Wednesday, October 28, 2015

காமிக்ஸ் - ஒரு முடிவில்லா தேடல்

நண்பர்களுக்கு வணக்கம், சாகஸ வீரர் ரோஜர், வேய்ன் ஷெல்டன்,டெக்ஸ் வில்லர், கமான்சே,மாடஸ்டி என இந்த வருட விருந்தே இன்னும் பாக்கியிருக்க, நாம் 2016-ம் வருட சந்தாவை புதுப்பிக்க ஆரம்பித்து விட்டோம் - உண்மையில் மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றது(ஜனவரி 2012 B.C.[Before Comics] ஆண்டுக்கு முந்தைய சூழலை நினைத்துப்பாருங்கள், உங்கள் மனமும் குதியாட்டம் போடுவது உறுதி).2002 - ம் ஆண்டு சென்னை புதுக்கல்லூரியில்(The New College), இளங்கலைப்பயில வந்து சேர்ந்ததில் இருந்து எனக்கும் காமிக்ஸ்-க்குமான இடைவெளி கொஞ்சம்,கொஞ்சமாக நீண்டுகொண்டே வந்து ஒரு கட்டத்தில் நின்றே போனது.சற்றே பெரிய இடைவெளிதான் கிட்டத்தட்ட 10 வருடங்கள்.ஒரு காலகட்டத்தில் திடீரென ஞானோதயம் வந்தவனாய் காமிக்ஸை தேடத்தொடங்கினேன்.இடைப்பட்ட காலத்தில் நடந்த சம்பவங்களைப் பகிர்ந்துகொள்வதே இந்தப்பதிவின் நோக்கம். 

கல்லூரியும் காமிக்ஸிம்:
   நான் கல்லூரியில் சேர்ந்திருந்த காலகட்டத்தில்தான் நமது லயன் - முத்து காமிக்ஸின் வெளீயீடுகள் ரொம்பவே குறையத்தொடங்கிருந்தன.ராணி காமிக்ஸ் மட்டும் சரியாக வந்துகொண்டிருந்தது. ராணி காமிக்ஸிம் அட்டைப்படங்கள் முதல் கதைகள், மொழிபெயர்ப்பு என ஒட்டுமொத்தமாக சொதப்பி கடையை மூடியதும் இத்தருணத்தில்தான். ஆடிக்கொன்றும் அமாவாசைக்கொன்றுமாக வந்துகொண்டிருந்த லயன் - முத்து காமிக்ஸிம் ஒரு புத்தகத்திற்கே ஒன்றிரண்டு மாதங்கள் புத்தகக்கடைக்கு அலையவிட்டுக்கொண்டிருந்தனர். அடித்து பிடித்து வரும் புத்தகங்களை, படிக்க எடுத்தால் கல்லூரி நண்பர்கள் “இன்னூமாடா மாப்ள , காமிக்ஸெல்லாம் படிக்கிற என்பார்கள்...?” தவிர  60 சதவீதம் நண்பர்களுக்கு “இரும்புக்கை மாயாவி” பற்றி தெரிந்திருந்தது.புதிய சூழல்,நட்பு வட்டம், காமிக்ஸ்-கள் சரிவரக்கிடைக்காத நிலை என அனைத்தும் சேர்ந்து காமிக்ஸ் எனும் உயிர்நண்பனை ஏறத்தாழ நினைவில் இருந்து அகற்றியிருந்தன...!.அவ்வப்போது ஊருக்கு வரும்போது ஒருசில புத்தகங்களைப்படிப்பதும், உன் புத்தக அட்டைப்பெட்டி ஃபுல்லா பூச்சி அரிச்சுட்டு இருக்குடா... நான் என்ன பண்ணட்டும்? என்று அம்மா தொலைபேசியில் பேசும்போதும், பால்ய நண்பர்கள் சிலரிடம் பேசும்போதும் மட்டுமே காமிக்ஸ் நினைவில் வந்துசென்றது.

ஒரு தேடலின் ஆரம்பம்:
   கல்லூரி முடித்து,ஒரு வேலை தேடி அந்தவேலையில் ஒருவன் தன்னை
நிலைநிறுத்திக்கொள்வதற்குள் விதி அவனது வாழ்க்கையில் கபடி முதல் காபரே வரை ஆடித்தீர்த்திருக்கும்,அடியேனும் அதற்கு விதிவிலக்கல்ல .எல்லாம் அமைதியாக அமைந்த ஒரு ஞாயிறு மாலையில் வலைப்பக்கங்களில்(Internet) மேய்ந்து கொண்டிருக்கும்போது கண்ணில் ஒருசில காமிக்ஸ் வலைப்பூக்கள் தென்பட்டன.கண்களில் ஆர்வமும், கைகளில் உற்சாகமும் தொற்றிக்கொள்ள அன்றிரவு முழுவதும் வலைப்பூக்களில் மூழ்கிக்கிடந்தேன். “காமிக்ஸ் கிடைக்காத காலகட்டத்திலும், தங்கள் வலைப்பூக்களின் மூலம் காமிக்ஸ் - காதலை உயிர்ப்புடன் வைத்திருந்த”மைக்கு வலைத்தள நண்பர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்.

