Thursday, January 14, 2016

மேக்னஸ் - ஒரு சித்திர சகாப்தம்


                    தீபாவளி இதழை வாசித்ததிலிருந்தே ஓவியர் மேக்னஸ் பற்றிய ஒரு பதிவிட வேண்டும் என்ற எண்ணவோட்டம் மனதோரம் ஒரு சாரலாய் தூறிக்கொண்டே இருந்தது.அதன் விளைவே இந்தப்பதிவு “மேக்னஸ் - ஒரு சித்திர சகாப்தம்”. மேக்னஸின் சித்திரத்தின் ஆழத்தைப்பற்றியும், தரத்தைப்பற்றியும் நான் இன்னொருமுறை விவரிக்க வேண்டியதில்லை.புத்தகத்தை வாசித்தவர்களுக்கும்,வைத்திருப்பவர்களுக்கும் தெரியும் அது எவ்வளவு பொக்கிக்ஷமானது என்று.


ஓவியங்கள் ஏன் ஓவியமாகின்றது: 
 ஓவியங்கள்தான் என்னை சென்னை கொண்டுவந்து சேர்த்தது.சிறு வயதிலிருந்தே ஏதாவது வரைந்துகொண்டே இருப்பேன்.நான் வரைவதைப்பார்த்த எனது அப்பாவின் நண்பர் ஒருவர் “உங்க பையனை சென்னைல ஓவியக்கல்லூரில சேர்த்துவிடுங்க, பய நல்லா படம் போடுறான்” என அப்பாவிடம் சொல்ல, அவரும் பார்க்கலாம் என்று சொல்லி வைத்தார்.பின்னாட்களில் திரைப்பட இயக்குனராவதுதான் லட்சியம் என்ற வெறியோடு ஒருவழியாக சென்னை வந்து சேர்ந்தேன். சென்னைக்கு வந்த புதிதில் அடையாறில் தங்கியிருந்தேன், கொடைக்கானலின் அமைதிக்கும்-சுகாதாரத்துக்கும் சற்றும் பொருத்தமில்லாத நேர்மாறான சென்னையின் சுற்றுசூழலமைப்பு  என்னை  கொஞ்சம் திணறடிக்கத்தான் செய்தது.நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக  சென்னையையும் அது அறிமுகப்படுத்திய மனிதர்களையும் புரியக்கற்றுக்கொண்டேன்.கணக்கிலடங்கா ஓவியர்களுடனும் அறிமுகமாகி பழகிக்கழித்தாயிற்று.சிலபேரை மறக்கமுடியாது, மன்னிக்கவும் மறக்கவேமுடியாது.

