத்தி கொள்ள முடியாதபடி அதன் பொருளாதார சிக்கல் உள்ளது.

நமது ஊர் கதைகள் , இந்திய சரித்திரம், நாட்டார் மரபு கதைகள், புராணம், இதிகாசம் இதிலிருந்து புதிய சித்திரக்கதைகளை உருவாக்குவதற்கு எண்ணிக்கையற்ற சாத்தியங்கள் இருக்கின்றன. தமிழ் வாழ்விலிருந்து உருவாகும் சித்திரக்கதையை எழுதும் ஆசை எனக்கிருக்கிறது. அதை நிறைவேற்றுவதற்கு நான் ஒருவன் மட்டும் போதுமானவன் இல்லை. கூட்டு முயற்சிகளே இதை சாத்தியமாக்க கூடும். மாறிவரும் சூழலில் அது சாத்தியம் என்ற நம்பிக்கை உள்ளது.அந்த நாள் வரை மறுபடி மறுபடி வாசிப்பதற்கு என்னிடம் இன்றும் இரும்புகை மாயாவி காமிக்ஸ் உள்ளது. அதை வாசிக்கும் போது எழுத்தாளன் தான் உண்மையான இரும்புகை மாயாவி என்று தோன்றுகிறது. காரணம் எழுதும் நிமிசங்களில் அவனது கை மட்டுமே இயங்குகிறது. அவன் மறைந்துவிடுகிறான். கை மட்டுமே எதை எதையோ எழுத்தில் உருவாக்குகிறது. மின்சாரம் இழந்தவுடன் மாயாவி தன்னிலை பெறுவது போலதானிருக்கிறது எழுதி முடிக்கும் மனநிலையும்.பால்யம் உருவாக்கும் கனவுகள் குளத்தில் எறிந்த கற்களை போன்றவை. அவை கண்ணில் படுவதில்லை ஆனால் கரைந்து போகாமல் நீருக்குள்ளாக அமிழ்ந்து கிடக்கின்றன. காமிக்ஸ் கனவுகளும் அப்படியானது தான்.

எஸ்.ராமகிருக்ஷ்ணன்.

- நினைவுகள் தொடரும்.

Friday, February 5, 2016

லக்கி லூக் - ஒரு காமெடி குண்டன்

நண்பர்களுக்கு வணக்கம், மீண்டுமொரு புதிய பதிவுடன் நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.  “லக்கி லூக்”அறிமுகம் தேவையில்லாத நாயகன் என்றாலும், புதிய வாசகர்களுக்காகவும், லக்கி லூக்கைப்பற்றி அடிப்படை மற்றும் சில   சுவாரஸ்யத்தகவல்களுடனும் , எனக்கு லக்கி பரிச்சயமானது பற்றிய சம்பவங்களையும் பிரதானமாக கொண்டு இப்பதிவிட்டுள்ளேன்.வரலாற்று சம்பவங்களை மையமாக கொண்ட கதைகள், வாழ்ந்து மறைந்த கதாபாத்திரங்களைத்தழுவி உருவாக்கப்பட்ட காதாபாத்திரங்கள் இதுபோன்று லக்கி லூக்கைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய விசயங்கள் இருக்கின்றது. தொடரும் நாட்களில் லக்கி-யைப்பிரதானமாக கொண்ட பதிவுகளை நம் தளத்தில் அதிகம் எதிர்பார்க்கலாம்.

"LUCKY LUKE,THE COWBOY SHOOTS FASTER THAN HIS SHADOW,FIGHTS INJUSTICE AND RIDES JOLLY JUMPER.THE SMARTEST HORSE IN THE WORLD, MOST OF THESE COMIC BOOKS INCORPORATE CHARACTERS FROM HISTORY".

மோரிஸ் வரையும் கதாபாத்திரங்கள் பார்த்தவுடனேயே அதன்  குணாதிசயங்களை , பார்ப்பவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய இலகு வாய்ந்தவை.


“லக்கி லூக்”- புயலையும்விட வேகமாக சுடக்கூடிய ஒரு கெளபாய்.சொல்லப்போனால்  தன் நிழலையும்விட வேகமாகச் சுடக்கூடியவன். இவரின் அறிமுகப்பக்கங்களிலும், புத்தகங்களின் பின்னட்டைகளிலும் இவ்வாறனதாக இருக்கும் இவரைப்பற்றிய வர்ணனைகள்.ஜாலி ஜம்பர், ரிண்டின்கேன், டால்டன் பிரதர்ஸ் என இவர்களுடன் சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள்.வலைத்தளத்தில் ‘லக்கி லூக்’ என்று டைப்பினால் இவரைப்பற்றிய தகவல்கள் வந்து குவியும்.எனவே அரைத்த மாவையே அரைக்காமல் சில சுவாரஸ்யத்தகவல்களுடன் லக்கியுடனான எனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறேன்.