   திரும்பவும் காமிக்ஸ் தேடல் ஆரம்பமானது.வலைத்தளத்தில் ஆரம்பித்து பழைய புத்தகக்கடைகள், நண்பர்கள், லெண்டிங் லைப்ரரிகள்,பதிப்பகங்கள் என வெறித்தனமாக ஒன்றிரண்டு மாதங்கள் தேடியதன் பலனாக ஒரேயொரு புத்தகம் . . . . ! (அட உண்மையாதாங்க) மாடஸ்டி’யின் “காட்டேரிக் கானகம்”  கிடைத்தது.அதன் மூலமே இரத்தப்படலம் முழுத்தொகுப்பு வந்த விக்ஷயமும் தெரிந்தது. லயன் அலுவலகத்திற்கு ஃபோன் செய்து கைவசம் உள்ள அனைத்துப்பிரதிகளையும் வாங்கியபிறகே உறக்கம் வந்தது.சூட்டோடு சூடாக ஊருக்கு சென்று அனைத்து புத்தககங்களையும் தூசிதட்டி, சுத்தம் செய்து  அடுக்கி வைத்த பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டேன். 2012-ம் ஆண்டு லயனின் மறுவருகையான “Lion Come Back Special"-ல் இருந்து ஆட்டம் ஆரம்பம்தான். இருந்தாலும் வேலை பளு + இன்னபிற காரணங்களால் அந்த வருட சில முக்கிய வெளீயீடுகளும் missing. அதன் பின்னர் சந்தா தவறாமல் கட்டுவது தனிக்கதை.இன்னும் பழைய புத்தகங்களை நண்பர்கள் மூலமாகவும் இன்னும் ஏதோவொரு வழியிலும் நான் மட்டுமல்ல நாம் ஒவ்வொருவரும் தேடிக்கொண்டே இருக்கிறோம் . . . ஆம் இது ஒரு முடிவில்லா தேடல் தான் நண்பர்களே . . .!.
 என் பெயர் டைகர்!
   விடைபெருவதற்கு முன்பாக "Mike.S.Bluberry" (A) "கேப்டன் டைகர்”-ரின் விசிறி என்கிற வகையில் சிறியதொரு நினைவூட்டல் பட(ல)ம். முன்பதிவிற்கு கீழே உள்ள Link-யை க்ளிக் செய்யவும்.

“என் பெயர் டைகர்” முன்பதிவிற்கு கிளிக் செய்யவும்

மீண்டுமொரு புதிய பதிவில் சந்திப்போம் நண்பர்களே. Thank You Folks . . .
- தேடல் தொடரும்...
0000
ன் 

Tuesday, October 20, 2015

விரியனின் விரோதி - ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில்

   வணக்கம், மீண்டும் ஒரு புதிய பதிவுடன் நண்பர்களைச்சந்திக்கிறேன்.ஒரு உண்மையைச்சொல்வதானால் இந்த தளத்திற்கு தாங்கள் தந்த ஆதரவும், பின்னூட்டங்களும், சில-பல புதிய நட்புக்களும் என ஆரம்பித்த நாளில் இருந்தே இந்த வலைப்பக்கம் மூலம் எனக்கு ஏற்பட்ட புதிய அனுபவங்களுமே என்னைத்தொடர்ந்து எழுதத்தூண்டுகின்றன. எனவே இப்பதிவு இங்கு வருகை தந்த (தரும்) நண்பர்களுக்கான “SPECIAL" பதிவு. (பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தியவர்களுக்கும், மெளனப்பார்வையாளர்களாகவே இருந்து ஆதரவு கொடுப்பவர்களுக்கும் மற்றும் அனைவருக்காகவும்).

   நான் மிகவும் ரசித்துப்படித்த காமிக்ஸ்-களைப் பற்றிய கருத்துக்களை எனது பார்வையில் தங்களுக்கு வழங்கலாம், என்ற முறையில்  எனது முதல் “விமர்சனப்பதிவு”-யைத் துவக்குகிறேன்.சென்ற ஆண்டு நாம் படித்து ரசித்திட்ட “விரியனின் விரோதி”-தான் எனது முதல் களம் (கதை என்பதைவிட களம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து).


   “சூழ்நிலைதான் ஒரு மனிதனை உருவாக்குகிறது” என்பது எத்தனை நிஜம் என்பதை பல சந்தர்ப்பங்களில் நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் உணர்ந்திருப்போம்.அவ்வாறு  சூழ்நிலையின் காரணமாக கொலையைத் தன் தொழிலாக ஏற்றுக்கொண்ட ஒரு ‘தொழில்முறைக் கொலையாளி’-யின் கதைதான் “விரியனின் விரோதி” (The Mongoose). XIII,ஸ்டீவ் ரோலாண்ட், கர்னல் ஆமோஸ், சார்ஜெண்ட் ஜோன்ஸ் என பலதரப்பட்ட கதாப்பாத்திரங்களையும், XIII கதைதொடர் என மற்ற அனைத்தையும் மறந்துவிட்டு, “த மங்கூஸ்” என்றறியப்படும் வஞ்சிக்கப்பட்ட தொழில்முறைக் கொலையாளி ஒருவனைப்பற்றிய கதையாக, என் விமர்சனத்தைப்பதிவிடுகிறேன்.

த மங்கூஸ்
   Flashback - யுக்தியில் சொல்லப்படும் இக்கதையை பொதுவாக “க்ஷ்ரைனர் - ஜான் ஸ்மித் - த மங்கூஸ்” என மூன்று EPISODE - களாக பிரித்துக்கொள்ளலாம்.
I).க்ஷ்ரைனராக வேப்பருடன்.
II).க்ஷ்ரைனராக ஹான்ஸிடம் சென்று ஜான் ஸ்மித்தாக மெருகேறுவது.
III).ஹான்சிடமிருந்து முழுமையாக மங்கூஸாக உருப்பெறுவது. 