  •  Watchman-ஆக அறிமுகமாகி சிறந்த ஓவியனாக புரிந்து-தெரிந்து கொண்டு அதை வெளியுலகிற்கு கொண்டு வரும் முன் இறந்துபோன பாண்டி அண்ணாவிற்கு அவரிடம் ஒரு அசாத்திய திறமை இருப்பது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை,நெருங்கிப்பழகியவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்பிருந்தது.
  • அடையாறின் இந்திரா நகர் நூலகத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம். ஒரு நாள் வழக்கமாக நான் கடந்து செல்லும் வழியிலுல்ல சுவர் வழக்கத்தை மீறி என் கவனத்தை ஈர்த்தது,காரணம் எப்போதும் அழுக்காக காணப்படும் அந்த சுவரில் கரித்துகள்களாலும்,சோப்புக்கட்டிகளாலும், சாக்பீஸ் துணுக்குகளையும் கொண்டு தென்னைமரம், ஒரு சிறிய பாலம், ஒரு அழகிய குடிலை உள்ளடக்கி சூரிய உதய Lighting-உடன் கூடிய இயற்கைக்காட்சி ஓவியம் மிக நேர்த்தியாக வரையப்பட்டிருந்தது.அந்த ஓவியத்தை வரைந்த நபரை சந்திக்க விரும்பி தேடத்தொடங்கினேன். ஆங்காங்கே அவ்வப்போது சில  சுவர்களில் திடீரென்று தோன்றும் இந்த ஓவியங்கள் யாரால் எப்போது வரையப்படுகின்றது என்பது பார்க்கும் அனைவருக்கும் பொதுவான கேள்வியாக இருந்தது. தேடும்போது கிடைக்காமல் யதார்த்தமாக ஒரு நாள் ஒரு ஆதரவற்ற சுவரை தன் இயற்கை காட்சியால் அழகுபடுத்த தயாராகிக்கொண்டிருந்த அந்த கலைஞனையும் சந்திக்க நேர்ந்தது.(நான் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் சந்திப்பு . . . !)அவன் ஓவியத்தில் இருந்த நேர்த்தி அவனிடமுமில்லை, கிழிந்த அவன் உடைகளிலுமில்லை - அவன் கண்களைத்தவிர.அந்த கலைஞன் ஓவியம் வரைய சுவர்களை சுத்தப்படுத்தியது ஒரு தாய் மண்ணில் விளையாடிய தன் குழந்தையை, புத்தாடை அணிவிப்பதற்காக நீரில் கழுவி தயார்படுத்துவதை போலிருந்தது.வரைந்து முடிக்கும்வரை மொளனித்திருந்தேன். அதே ஓவியம், நிறக்கலப்பில் மட்டுமே வித்தியாசம். அதே நேர்த்தியுடன் ஒரே ஓவியத்தை பல தடவை எந்தவித அலுப்புமில்லாமல் அவரை வரையத்தூண்டுவது எது? அவரிடம் பேச முயன்று தோற்றுப்போனேன்.அவருக்கு ஏதாவது பண்ணவேண்டும் என்ற எண்ணம் உந்தித்தள்ள ஒரு நூறு ரூபாயை எடுத்து அவரிடம் நீட்டினேன், என்னையும்-பணத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார்.ஏறத்தாழ இரண்டு நிமிடங்கள் நீடித்த இந்த நிகழ்வை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்தவனாய், பணத்தை கையில் மடித்துக்கொண்டு குற்றவுணர்ச்சியுடன் விருவிருவென நடையைக்கட்டினேன் . எதிர்ப்பட்ட டீக்கடையில் ஒரு டீ வாங்கிக்கொண்டு வேகமாக அவரிடம் கொடுக்க வந்தேன்- அவரில்லை, சுவற்றில் அந்த கலைஞன் விட்டுச்சென்ற கலையின் மிச்சம் அத்தனையும் என்னைப்பார்த்து  ஏளனம் செய்வதான பிரம்மை இன்னமும் என்னைவிட்டு நீங்கவில்லை.
  • கோடீஸ்வரக்கடவுள் ஏழுமலையானை பலவண்ணங்களில் ராயப்பேட்டை மருத்துவமனை பேருந்து நிருத்தத்தில் கொண்டு வந்து நிருத்திருந்தார் ஓவியர் சாமி. “எங்கப்பா சாமி படம் போடுறவரு,ஊருல இருக்கிறதுல முக்காவாசிபேரு வீட்ல அவரு வரஞ்ச படந்தான் இருக்கும்.அவருட்டர்ந்து கத்துகிட்டதுதான் இதெல்லாம்.இதுலதான் பொழப்பு ஓடிட்ருக்கு, என்ன ஒரே வித்தியாசம் எங்க அப்பனாரு சாமிய வீட்டுக்குள்ள கூட்டிபோனாரு நான் ரோட்டுக்கு கூட்டியாந்திருக்கேன் அவ்வளவுதான்”.என்றவரிடம் “ஏன் நீங்க உங்கப்பா பண்ணதையே பண்ணலாமே? என கேட்க, “எங்க தம்பி ஃபிளெக்ஸ்ன்றான் - பிரிண்டிங்றான், முன்ன மாதிரி இல்ல தம்பி...!” என்று கூறிவிட்டு, ஏதோ மறந்தவராக “ரோட்ல போட்ருக்கேனே இந்த படம் படமாதான் தெரியுதில்லையா ஏன்?” தெரியாது என்று தலையசைத்து வைக்க “பணம் சம்பாரிக்கத்தான்” என்றார் பெருஞ்சிரிப்புடன்.
  3D படம் வரையும் ராம்தாஸ் அண்ணன்,கஞ்சா அடிக்க காசு சேர்க்க 'Portrait'-வரையும் கொடைக்கானல் தாமஸ் அண்ணன், சுவரில் கட்சித்தலைவர்களை வரைந்து கொண்டே “பிக்காஸோவைப்”-பற்றி பேசும் ஆறுமுகம் என பட்டியலிட்டால் எழுதிக்கொண்டே போகலாம்.மேக்னஸைப்பற்றிய பதிவில் இவர்களைப்பற்றி நான் குறிப்பிட்டதற்கு காரணம், இவர்களும் ஓவியர்கள் என்பதோடு - என்னுள்ளான இவர்களின் தாக்கம் தான்.

