Saturday, February 27, 2016

வேதாளர் - நினைவில் நீந்தும் கனவுகள்

எனது பால்யம் முழுவதும் சித்திரக்கதைகளால் நிறைந்திருந்தது.எனது வாசிப்பு வாயிலின் திறவுகோள் சித்திரக்கதைகள் என்றால் மிகையாகாது.சித்திரக்கதைகளை தொடர்ந்து வாசிக்க வேண்டுமென ஆர்வமேற்படுத்தியது முகமூடி வீரர் மாயாவியே.ராணி காமிக்ஸின் “இரும்புக்கூண்டு” என்ற கதைதான் நான் வாசித்த முதல் வேதாளர் கதை. முத்து மற்றும் இந்திரஜால் காமிக்ஸ் பரிச்சயமாகாத அந்நாட்களில் முதல் அறிமுகம் “முகமூடி வீரர் மாயாவி” என்றான பின்னே, மற்ற காமிக்ஸ்களின் அறிமுக காலகட்டத்தில் மாயாவியை - வேதாளராக ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது.தற்போதும் என் மனதில் வேதாளரை விட அதிக ஆதிக்கம் செலுத்துவது  முகமூடி வீரர் மாயாவியே (ராணி காமிக்ஸ் மூலம் காமிக்ஸ் உலகினுள் நுழைந்த பெரும்பாலானவர்கள் இந்த அனுபம் வாய்க்கப்பெற்றிருப்பர்).எனினும் பெரும்பாலான நண்பர்கள் வேதாளராகவே இவரை அறியப்பெற்றிருப்பதால் இப்பதிவில் “வேதாளர்” என்ற பதமே பயன்படுத்தப்படும்.  தனது 80-வது பிறந்தநாளைக்கொண்டாடும் வேதாளருக்கான இந்தப்பதிவுடன் நண்பர்களைச்சந்திப்பதில் மகிழ்ச்சி.


   சித்திரக்கதைகள் எனக்கான பொழுதுபோக்காக மட்டுமல்லாது என் ரசனையையும், உலகின் மீதிருந்த என் கண்ணோட்டத்தையும், என் திறமையையும், எனக்குள்ளான ஒரு தேடலையும், இப்பிரபஞ்ச வெற்றிடங்களின் சூன்யர்த்தங்களை புரிந்து கொள்ளவும் மேலும் என்னை செம்மைப்படுத்தவும் செய்தன.இது சற்று மிகையாகத்தோன்றினாலும் யாதார்த்தத்தின் நிழலிதுவே.எனது நண்பர்கள் எனது தெருவில் நடமாடிக்கொண்டிருக்கும்போது, நான் மட்டும் அரிஸோனா பாலைவனங்களில் நீரைத்தேடி அலைந்து கொண்டிருப்பேன். இரும்புக்கையில் மின்சாரம் பாய்ந்து அரூபமாகி நண்பர்களை பயமுருத்திக்கொண்டிருப்பேன்.கெளபாய்களையும், செவ்வியந்தியர்களையும், வெயில் சுட்டெரிக்கும் ஜீவ-மரண போராட்டத்துடன் கூடிய பாலைப்பரப்பு வாழ்க்கையும், Wild West-ன் சுவாரஸ்யமான விக்ஷயங்களும் காமிக்ஸ் படிப்பவர்களைத்தவிர எத்தனைபேருக்கு பரிச்சயம் அச்சிறுவயதில்!.