க்ஷ்ரைனர் - வேப்பர்
   அக்டோபர் 08,1947-ல் பெர்லினில் இரக்ஷ்யர்கள் ஆக்ரமித்துக்கொண்டிருந்த பகுதியில் கதை ஆரம்பமாகின்றது. தச்சர் வேபரின் பராமரிப்பில் வளர்கிறான் க்ஷ்ரைனர் (யுத்தத்திற்கு முன்னராக ஒரு அனாதைகள் அமைப்பின் மூலம் வேபரிடம் ஒப்படைக்கப்படுகிறான் க்ஷ்ரைனர்).சொந்த மகனைப்போல் க்ஷ்ரைனரிடம், வேபர் காட்டிய அன்பும்-அரவணைப்பும், அவர் மீது விவரிக்க இயலாத பாசத்தையும், பக்தியையும் க்ஷ்ரைனருக்குள் கொண்டுவருகிறது.


   க்ஷ்ரைனரின் வாழ்வில் மாற்றத்தைக்கொண்டுவரும் நாளும் உதயமாகின்றது.ரக்ஷ்யர்களால் வேபரும்,க்ஷ்ரைனரும் தாக்கப்பட உதவிக்கு வந்து சேர்கிறார் ஹான்ஸ்.மூன்று கொலையில் முடிந்த அந்த நிகழ்வு தற்செயலானது அல்ல என்பதும்,வேபர்தான் சூழ்நிலையின் உக்கிரம் புரிந்துகொண்டு தற்காப்புக்காக ஹான்ஸை அமர்த்தியிருக்கிறார் என்பதும் பின்னாட்களில் க்ஷ்ரைனருக்கு தெரிய வருகிறது.ஹான்ஸின் செயல்வேகமும், அவர் எதிரிகளைக்கையாண்ட விதமும் க்ஷ்ரைனரை வெகுவாகக் கவர்கின்றது.தன் வாழ்க்கைப்பாதையை மாற்றப்போவது ஹான்ஸ்-தான் என்ற உண்மை க்ஷ்ரைனருக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லைதான்.
      அங்கிருக்கும் பொருட்களைக்கொண்டே ஹான்ஸ் எதிரிகளைச்சமாளித்த விதம் சிறுவனான க்ஷ்ரைனரை வியப்பில் ஆழ்த்துகிறது.  “சில்லரைப் பொறுக்கிகள்தானே . . . ? கோழியை அடிக்க குறுந்தடி எதற்கு? என்று நினைத்தார் போலும் . . . ! ஹான்ஸ் இங்கே வந்தபோது எதையுமே எடுத்துக்கொண்டு வரவில்லை.ஹாய்யாக கையை வீசிக்கொண்டுதான் வந்திருந்தார். . . .” என்று ஹான்ஸைப் பற்றிய க்ஷ்ரைனரின் வர்ணனை, ஹான்ஸ் அவன் மீது ஏற்படுத்திய தாக்கத்தையும் ஹான்ஸின் மீதுள்ள அபிமானத்தையும் பிரதிபலிக்கின்றது.தேவையான சூழ்நிலையில் கிடைத்தப்பொருட்களை ஆயுதமாக்கிக்கொள்ளும் லாவகமும்,நுணுக்கமும் க்ஷ்ரைனருக்கு அப்போதே உரைப்பது கதாசிரியராலும்,ஒவியராலும் நளினமாக அடிக்கோடிடப்படுகிறது.

   பிரச்சினையின் உக்கிரம் தீவிரமாகவே, க்ஷ்ரைனரை 300 டாலர்கள் செலவு செய்து அமெரிக்காவிற்கு அனுப்புகிறார் வேப்பர்.தான் அங்கே காலூன்றியதும் வேபரை அழைத்துக்கொள்வது என்கிற வாக்குறுதியுடன் அமெரிக்கா செல்கிறான் க்ஷ்ரைனர்.கட்டிட வேலை செய்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் க்ஷ்ரைனருக்கு, வேபரிடமிருந்து அவசர தொலைபேசி அழைப்பு வருகின்றது, “இவர்களுடைய ஆயுதங்களைப் புதைத்து விடுங்கள், குறிப்பாக விற்க முயற்சிக்காதீர்கள்... மாட்டிக்கொண்டுவிடுவீர்கள் . . . !” என்ற ஹான்ஸின் எச்சரிக்கையை மீறி, துப்பாக்கியை விற்று 300 டாலர்கள் பெற்றதன் விளைவாக 3 ரக்ஷ்யர்கள் பற்றிய உண்மை வெளிவர வேப்பர் தேசத்துரோக வழக்குப்பதியப்பட்டு குற்றவாளியாகின்ற உண்மை க்ஷ்ரைனருக்குத் தெரியவருகின்றது.
   அதிகாரிகளுடனான பேரம் டாலர்களில் பேசப்படுகின்றது.கிடைக்கும் வருமானம் சொற்பமே. பணம் . . . ! குறுகிய காலத்தில் பணம், சம்பாதிப்பதற்கான வழி. . . ? க்ஷ்ரைனர் அதிகம் யோசிக்கவில்லை.காலம்...! அது திட்டமிட்டபடி  அவனை “ஹான்ஸ்”-சிடம் இழுத்துச்செல்கின்றது.க்ஷ்ரைனரின் யோசனையெல்லாம் ‘வேபர்’  விடுதலைப்பற்றியும் - அதற்கான டாலர்களைப் பற்றியுமே இருந்தது.