1946 டிசம்பர் 7-ல் லக்கி லூக் அறிமுகம் ‘Arizona 1880'
1946 டிசம்பர் 7-ல்  ‘Franco-Belgian Comics' இதழான ‘SPIROU'-ல் ஓவியர் “மோரிஸ்” என்பவரால் ‘Arizona 1880' என்ற கதையில் அறிமுகமானார் லக்கி லூக்.அதன் வரவேற்பைத்தொடர்ந்து 1949-லிருந்து முழுநீளக்கதைகளில் தலைக்காட்டத்தொடங்கினார்.அன்றிலிருந்து இன்று வரை உலகின் பல மொழிகளில் வெளியாகி அனைவரின் மனங்களையும் தனது நகைச்சுவைத்தோரணங்களால் கொள்ளையடித்துக்கொண்டிருக்கின்றனர் லக்கி லூக் குழுவினர்.கிட்டத்தட்ட 70 வருடங்களாக, 30-க்கும் மேற்பட்ட மொழிகளில், 80-க்கும் மேலான சித்திரக்கதைகளின் மூலமும்,திரைப்படங்கள், அனிமேக்ஷன் படங்கள், வீடியோ கேம்கள் என பல்வேறு ஊடகங்களின் வழியாக சிரிக்க வைப்பது ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கும் இந்த ஒல்லிபிச்சான் ஹீரோ உண்மையிலேயே ‘காமெடியில் குண்டன்’-தான். 

லக்கி லூக் - தமிழ் அவதாரம்:
 தமிழில் லக்கி லூக்கை ஜீனியர் லயன் காமிக்ஸ் மூலம் அறிமுகப்படுத்தி,தனது எழுத்துத்திறமையால் மேலும் மெருகேற்றி நம்மிடம் தரமான ஒரு நகைச்சுவை நாயகனை கொண்டு சேர்த்த லயன் - முத்து காமிக்ஸ் ஆசிரியர் எஸ்.விஜயன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும், வணக்கங்களும்.லக்கி லூக்கின் தமிழ் உரிமைகள் பெற்றதையும்,அது பற்றிய தகவல்களையும் “சிங்கத்தின் சிறு வயதில்” தொடரில் சுவாரஸ்யமாக கூறியிருப்பார். லக்கி லூக் கதை வரிசையில் அனைத்து கதைகளுமே தரமான காமெடி விருந்துதான்,எந்த கதையுமே சோடை போனதில்லை, விற்பனையிலும் கூட. எல்லாதரப்பு வாசகர்களின் மனதையும் கொள்ளை கொண்ட பெருமை வன்மேற்கின்  இந்த காமெடி கெளபாய்க்கு உண்டு. லக்கி லூக்கின் கதைகளில் வரலாற்று பின்னனியைக்கொண்டு புனையப்பட்ட கதைகள் ஏராளம்.மேற்குறிப்பிட்டதுபோல் வாழ்ந்து மறைந்த கதாபாத்திரங்களை மையப்படுத்தி பெரும்பாலான காமிக்ஸ் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.வரும் நாட்களில் இதற்கென ஒரு தனிப்பதிவிட்டிட வேண்டியதுதான். காமிக்ஸ் ரசிகர்களால் சிரிப்பின் அடையாளமாகிப்போன லக்கி பெயரளவில் மட்டுமல்லாது உண்மையிலேயே லக்கியான நபர்தான்...! - நமது மறுவருகையான  "Come Back Special" - கூட முதல் கதையாக இவரது சாகஸங்களே இடம்பெற்றிருக்கும்.


ஜீனியர் லயனில் (01 ஜனவரி 1987)  லக்கி லூக்கின் அறிமுகப்படலம்.
  