   நான் எனது ஒவ்வொரு கோடைவிடுமுறைக்கும் சிவகங்கையிலுள்ள எனது தாய்மாமா வீட்டிற்குச்செல்வேன். அங்கு நானும் எனது மச்சானும் சேர்ந்து பழைய  புத்தகக்கடைகள் ஒன்றுவிடாமல் காமிக்ஸ் வேட்டை நடத்துவோம்.அவருக்கு காமிக்ஸ் மேல் நாட்டம் இல்லை என்றாலும், எனக்கு தேடிக்கொடுத்து மகிழ்வதில் அவருக்கொரு மகிழ்ச்சி.ஊருக்குச்செல்லும் போது நிறைய காமிக்ஸ் வாங்கலாம் என்ற கனவோடு அப்பாவை நச்சரித்து ரூ.50 வாங்கிக்கொண்டு கிளம்பினேன். 1996-களில்  ரூ.50 என்பது பெரிய தொகை.அந்நாட்களில் செலவைக்குறைப்பதற்காக  பேருந்து மாறி-மாறி செல்வது வழக்கம்.மதுரைபேருந்துக்காக வத்தலகுண்டு பேருந்துநிலையத்தில் காத்திருக்கும்போது கண்ணில்பட்ட புத்தகக்கடையில் ஏகப்பட்ட காமிக்ஸ்கள் தொங்கவிடப்பட்டிருந்தது.சரிதான் வேட்டையை இங்கே ஆரம்பித்து விடலாம் என்ற முடிவில் என்னையுமறியாமல் கடைக்குச்சென்று புத்தகங்களை வாங்க ஆரம்பித்தேன். எனக்கு
பார்வதி சித்திரக்கதைகள் பரிச்சயமானது இங்கிருந்தே.
  1. கனவா? நிஜமா?--------------------------- (பார்வதி சித்திரக்கதைகள்) - ரூ.04/-
  2. டயல் 100-------------------------------------- (பார்வதி சித்திரக்கதைகள்) - ரூ.04/-
  3. க்ஷீலாவைக்காணோம்-----------------(பார்வதி சித்திரக்கதைகள்) - ரூ.04/- 
  4. அறிவின் விலை ஒரு கோடி---------(பார்வதி சித்திரக்கதைகள்) - ரூ.04/- 
  5. அவள் எங்கே?-------------------------------(பார்வதி சித்திரக்கதைகள்) - ரூ.04/- 
  6. பலிபீடம்----------------------------------------------------------------------( P C K ) - ரூ.04/- 
  7. தூங்காத துப்பாக்கி-------------------------------------------------------( P C K ) - ரூ.04/-
  8. நடுக்கடலில்--------------------------------------------( மேகலா காமிக்ஸ்) - ரூ.25/-
  9. ராக்கெட் ரகசியம்------------------------------------(டால்பின் காமிக்ஸ்) - ரூ. ?
  10. கொலைகார கேப்டன் -----------------------------(டால்பின் காமிக்ஸ்) - ரூ. ?


  எல்லாம் சேர்த்து ரூபாய்.50/- க்கும் மேல் வந்தது.கையில் ரூ.50/- தான் இருந்தது, மீதம் சில்லரையை மச்சான் தர மேற்குறிப்பிட்ட புத்தகங்களை வாங்கியாயிற்று. இவ்வாறாக அந்த வருட பயணத்தின் ஆரம்பமே சிறப்பாக இருந்தாலும்,கையில் இருந்த பணம் மொத்தமும் காலி - சிவகங்கைக்கு சென்று காமிக்ஸ் வாங்க பணத்திற்கு என்ன செய்வது...? இருக்கவே இருக்கிறார்கள் மாமாவும்,மச்சானும் என்ற எண்ணம் ஆறுதலலிக்க பயணம் தொடர்ந்தது.கையில் காமிக்ஸ் இருக்கும் பையுடனும், எப்போது மாமா வீடு வரும் புத்தகங்களை படிக்க ஆரம்பிக்கலாம் என்ற ஆர்வமும் சேர்த்து அன்றைய பயணத்தை நெடியதாக்கியது.மாமா சிவகங்கை “ரவிபாலா-தியேட்டர்”-ன் நேரெதிரே டீக்கடை வைத்திருந்தார் நான் எப்போதும் அவருடனே இருப்பது வழக்கம்.அங்கிருந்தே ஓரிரு நாட்களில் அனைத்து புத்தகங்களையும் வாசித்து முடித்துவிட்டேன்.முன்னெப்போதும் இல்லாமல்  தற்போது நான் அதிக புத்தகங்களை வாசிக்க பழகியிருப்பது  எனது மாமாவிற்கு வியப்பளித்திருக்க வேண்டும், கடைக்கி வருவோரிடமெல்லாம் எனது மருமகன் என பெருமையாக கூறுவார்.அனைத்து புத்தகங்களையும் வாசித்தாயிற்று...! என மச்சானிடம் கூற, அவரும் நாளை பழைய புத்தகக்கடைக்கு செல்லலாம் என்றார். அந்த “நாளை”-யின் எதிர்பார்ப்பு பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
 