க்ஷ்ரைனர் - ஹான்ஸ் - ஜான் ஸ்மித்
    வேபரின் வழிகாட்டுதலின்படி, ஹான்சின் வழக்கமான வழிமுறைகளைக் கண்டறிந்து அவனைச் சென்றடைகிறான் க்ஷ்ரைனர்.தனது தேவைகளைப்பற்றியும்,நீ செய்த குற்றத்திற்கு வேப்பர் தண்டனை அனுபவித்து வருகிறார் என்றும் இன்னும் சிலபல வாக்குவாதங்களின் முடிவில் ஹான்ஸ், க்ஷ்ரைனரை தனது சிக்ஷ்யனாக ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்குகிறது.(ஹான்ஸ் தொழிலை விரும்பி விடவில்லை என்பதும்,தான் இழந்த ஒரு கையாக க்ஷ்ரைனரை பயன்படுத்திக்கொள்வதும் க்ஷ்ரைனர் விரும்பியதும் அதைத்தான் என்பதும் கதையின் போக்கில் சொல்லப்படுகிறது).


 தொடரும் நாட்களில் தொழிலின் ஆட்ட விதிமுறைகளை ஒவ்வொன்றாக கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கிறார் ஹான்ஸ்.
1.முதல் கொலை - பயத்தைப்போக்கும் 
  முதல் கொலை முடிந்த அன்றிரவே க்ஷ்ரைனர் தன் தலைமுடியை நீக்கிவிட்டு மங்கூக்ஷின் பிரத்யேக அடையாளமான மொட்டைத்தலைக்கு மாறுகின்றான்.
2.கிக்-பாக்சிங்
  கிக்-பாக்சிங்’கில் கடும்பயிற்சி தரப்பட்டது.விரியன்களையும் வெற்றிபெறலாம் இரைக்கும்-வேட்டையனுக்குமிடையேயான மெல்லிய வேற்றுமையான “மரண பயத்தை” புரிந்துகொண்டால் என்கிற அறிவுரையோடு.
3.சுடும் பயிற்சி
 வயலின் வாசிப்பது போன்ற அன்றாட நிகழ்வாக இருக்க வேண்டும் என்ற கட்டளையுடன் சுடுவதில் கடும் பயிற்சி தரப்படுகிறது.
4.அடிப்படை நிபந்தனைகள்
  எதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்,கட்டிடக்கலை, மனித உடற்கூறு, எந்த ஒரு சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் லாவகம் என இன்னும் பல வழிமுறைகளில் பயிற்சி தொடர்கிறது.பயிற்சியின் முடிவில்  “நீ ஒரு தொழில்முறைக்கொலையாளி ஆதாயம் தரா எந்தவொரு கொலைமுயற்சியிலும் நீ ஈடுபடக்கூடாது” என்கிற அடிப்படை நிபந்தனையுடன் க்ஷ்ரைனர் பயிற்சியில் தேர்ந்ததாக ஹான்ஸ் அறிவிக்கிறார்.(இந்த அடிப்படை பாடம்தான் கப்பலில் ‘கிம் ரோலண்டை’ உயிருடன் விட்டுச்செல்ல மங்கூஸைப் பணிக்கிறது).


  க்ஷ்ரைனரின் புது அவதாரம் ஜான் ஸ்மித்தாக ஆரம்பமாகிறது.எண்ணற்ற வாடிக்கையாளர்கள், பலதரப்பட்ட காரணங்கள், தடயமில்லா சம்பவங்கள், காரணங்களை கண்டறிய இயலா மரணங்கள்( இதுவே மங்கூஸின் அடையாளம்) என அவனுடைய வளர்ச்சி வாழ்வின் இருவேறு பக்கங்களை வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பைத்தருகின்றது.வெண்டியுடனான காதல் அறிமுகமானதும் இந்த காலகட்டத்தில்தான்.

ஹான்ஸ் - மங்கூஸ்
   ஹான்ஸிற்கு ஒரு பெரிய ஒப்பந்தத்திற்கான அழைப்பு வருகின்றது.அமெரிக்கா பிரஸிடெண்ட் க்ஷெரிடனைக்கொல்ல வேண்டும்,கூலியாக 2 மில்லியன் டாலர்கள் தொகை பேசப்படுகிறது.எவரையும் சபலப்படுத்தும் தொகைதான்...!முதல் முறையாக “கிம் ரோலண்டை” சந்திக்கிறான் மங்கூஸ். அவர்களுக்கு மங்கூஸ், ஹான்ஸ் மட்டுமல்லாது வேபர் உட்பட அனைத்து சங்கதிகளும் தெரிந்திருக்கின்றன(உபயம் - வெண்டி) . பணத்தைத்தவிர வேபரின் விடுதலையும் கூடுதல் ஆதாயமாக மங்கூஸ்க்கு கிடைக்கின்றது.இதை ஹான்ஸிடமிருந்து மறைக்கும் சூழல் மங்கூஸிற்கு உருவாகின்றது.


இவையனைத்துமே தங்களை சிக்க வைக்க பின்னப்பட்ட சதிவலை என்பதை உணருமுன் அனைத்துமே நடந்துவிட்டிருக்கிறது.
உண்மையனைத்தையும் உணர ஹான்ஸின் உயிரை விலையாக கொடுக்கவேண்டியிருக்கிறது.இழப்பைச்சரிகட்ட காரணமாணவர்களை பழிவாங்க புறப்படுகிறான் மங்கூஸ்.
ஒரு ரசிகனாக . . .
   ஒரு அகாலவேளையில் இரயில்வே ஸ்டேக்ஷனில் தன் முதல் கொலையை வெற்றிகரமாக முடித்து, யாருக்காக இந்த கொலைத்தொழிலுக்கு மங்கூஸ் நுழைகிறானோ,அவரே (வேபர்) மங்கூஸைப்பற்றிய உண்மையறிந்து இரயிலில் விழுந்து தன் உயிரை மாய்த்துக்கொள்வது விதியின் குரூர விளையாட்டு. . . ! வாழ்க்கையின் யதார்த்தம், எப்பேர்ப்பட்ட மனிதனையும் நெற்றிப்பொட்டில் அடிக்கும் என்று சொல்லாமல் சொல்கின்றது இந்த முரண். கதாசிரியருக்கு ஒரு க்ஷொட்டுக்கள்.