மோரிஸ் & கோஸினி (1957 - 1986):
 மோரிஸின் ஆக்கத்தில் அனைவர் மனதையும் கவர்ந்த நமது கெளபாயின் கிராப், கதாசிரியராக கோஸினியின் கைகோர்ப்பில் புகழின் உச்சத்தைத்தொட்டது.இவர்களிருவரும் சேர்ந்து பணியாற்றிய கதைகள் இன்றளவுக்கும் ஒரு தனித்தன்மை வாய்ந்ததாக லக்கி லூக் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றது.மேலும் இது லக்கி லூக் கதைகளின் பொற்காலம் என்றும் ரசிகர்களால் வர்ணிக்கப்படுகின்றது.லயன் காமிக்ஸ் பிப்ரவரி மாத வெளியீடான ‘ஒரு பட்டா போட்டி’(The Oklahoma Land Rush-1960) சாட்சாத் இவர்கள் இருவரது கைவண்ணமே.ஒரு தலைமுறையை தங்களின் கைவண்ணத்தால் கட்டிப்போட்டது மட்டுமல்லாமல் வளரும் தலைமுறைக்கு தங்களின் படைப்புகளை விட்டுச்சென்றுள்ள இந்த காமிக்ஸ் பிதாமகர்களின் திறமைக்கு ஆழ்மனதிலிருந்து நன்றி கலந்த வணக்கங்கள்.

 “ஒரு ஜெண்டில்மேனின் கதை” -யில் விமர்சனத்திற்குள்ளான பக்கங்கள்.

வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த இவரின் படைப்புகள் சிறப்பானதொரு தேர்வுதானென்றாலும், லக்கி லூக்கின் விசயத்திலும் சின்னதொரு நெருடல் எல்லோர் மனதிலும் இருப்பதென்னவோ உண்மைதான். ஆறாவது விரல் என புகைப்பிடிப்பவர்களால் வர்ணிக்கப்படும் “சிகரெட்”-தான் அது.ஜாலி ஜம்பரும் - லக்கியும் எப்படி இணைபிரியா நண்பர்களோ அதுபோலத்தான் லக்கியும்-லக்கி’யின் வாயில் உள்ள சிகரெட்டும். சமூக ஆர்வலர்களால் அவ்வப்போது விமர்ச்சிக்கப்பட்டாலும் 1968-ம் ஆண்டு மோரிஸ்-கோஸினி ஆக்கத்தில் வெளிவந்த "Le pied tendre"(The Tenderfoot)-ல் கதையின் ஒரு பகுதியாக, நண்பனுடைய இறப்பின் வலியைத்தாங்க முடியாத  லக்கி லூக் புகைப்பதுக்கு தயாராவது போல் வெளியான பகுதிகள், விமர்சகர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.“சிகரெட் புகைப்பதென்பது லக்கியின் காதாபாத்திரத்துடன் ஒன்றியது- பாப்பாய் வாயிலுள்ள  'Pipe'-யைப்போல” என்று விமர்சகர்களுக்கு பதிலலித்தார் மோரிஸ்.குழந்தைகள் உட்பட பலதரப்பட்ட ரசிகர்களைக்கொண்டவர் லக்கி என்பதால், அனைவரது நலனையும் கருத்தில் கொண்டு லக்கி லூக் புகைப்பிடிப்பதை நிறுத்திக்கொண்டார்.