எமனின் வாசலில் (La Valle Del Terrore):
      புத்தகத்தை திறந்ததும் நேராக படிக்க ஆரம்பித்தது “எமனின் வாசலில்”-கதையைதான், காரணம் மேக்னஸ்.கதையொன்றும் ஆஹா-ஓஹோ ரகமில்லையென்றாலும், பக்கத்திற்கு பக்கம் மேக்னஸின் அபார உழைப்பால் இழைக்கப்பட்டிருப்பதென்னவோ! மறுக்க இயலாத உண்மை.

            வழக்கமான டெக்ஸ் கதை.ஒற்றை வரியில் சொல்வதானால் “எச்சரிக்கை முத்திரை குத்தப்பட்டு  அதன் தொடர்ச்சியாக எச்சரிக்கப்பட்ட நபர்கள் கொல்லப்பட்டுவரும் ஒரு பள்ளத்தாக்கின் மர்மத்தை வில்லரும் - கார்ஸனும் கட்டவிழ்ப்பதே கதை”.இக்கதையின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அவ்வளவு அழகாக செதுக்கப்பட்டிருக்கும்.

மேக்னஸின் கைவண்ணத்தில் “எமனின் வாசலில்”- கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்.


         எமனின் வாசலில் - தனிப்புத்தகமாக Hardbound அட்டையில் வெளியிட்டு மேக்னஸிற்கு நியாயம் செய்திருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.மேக்னஸ் இறந்தும், புத்தகம் வெளியாகியும் இருபது வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் நம் கையில் வாசிக்க கிடைத்திருக்கிறது.இதே வேளையில் மேக்னஸின் இருபது வருட நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக அவரது பல்வேறு - கிட்டத்தட்ட 140 விதமான படைப்புகளின் கண்காட்சி 2015 டிசம்பர் 22 முதல் 2016 ஜனவரி 06 வரை  இத்தாலியில் நடைபெற்று முடிந்திருக்கிறது.
மேக்னஸின் தூரிகை ஜாலம்

இக்கதையின் சித்திரங்களை முடிக்க  மேக்னஸிற்கு முழுதாக ஏழு வருடங்கள் ஆகியிருக்கின்றது.கல்லீரல் புற்றுநோயுடன் போராடிக்கொண்டிருந்தவர் 1996-ம் ஆண்டு, அதாவது புத்தகங்கள் வெளிவருவதற்கு சில மாதங்கள் முன்னராக காலமானார்.எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் தமது படைப்பின் மூலம் வலம் வரும் மேக்னஸ் நம் மனதிலும், உலக காமிக்ஸ் ரசிகர்கள் மனதிலும் என்றென்றும் வாழ்வார் அதுவே அவரது சாதனையும் கூட.RIP-MAGNUS.

மேக்னஸிற்கு நமது வாசகர்களின் சார்பாக டெக்ஸ் வில்லர் - கார்ஸனின் அஞ்சலிகள்.

- பயணங்கள் தொடரும்



7 comments:

  1. @சண்முக சுந்தரம்

    நீங்க ஒரு ஓவியரா...? மலைபிரதேசத்தில் இருந்து சென்னை பட்டிண வாழ்க்கை...ம்..வடதுருவத்தில் இருந்து தென்துருவ பயணம்..!

    உங்கள் ஓவியதேடல் சொல்லும் மெல்லிய சோகம் சொல்லும் செய்தி : ஓவிய திறமைகள் தெருவில் விடப்பட்டனவோ என எண்ண தோன்றுகிறது..! சுவையான சென்னை பயணத்தை பகிருங்கள், தொடர்கிறேன்..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே... ஓவியம் தெரியும் நண்பா. ஆனால் ஓவியம் எனது Profession அல்ல. நமது நாட்டில் ஓவியர்களுக்கு சரியான அங்கிகாரமென்ன, மரியாதை கூட கிடைப்பதில்லை என்பதே எனது வருத்தம்.

      Delete
  2. Very Nice post.. Disappointing to know about the unrecognized artists in our state.. Nice info about Magnus. I would love to see art related posts of our releases

    ReplyDelete
  3. Arumaiyana pathivu.... padikumpothe kangal eramahindrathu ....

    ReplyDelete
  4. Now I am reading " yemanin vasalil " TeX willed story , I am really stunned by the art work, thanks for giving more information about magnus ,please write regularly, thank you , ganesh kumar. Bodinayakanur.

    ReplyDelete