 “விதியின் குரூர விளையாட்டு”

 ஹான்ஸ் முதல் கொலைக்கு ஆயுதமாக கொடுத்தனுப்புவது “ஸ்குரு டிரைவர்”. (ஹான்சின் மதிநுட்பம் இந்த இடதில் கதாசிரியரால் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது - பெர்லினில் 3 ரக்ஷ்யர்களிடம் ஹான்ஸ் சண்டையிட்டுக்கொண்டிருக்கும்போது க்ஷ்ரைனர் தன்னை தற்காத்துக்கொள்ள பயன்படுத்துவது “ஸ்குரு டிரைவர்”-ஜத்தான்.கப்பலில் கிம் ரோலண்டிடம் நடக்கும் மோதலில் ரோலண்ட் தற்காப்பிற்காக மங்கூஸை தாக்க பயன்படுத்தும் ஆயுதம் வேறு என்றாலும் அதன் தாக்கம் முன்பு நடந்த சம்பவங்களை பிரதிபலிக்கிறது. ( அந்த தாக்குதலின் விளைவாகவும் மங்கூஸ் தான் இரை-யாக இருக்கும்போது இருந்த மனநிலை + அடிப்படை விதிகள் இவற்றையும் கருத்தில்கொண்டு கிம் ரோலண்டை உயிருடன் விட்டுச்செல்கிறான்).
இந்தக் கதையில் “ஸ்குரு டிரைவர்” கூட ஒரு கதாபாத்திரம் தான்.
மொத்தத்தில் காமிக்ஸ் ரசிகர்களுக்கான ஒரு விருந்து இந்த “விரியனின் விரோதி”(The Mongoose).இந்த புத்தகத்தைப்படிக்காதவர்கள் விரைவில் படிக்க முயற்சி செய்யுங்கள்.படித்தவர்கள் திரும்ப ஒரு முறை படித்துப்பாருங்கள்.இந்த புத்தகத்தை வாங்க விரும்புபவர்கள் இந்த இணைப்பை கிளிக் செய்யவும் “Viriyanin Virodhi Online Purchase".விரைவில் மீண்டும் ஒரு புதிய பதிவுடன் விரைவில் சந்திப்போம் நண்பர்களே. . . ! நிறை,குறைகளை சுட்டிக்காட்டுங்கள் நண்பர்களே.
- பயணம் தொடரும்.

Sunday, October 11, 2015

காமிக்ஸ். . . காமிக்ஸ். . .

              வணக்கம் நண்பர்களே, தங்களின் நல்லாதரவுக்கு நன்றிகள்.இப்பதிவில் நான் Design செய்த சில அட்டைப்படங்களை பதிவிடுகிறேன். இவற்றுள் சில நம் லயன் காமிக்ஸில் பின்னட்டைகளாக பிரசுரம் ஆகியுள்ளன.

 டேஞ்ஜர் டயபாலிக்:  நீண்ட நாட்களுக்கு பிறகு ‘டயபாலிக்’-கின் மறுவறுகை குறித்து ஆசிரியர் அறிவித்தார். அப்பொழுது சில Image-களை Download செய்து உருவாக்கிய டயபாலிக் புத்தக அட்டை.
இது எனது முழு அட்டைப்படம்



கேப்டன் டைகர்: தங்கக்கல்லறை படித்த பின்னர் போடப்பட்ட Design - கள் இவை.இன்றளவும் சி.ந.ப (உடைந்த மூக்கார்) மீது தீராக்காதல் உண்டு. சமீபத்திய வெளியீடான “மின்னும் மரணம்” Collectors Edition-யை ஒரு சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு அமர்ந்து ஒரே மூச்சாய் இரவு 11:00 மணிக்கு படித்து முடிக்கும்போது, மண்டையில் விழுந்த கொட்டின் வீக்கம் இன்னும் வடியவில்லை.

- பயணம் தொடரும் . . .







Saturday, October 10, 2015

“பலே பாலு”வுடன் ஒரு பயணம் - 02

         நான் ஒரு எழுத்தாளன் கிடையாது,ஒரு படைப்பாளியும் அல்ல.ஒரு ரசிகன் மட்டுமே.சித்திரக்கதை ரசிகன்.அதுவே என்னை எழுதவும் தூண்டியது.சற்று மிகைப்படுத்தி சொல்வதானால் . . . ! வாழ்க்கையின் வெவ்வேறு பரிமாணங்களைக் காட்டியதும்,ஏதோ ஒரு வகையில் என்னை பல களங்கலுக்கு அழைத்துச்சென்றதும் சித்திரக்கதைகளே எனலாம் (எனது முதல் பதிவு வாசித்தவர்களுக்கு நான் இவ்வாறு கூறுவதற்கான காரணங்கள் புரியும்.
           ஒரு வேகத்தில் பிளாக் ஆரம்பித்தாயிற்று.நமது தொலைக்காட்சித்தொடர்களில் போடுவது போல “தொடரும்” என்று போட்டு முதல் பதிவையும் முடித்தாயிற்று. அடுத்தது என்ன ? தமிழில் ’டைப்புவது’ புதிது என்பதால், மிதமான வேகத்திலேயே 'type' செய்ய முடிகின்றது.இருந்தாலும் காமிக்ஸ் பற்றிய நமது நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதும் கலந்துரையாடுவதும்தான் நமக்கு பிடித்தமான விக்ஷயங்களாயிற்றே. . . So let's start an another episode . . . !