   அந்த “நாளை”-யும் வந்தது, புத்தகவேட்டைக்கு கிளம்பினோம்.வழியெல்லாம் காமிக்ஸ் பற்றிய நினைவே.அந்நாட்களில் அரண்மனை வாசல் தெருவில் நிறைய பழைய புத்தகக்கடைகள் இருக்கும்.பழைய புத்தகக்கடைகளில் காமிக்ஸ் புத்தகங்கள் தேடுவதும் நம் காமிக்ஸ் பிரியர்களுக்கு ஒரு ஆனந்தமே. நாலைந்து புத்தகக்கடைகள் ஏறி இறங்கி ஒரு இருபது புத்தகங்கள் வரை  தேற்றிய பின்னரே வீடு திரும்பினோம். பூந்தளிர் இதழ்களும் அவற்றில் அடக்கம்.அவற்றில் தற்போது என்னிடம் இருப்பது ஒன்று மட்டுமே.அட்டை இல்லாத காரணத்தினால் நிறைய புத்தகங்களை வாங்கவில்லை,அதற்காக தற்போதும் வருந்துவதுண்டு.சந்தோச நாட்களவை...!

   காமிக்ஸ் கனவில் வராத வாசகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்...? அப்படி இருந்தாலும் மிக சொற்பமே இருக்க முடியும்!. பழைய புத்தகக்கடைக்குச்சென்று பார்த்தால் ஒரு அட்டைப்பெட்டியில் மொத்த காமிக்ஸும் நமக்கு கிடைப்பது போலவும்,நண்பர்கள் நமக்கு காமிக்ஸ் பரிசளிப்பது போலவும்,நம்மிடமிருந்து தொலைந்து போன காமிக்ஸ் திரும்ப கிடைப்பது போலவும் என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் ஒரு படி மேலே சென்று காமிக்ஸ் களங்களில் நாம் உலவுவது போலவும்,நாமே அந்த கதாபாத்திரமாக உலா வருவதும், கதைக்களங்கள் காட்சிகளாக விரிவடைவதும் நிகழும்.அப்படியானதொரு கனவின் நிகழ்வை சற்று கற்பனைக்கலந்து தங்களுக்கு விவரிக்கிறேன்.கனவுகள் என்றைக்குமே விசித்திரமானவைகள்தான்.அப்படியொரு விசித்திரக்கனவுதான் வேதாளர் சூப்பர்மேன் போல பறப்பது.இக்கனவை மூலமாக வைத்துக்கொண்டு என் சக நண்பர்களுக்கு நான் கூறிய கதை என் மனதில் இவ்வளவு காலம் தங்குகிறது என்றால் அது முழுக்க முழுக்க காமிக்ஸின் மகிமையே...!

சூப்பர் மாயாவி (மன்னிக்கவும் பழக்தோக்ஷம்) சூப்பர் வேதாளர்:
   22-ம் வேதாளர் தனது மகனுக்கு பயிற்சி கொடுத்து கொண்டிருக்கையில் எதிர்பாராமல் ஏற்பட்ட காயத்தின் காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டு அவரது மகன் மரணிக்கிறார்.இதனால் வேதாளரின் குடும்பமே கவலையில் மூழ்குகிறது “சாகாவரம் பெற்றவர் வேதாளர்” என்ற வரலாறு பொய்த்து விடுமோ என்ற பயம் வேதாளரின் மனதை வாட்டியெடுத்தது.  நாட்கள் வேதனையுடன் நகர்கின்றது.நிலவொளியின் வெளிச்சத்தில் மூழ்கிருந்த ஈடன் தீவின் அமைதியை கிழித்துக்கொண்டு ஓர் விண்வெளி ஓடம் மின்னற்கீற்று போல் தரையிறங்கியது.அது வேதாளர் உட்பட தீவிலுள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.சற்று நேரத்தில் வேதாளர் வந்து சேர்வதற்கும், விண்கலத்தின் அலாரம் ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. வேதாளர் விண்கலத்தை ஆராய முற்பட, தானியாங்கி செயல் முடுக்கு விசையால் தூண்டப்பட்டு அதன் கதவுகள் திறக்க உள்ளிருக்கும் பச்சிளங்குழந்தையைக்கண்டு அனைவருக்கும் ஆச்சர்யம்.(இந்த விண்கலம் ‘கிரிப்டான்’- னிலிருந்து வந்தது என்று சொல்லவும் வேண்டுமா என்ன). வேதாளரின் பராமரிப்பில் குழந்தை வளர ஆரம்பிக்க, இக்குழந்தை சாதாரணது அல்ல என வேதாளருக்கு புரிய ஆரம்பிக்கிறது.இவ்வாறாக சூப்பர் சக்தியுடன் வேதாளரின் அடுத்த வாரிசு “சூப்பர் வேதாளராக” உருவாகின்றார்.இவ்வாறாக நீண்டு செல்லும் கதை.