1983-ல் வெளியான The Fingers என்ற கதையிலிருந்து Cigarette-க்கு பதிலாக Straw மாற்றம் செய்யப்பட்டு புத்தகம் வெளிவந்தது.இதற்காக "WHO"-வின் விருதும் மோரிஸ் அவர்களுக்கு கிடைத்தது.தற்போதைய நமது வெளியீடுகளில் லக்கி புகைப்பது போலிருந்தால், அது இதற்கு முந்தைய காலகட்டத்தில் வெளியான புத்தகங்களே.லயன்  காமிக்ஸ் ஆசிரியர் எஸ்.விஜயனும் இந்த மாற்றத்தை பற்றி “Lion New Look Special"ல் “1970களின் துவக்கங்களில் உருவான கதைகள் இவை என்பதால் லக்கியின் உதடுகளில் தம்மாத்துண்டு ‘தம்’ constant ஆக இருந்திடுவதைக்காணலாம்! சமீபமாய் வந்திடும் லக்கி கதைகளில், தலைவர் ‘தம்’மை கைவிட்டுவிட்டு, symbolic ஆக வாயில் ஒரு புல்லினை மேய்வதை கவனித்திருப்பீர்கள்” என குறிப்பிட்டிருப்பார். லக்கி லூக்கின் மாற்றம் குறித்த மோரிஸின் ஓவியத்தையும், நகைச்சுவையுணர்வுடணான ஒரு ரசிகரின் ஓவியத்தையும் பாருங்களேன்.கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய மாற்றம்தான்.
லக்கி லூக்கும் நானும்:
   எனக்கு காமிக்ஸ் அறிமுகமான காலகட்டத்தில் ஏகப்பட்ட காமிக்ஸ் புத்தகங்கள் வந்து கொண்டிருந்தன.ராணி காமிக்ஸ் ரூ.2/- விலையில் மாதமிருமுறை தொடர்ச்சியாக வாங்கிக்கொண்டிருந்தேன்.வரும் நாட்களில் லயன் - முத்து’வின் அறிமுகத்திற்கு பின்னர் பட்ஜெட்டில் துண்டுவிழ ஆரம்பித்தது. புத்தகக்கடைக்குச்சென்றால் நான் வாங்காத பிரதிகள் நிறைய தொங்கிக்கொண்டிருக்கும்.கையில் இருக்கும் பணத்திற்கு என்ன புத்தகம் கிடைகிறதோ அதை வாங்கிவிடுவென் (நான் பணம் என்று குறிப்பிடுவது  ரூ.1.50/- மற்றும் ரூ.2/- யைத்தான்...!). பல நாட்கள் என் கையில் உள்ள பணத்திற்கு தகுந்தாற்போல விலையில் காமிக்ஸ் கிடைக்காது, ஏமாற்றத்துடன் திரும்பிய நாட்களவை.என்னிடமுள்ள ராணி காமிக்ஸின் பிரதிகளை  நண்பர்களுக்கு வாடகைக்கு வாசிக்கக்கொடுத்து காமிக்ஸ் வாங்க பணம் சேமிக்கத்தொடங்கினேன். முகமூடி வீரர் மாயாவி (வேதாளர்) கதைகளுக்கு 40 பைசா, மற்ற கதைகளுக்கு 20 பைசா என்பது வாடகை கட்டணம் என்ற நண்பர்களுடனான உடன்படிக்கையுடன் காமிக்ஸ் கனவை நனவாக்க முயன்றுகொண்டிருந்தேன்.போன புத்தகங்கள் போனதோடு சரி திரும்பி வருவதில்லை என்ற நிலையில் இம்முயற்சியுடன், பல புத்தகங்களையும் சேர்த்து துறக்க வேண்டியதாயிற்று.கையில் கொஞ்சம் கணிசமான சேமிப்பு தேறவே காமிக்ஸ் வேட்டையாட கிளம்பினேன். இந்த முறை என் கையில் நான்கு காமிக்ஸ் புத்தகங்கள், இன்னுமொரு புத்தகம் வாங்க பணம் மீதமிருந்தது, ஆனால் கையிலோ இரண்டு புத்தகங்கள்  ஒன்று மாடஸ்டி (ஆவியின் பாதையில்) மற்றொன்று லக்கி லூக் (மேடையில் ஒரு மன்மதன்). மாடஸ்டியா...? மன்மதனா...? என்ற சிந்தனையில் நான் குழம்பிக்கிடக்க “தம்பி இந்த புக்க எடுத்துக்கப்பா...! இது கலர்ல இருக்கும்...!” என்கிற கடைக்காரரின் அறிவுருத்தலின்படி   கடைசியில் வென்றது மன்மதனே. “மேடையில் ஒரு மன்மதன்” மூலம்  எனக்கு ‘லக்கி லூக்’ என்ற நண்பன் அறிமுகமானது இவ்வாறே.வண்ணத்தில் காமிக்ஸ் புத்தகம் என்றதும், வாங்கிய புத்தகங்களில் முதல் வாசிப்பு லக்கி லூக்’கே.அன்றிலிருந்து இன்று வரை மாத அட்டவனையில் லக்கி இருந்தால் முதல் மரியாதை ஒல்லி பிச்சான் கெளபாய்க்கே என்றாகிப்போனது.

தொடர்ந்த மாதங்களில் “ஒரு கோச் வண்டியின் கதை”- விலா நோகச்செய்யும் நகைசுவைக்கதை.லக்கியின் கதைகளில் நான் அதிகம் ரசித்த கதையும் இதுவே.தங்கத்துடன் சில பயணிகளையும் ஏற்றிக்கொண்டு இலக்கை நோக்கிப்பயணப்படும் கோச் வண்டிக்கு காவலாகச்செல்கிறார் லக்கி.வண்டி இலக்கை எட்டும்முன் அதை கொள்ளையடிக்க பலர் முயல்கின்றனர்.அனைத்தையும் முறியடித்து வண்டி பயண இலக்கையடைய லக்கி மேற்கொள்ளும் சிரத்தைகளை அழகான காமெடித்தோரணமாக்கி கதை பின்னப்பட்டிருக்கும்.புரட்சித் தீ-யை அடுத்த பெரும்பான்மை வாசகர்களின் ஓட்டு இக்கதைக்குத்தானிருக்கும்.