அதற்கு முன்னர், என் முதல் காமிக்ஸ் வாசிப்பான “கொலைகாரன் கோட்டை’’ புத்தகத்தின் அட்டைப்படத்தை அனுப்பிய நண்பர் திரு.மாயாவி சிவா அவர்களுக்கு நன்றி.



  ஒரு வழியாக ஞாயிற்றுக்கிழமையும் வந்தாயிற்று,அப்பாவிற்கு முன் நான் புறப்பட்டு தயாராக நின்றிருந்தேன்.அப்பாவிடம் புத்தகக்கடை வரும்வரை ‘பலே பாலு’ புத்தகத்தைப்பற்றியும் அவன் செய்யும் சாகஸங்களைப்பற்றியுமே பேசிகொண்டு வந்தேன். அவரும் சிரிய புன்முறுவலுடன் நான் சொல்வது அனைத்தையும் கேட்டுக்கொண்டே வந்தார்.நீதிராஜன் புத்தகக் கடைக்கு அருகில் வந்ததும் நான் முதல் ஆளாய் ஓடிச்சென்று ‘பலே பாலு’ புத்தகத்தைப்பற்றி விளக்கிகூற அவருக்கும் ஒருவாராக புரிந்து, அங்கு தொங்கவிடப்பட்டிருக்கும் புத்தகங்களுக்குள் தேடத்தொடங்கினார். தேடினார் . . . தேடினார் . . . தேடிக்கொண்டே இருந்தார்.நான் பொருமையிழந்து போய் புத்தகக்கடையை அண்ணாந்து பார்த்து நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன். எங்கு பார்த்தாலும் பலவித காமிக்ஸ் தொங்கவிடப்பட்டிருந்தது.இருப்பினும் என் மனதும்,கண்களும் ‘பலே பாலு’-வைத் தேடிகொண்டிருந்தது.என் சகநண்பன் வைத்துள்ள புத்தகம், அதற்கு அவன் பேசிய விலை,அப்புத்தகத்தில் நான் படித்த ஒன்றிரண்டு பகுதிகளின்(EPISODES) தாக்கம் இவையெல்லாம் சேர்ந்து ‘பலே பாலு’-வைத் தவிர வேறு எதையும் நினைக்கத்தோன்றவில்லை.

            அப்பா கடைக்காரரையும்,அவர் தேடுவதையுமே பார்த்துக்கொண்டிருந்தார்.நான் அப்பாவையும், கடைக்காரரையும், புத்தகங்களையும் மாறி. . . மாறி பார்த்துக்கொண்டிருந்தேன்.கடைக்காரர் மீண்டுமொருமுறை கடையின் உள்ளே சென்று தேடித்திரும்பினார்.அவரையே பார்த்துக்கொண்டிருந்த என்னை நோக்கி ‘அந்த புத்தகம் ஸ்டாக் இல்ல தம்பி....!’ என்றார்.அதிகபட்ச எதிர்பார்ப்பின் ஏமாற்றத்தை நான் அப்போது உணர்ந்தேன்.ஏமாற்றத்துடன் அப்பாவை நோக்கித்திரும்பினேன். அப்பா என்னை சமாதானம் செய்யும் விதமாக என் தலையை வருடிகொடுத்துக்கொண்டே. . . கடைக்காரரிடம் “அந்த மாதிரி வேற புத்தகம் இருந்தால் கொடுங்கள் . . .!” என்று கேட்க, அவரும் “சார் . . . நிறைய காமிக்ஸ் புத்தகம் இருக்கு சார், என நாலைந்து காமிக்ஸ் புத்தகங்களை எடுத்துக்கொடுத்தார். ‘பலே பாலு’ கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்திலும், கோபத்திலும் அதைத்தவிர வேறுபுத்தகம் எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டு, கடையின் ஒரு ஓரமாய் நின்றுகொண்டு வெருமையுடன் சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.அப்பா கடைக்காரரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.எனக்கு அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது.
     
    வாங்கப்பா . . . போகலாம் ! என்று அப்பாவை கோபத்துடன் அழைத்தேன். “என் பொண்டாட்டி கூட அந்த புத்தகத்த வச்சி படிச்சிட்டு இருந்தாங்க, எங்க வச்சிருக்காங்கனு பார்க்கனும்!”என்று கடைக்காரர் கூறுவது கேட்டது.(பல நேரங்களில் நீதிராஜனுடன் அவரது மனைவியும் கடையில் இருப்பது வழக்கம்). அப்படியாவது அந்த புத்தகம் என் கையில் கிடைத்துவிடாதா என்ற என் எண்ணமும் பொய்த்துப்போனது.

  சந்தையிலிருந்து திரும்பும்போது நான் அமைதியாக நடந்துகொண்டிருந்தேன்.அப்பா எனக்கு ஆறுதலலிக்கும் விதமாக பேசிக்கொண்டே வந்தார். “அங்கு பார்த்த காமிக்ஸ் பற்றியும்,ஏன் நீ கேட்ட புத்தகம் மட்டும் வேண்டும் என்கிறாய். . . அங்கு இன்னும் நிறைய ஏன் அதைவிட நல்ல புத்தகங்கள் கூட இருந்திருக்கலாம் அல்லவா...? நீ ஏன் அதையெல்லாம் படிக்கக்கூடாது!” என்கிற தோரனையில் என்னை சமாதானப்படுத்த முயல்வதாக நினைத்திக்கொண்டேன், கொஞ்சமுமாய் சாமாதானமும் ஆனேன்.
 
   வீட்டிற்கு வந்ததும் அம்மாவிடம் எனக்கு அந்த புத்தகம் கிடைக்கவில்லை என்று கூறி ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்தேன்.பள்ளியில் நடக்கும் விசயங்களை அம்மாவிடம் பகிர்ந்துகொள்வது என்னுடைய வழக்கமாதலால், ‘பலே பாலு’ விசயத்தையும் அம்மாவிடம் போட்டு வைத்திருந்தேன்.அம்மாவும், “ஏண்டா? அப்பாதான் அதே மாதிரி வேற புத்தகம் நிறைய இருந்ததுனு சொல்றார்ல, அதுல எதுனா ஒன்னு வாங்கிட்ருக்க வேண்டியதுதான. . . !, என்றார்.சட்டென்று ஏதோ நினைவுக்கு வந்தவனாய், “அப்பா, அந்த கடைக்காரர்கிட்ட என்னப்பா பேசிட்டிருந்தீங்க . . . ? என்றேன்.இல்லப்பா... அந்த புத்தகம் ஒன்னு அவுங்க பையன்கிட்ட இருக்காம் அந்தப்பையன் படிச்சதும் புத்தகத்தை வாங்கிதரமுடிமான்னு கேட்டுப்பார்த்தேன், என்றார். ம்....... திரும்பவும் முதல்லர்ந்தா . . . ! என எனக்கு மண்டை கிறுகிறுத்தது.முதல் முதலாக யாரோ ஒரு பெயரறியா, முகமறியா பையன்மேல் கோபம் பீறிட்டுக்கொண்டு வந்தது.எனக்கென்றிருந்த புத்தகத்தை அவன் அபகரித்துக்கொண்டதாக நான் நினைத்துக்கொண்டதன் விளைவே அந்தக் கோபம்.
 
   அப்பா, அதெல்லாம் ஒன்ணும் வேணாம்ப்பா. . . நாம அங்க இருக்கிறதில ஏதாவது ஒரு புத்தகம் வாங்கிகலாம்ப்பா . . . என்று சொல்லி முடிக்கும்முன், அப்பா பையில் இருந்து தடிமனான ஒரு புத்தகத்தை எடுத்துக்காண்பித்தார் அதே புன்முறுவலுடன்,நான் ஓடிவந்துகட்டிக்கொண்டு புத்தகத்தை ஆசையுடன் வாங்கிப்பார்த்தேன். “The லயன் Top 10 ஸ்பெக்ஷல்” - கண்கள் ஆச்சரித்தில் விரிய புத்தகத்தை திருப்பி, திருப்பி பார்த்துக்கொண்டிருந்தேன்.சுருங்கச்சொல்வதானால் அந்த வயதில் வேறு எதற்காவும் நான் இவ்வளவு மகிழ்ந்தது கிடையாது.இன்றளவும் என் காமிக்ஸ் சேகரிப்பில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததும், நேசித்து பாதுகாக்கும் புத்தகமும் இதுவே.

 பின்குறிப்பு: “பலே பாலு” கதையை நீண்ட காத்திருப்பிற்கு பின் , அதாவது 18 வருடங்கள் கழித்து சமீபத்தில் ஒரு நண்பர் உதவியுடன் படித்து முடித்தேன்.ஸ்ப்ப்பா . . . .
- பயணம் தொடரும்  . . .


Saturday, October 3, 2015

ஒரு பயணத்தின் ஆரம்பம். . .



நண்பர்களுக்கு வணக்கம், 
          நீண்ட காலமாய் எனக்குள்ளிருக்கும் காமிக்ஸ் காதலையும்,பகிர்வுகளையும்,அனுபவங்களையும் இன்னபிற நிகழ்வுகளையும் பகிர்ந்துகொள்ளவே இந்த பிளாக்-கை ஆரம்பித்திருக்கிறேன் நண்பர்களே. . . 
குறிப்பு: இந்தப்பதிவு ஏற்கனவே ஜுன் 09-ம் தேதி முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவுதான் நண்பர்களே. புதிய பதிவுடன்தான் ஆரம்பிக்கலாம் என்றிருந்தேன்.ஆனால் இந்த தொடக்கம்தான் சரியாக இருக்குமெனப்பட்டது.ஆக . . . ஆரம்பித்தாயிற்று . . . !