லக்கி லூக் -25:
டிசம்பர் 1971,  ‘லக்கி லூக்’-கின் வயது 25.
  கொண்டாட்டங்களுக்கு தகுதியான நபர்தான்  இந்த “Poor lonesome cowboy". லக்கி லூக்கின் 25 வயது கொண்டாட்டங்களை மேலும் சிறப்பிக்க ஒரு ‘சிறப்பிதழ்’ வெளியிட முடிவு செய்தது ‘Pilote' நிறுவனம்.
December 9, 1971 "Pilote-no:631"
Bretecher, Got, Solé, Gotlin, Druillet, Martial, Briden, Loro போன்றவர்கள் தங்களது கைவண்ணங்களால் இதழை சிறப்பிக்க முன்வர, தங்கக்கல்லறை புகழ் Jean Girad மேலும் ஒரு படி மேலே சென்று நான் ஏன் லக்கி லூக்கை வரையக்கூடாது, எனது பாணியிலான லக்கி லூக்கை அனைவரும் கண்டு ரசியுங்கள் என 'LE-PIED TENDRE' (The Tenderfoot)-ன் பக்கங்களை வரைந்து மோரிஸுக்கு பரிசளித்தார்.இதுவே ‘ஒரு ஜெண்டில்மேனின் கதை’(பக்கம் எண் - 18) என்ற பெயரில் லயன் காமிக்ஸில் வந்தது. பதிலுக்கு மோரிஸ் அவரின் பங்கிற்கு "La Mine de l'Allemand perdu" (The lost Dutchman's Mine - தங்கக்கல்லறை) இதழின் பக்கங்களை Lieutenant Blueberry-க்கு பதிலாக லக்கி லூக் சாகஸம் புரிந்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை கட்டவிழ்த்துவிட அந்த கற்பனையின் அற்புதத்தை  நீங்களே பாருங்களேன்.இந்தப்பக்கங்கள் லக்கி லூக் சிறப்பிதலாக “Pilote" வெளியீட்டு எண்:631-ஆக டிசம்பர் 9,1971-ல் வெளிவந்தது.

Picture 01:Lucky Luke © René Goscinny, Morris and Jean Giraud 1971. 
Picture 02:Lucky Luke © René Goscinny and Morris 1967-1968.

 “ஜீன் கிராடின்” கைவண்ணமும்  - “மோரிஸின்” கைவண்ணமும்
தமிழில் “ஒரு ஜென்டில்மேனின் கதை”  

Picture 01:Lucky Luke © Jean-Michel Charlier and Morris 1971. 
Picture 02:Blueberry © Jean-Michel Charlier and Jean Giraud 1969.

தங்கக்கல்லறையின் பக்கங்கள் “லக்கி லூக்” பாணியில்.
JEAN GIRAD - க்கு மரியாதை:
2001-ம் ஆண்டு மோரிஸின் மறைவுக்குப்பின்னர் லக்கி லூக்’கின் சித்திர பொறுப்பு பிரெஞ்ச் எழுத்தாளரும்-ஓவியருமான Hervé Darmenton (Aka) Achdé விடம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில் 2012 - ம் ஆண்டு மார்ச் 10 அன்று Jean Girad மறைந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், “Jean Girad - Morris" இருவருக்குமான நட்பை சிறப்பிக்கும் விதத்திலும் Achde அவர்களால் ஜீன் கிராடின் "Blueberry's," (கிராடின் ஓவியத்தொகுப்பு) புத்தகத்திலிருந்து இரண்டு ஓவியங்கள் எடுத்து லக்கி லூக்- பாணியில் வரையப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
"Blueberry's", page 39. Acrylic and pen and ink. Poster Ed Stardom,1995.Blueberry, with Pearl,dueling in a saloon... The honor of Achde in his own words:"I had fun in transcribing my way two illustrations of the late Jean in the world of Lucky Luke. A small exercise extrovert style of frameworks "a'laMorris"".
"Blueberry's", page 41. Acrylic and pen and ink. . Poster, Ed Stardom, 1996.Blueberry,.  in Achdé design, are also present the Brothers Dalton, the biggest opponents of Lucky Luke - the saloon cabin.

Source: Afranio Braga and Louis-Hughes Jacquin.
The image source: BDGest: graphics "Blueberry's"Gribouillachde: Achdé drawings.

என்னதான் காமெடி களேபரங்கள் இருந்தாலும் கதையின் இறுதிக்கட்டம் (Frame) ஒன்றுதான். இதுவும் கூட லக்கியின் சிறப்புகளில் ஒன்றே...!இன்னும் பல சிறப்புகளைக்கொண்ட இவரைப்பற்றி தொடரும் பல பதிவுகளில் விவாதிப்போம்.அதுவரை Have a lot fun with Lucky Comic. . . !
- பயணங்கள் தொடரும் . . .