காமிக்ஸ் என்ற ஒரு வார்த்தையை உச்சரிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி, எழும் நினைவலைகள், உண்டான நட்புகள், நடந்த சம்பவங்கள், வாங்கிய அர்ச்சனைகள், சிலபல இழப்புகள் என அனைத்துமே இனிப்பானவைதான்.
காமிக்ஸ் என்பது ஒரு தனி உலகம் (மாய உலகம்), அது அனைத்தையும் மறக்கச்செய்யும் அதைத்தவிர. நான் அவ்வுலகத்துக்குள் வந்தது 1994-ம் வருடம்.அதுவரை தீபாவளி என்றாலே சிவகாசிப்பட்டாசுதான் ஞாபகம் வரும்.அவ்வருடம் பட்டாசு வாங்கப்போய் பட்டாசுடன் காமிக்ஸும் வாங்கி வந்தேன்.லயன்&முத்து காமிக்ஸ்-ம் சிவகாசியிலிருந்துதான் வருகிறது என பின்னாட்களில் தெரிந்துகொண்டேன்.நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் பலரக விலைகளில் இருந்தன.நான் ஒரு தடிமனான புத்தகத்தை கையில் எடுத்து வைத்திருந்தேன் (என்ன புத்தகம் என்று நினைவில் இல்லை.அட்டை மட்டும் பச்சை&சிகப்பு வண்ணத்தில் இருந்ததாக நினைவு), கடைக்காரர் விலை ரூ.15 என்றார்.அப்பாவின் முகத்தைப்பார்த்துவிட்டு ரூ.4/- விலையிலுள்ள ஒரு புத்தகத்தை எடுத்தேன்.’சைனா கபாலம்’ என்ற பெயரே ஞாபகத்தில் உள்ளது.தடிமனான பாக்கெட் சைஸ் புத்தகம்.பட்டாசு வாங்கும்போதுகூட அந்த புத்தகமே என் மனதில் நிழலாடியது.வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாக புத்தகத்தை எடுத்தேன், அதில் பின் அடிக்கப்பட்டிருந்தது.ஆச்சர்யத்துடன் அம்மாவிடம் புத்தகத்தை எடுத்துச்சென்றேன்.பின் -யை பிரிக்க இயன்றவரை பல முஸ்தீபுகள் செய்தும் முடியவில்லை.கடைசியாக பின் பிரிக்கப்பட்டபோது புத்தகமும் பாதி இரண்டானது. அழுகைவராத குறையுடன் பக்கங்களை சேர்த்து படிக்க ஆரம்பித்த எனக்கு பல ஆச்சர்யங்களையும், அழகியலையும் அறிமுகப்படுத்தப்போவது இதுதான் (ஏன்? நான் எனது தொழிலாக சினிமாவை தேர்ந்தெடுக்கவும் . . .!) என அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்.
இரண்டொரு நாட்களுக்குப்பிறகு தீபாவளி குக்ஷியில் நான் தவறவிட்ட புத்தகத்தை தேடிக்கொண்டிருந்தேன், இன்றுவரை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். முதல் வாசிப்பிற்கு பின்னர் எனக்கும், காமிக்ஸ்க்குமான இடைவெளி எத்தனைக்காலங்கள் என்று தெரியவில்லை, அதற்காக நான் வருத்தப்பட்ட நாட்கள் அதிகம்.
மறுபடியும் காமிக்ஸ். இம்முறை எனது முறை.கொடைக்கானலில் இரண்டே புத்தகக்கடைகள்தான் உண்டு.ஒன்று நீதிராஜன் புத்தகக்கடை, மற்றொன்று பேப்பர்கடை என்றழைக்கப்படும் புத்தகக்கடை. பேப்பர்கடைக்கு அப்பாவுடன் சென்ற எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.அவர் எனக்காக ஆசையுடன் ஒரு காமிக்ஸ் புத்தகத்தை வாங்கித்தந்தார்.ராணி காமிக்ஸ்-ன் ‘கொலைகாரன் கோட்டை’ புத்தகமே அது.நான் படித்த முதல் கெளபாய் கதையும் அதுவே…!
எனது காமிக்ஸ் சேகரிப்பு ஆரம்பித்ததும் இந்த காலகட்டத்தில் தான்.அதற்குக் காரணம் ராணி காமிக்ஸ்ன் கவர்ச்சிகரமான அட்டைபடமும், முகமூடி வீரர் மாயாவி என்றழைக்கப்படும் வேதாளரும்தான்.அடர்ந்த வனாந்திரமும், மண்டைஓட்டு குகையில் டெவிலுடனும், மாயாவி முத்திரை இடுகிறேன் பேர்வழி என்று பக்கத்து பெஞ்சுகாரணின் மூக்கை உடைத்துமாக காமிக்ஸ் காதல் வளர்ந்துகொண்டே சென்றது.
பேப்பர்கடையில் ராணி காமிக்ஸ் மட்டுமே கிடைத்து வந்தது.அதிகரித்துவந்த அதீத காமிக்ஸ் காதல், 1-ம் தேதி மற்றும் 16-ம் தேதி தவிர மற்ற நாட்களிலும் பேப்பர்கடையை நோக்கி நடையைக்கட்ட வைத்தது (1 மற்றும் 16ம் தேதி எவ்வளவு முக்கியமானது என்று நம் ரசிகர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை).அந்த சமயத்தில் என் சகநண்பன் ’பலே பாலு’-வைத்து ஊருக்கே படம் காட்டிகொண்டிருந்தான், அவனிடமிருந்து எப்படியாவது அந்த புத்தகத்தை கைப்பற்றுவது எனத்தீர்மானித்தேன்.அங்கேயும் குறுக்கே நின்றது பட்ஜெட், அட்டை இல்லாத அந்த புத்தகத்துக்கு அவன் கேட்ட விலை, என் இரண்டு மாதகால சேமிப்பு… ரூ.10/-

(காமிக்ஸ் பிஸ்னஸ் அப்போதே ஆரம்பித்துவிட்டது நண்பர்களே!).

என்ன செய்யலாம் என்ற நினைப்பும், அந்த புத்தகத்தை படித்தே ஆகவேண்டும் என்ற வெறியும் மண்டையைக்குடைந்து கொண்டிருந்தது.புத்தகத்தின் ஒரிஜினல் விலை அவன் கூறிய விலையைவிட குறைவு எனத்தெரிந்தபின் புத்தகத்தை விலைகொடுத்து வாங்க தீர்மானித்தேன். அப்புத்தகம் நீதிராஜன்கடையில்தான் கிடைக்கிறது என்பதை அறிய இரண்டு சேமியா ஐஸ்-ம், நாலைந்து மாங்கீற்றுகளும் தேவைப்பட்டன. வாங்கவேண்டும் என்று தீர்மானமாகிவிட்டது, கிடைக்குமிடமும் தெரிந்துவிட்டது அப்பா ஞாயிற்றுக்கிழமைதான் கடைக்கு அழைத்துச்செல்வார், அதற்கு இன்னும் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டும்…
- தொடரும்