கனவுலகில் உதயமான “சூப்பர் வேதாளர்”.

      இப்பதிவை ஆரம்பிக்கும்போது இல்லாத - மறந்திருந்த நினைவுகள் திடீரென்று ஞாபகத்தில் முளைத்தது கொஞ்சம் புதிராகத்தான் இருக்கின்றது.கொஞ்சமே என் நினைவில் இருக்கும் சில கதைகளின் ஞாபகமீதிகள் மட்டும் என் மனத்திரையில் நிழலாடுகின்றது. அடர்ந்த கானகத்தினுள்  சிலந்தி வலை போன்ற பொறி ஆங்காங்கே காணப்படும்(நிச்சயமாக இது ஸ்பைடர் கதை அல்ல), அதில் மாட்டிக்கொண்டுவிட்டால் விடுபடுவது கடினம்.அந்த சிலந்தி வலையில் மாட்டிக்கொண்ட ஒரு மனிதனின் எலும்புக்கூடு போன்ற ஓவியம் இன்னும் என் நினைவுகளை விட்டு அகலவில்லை(கதையின் பெயர் தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே). மற்றொரு கதையில் ஒரு வைரம் தன்னை சொந்தமாக்கி கொள்ள முயல்பவர்களை தன்னிடமிருந்து அதீத வெப்பத்தை வெளிப்படுத்துவதன் மூலம் காவு வாங்கும். ‘உருகும் பனிமலை’ என்ற பெயரே நினைவில் தங்கியுள்ளது.இந்தக்கதைகள் யாரிடமாவது உள்ளதா நண்பர்களே...?.இல்லையென்றால் தேடத்தொடங்குவோம்.அப்படியும் கிடைக்கவில்லையா இருக்கவே இருக்கிறது கனவு...!. காமிக்ஸ் எனும் கடலினுள் என்றைக்குமே உறங்காமல் விழித்திருக்கும் மீனினைப்போல் நம் நினைவுகள் ஓயாமல் நீந்திக்கொண்டிருக்கின்றன.
- நினைவுகள் நீந்தும்.


17 comments:

  1. உங்களை விட உங்க மச்சான்தான் பாராட்டுக்குறியவர்
    மாப்பிளை படிக்கிறார் னதும்
    ஆர்வமில்லாவிட்டாலும் உங்க படிப்பார்வத்தை புரிந்து உதவி செய்தாரே அதுக்கு ஒரு சலாம் ஜி

    அக்கதை சிலந்தி வலை வாலைம்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே... “சிலந்திவலை மர்மம்” மீண்டுமொருமுறை படிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை! தகவலுக்கும்,வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

      Delete
  2. Arumaiyana ninaivukal.. Ungaludan serthu naangalum yengal ninaivukalai maateduthom.. Nendri ji

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே... சுவையான நினைவுகள் வாழ்க்கையின் சுவாரஸ்யமும் கூட...

      Delete
  3. அடடா! அருமையாக எழுதியிருக்கிறீர்கள் நண்பரே! மனதிலிருப்பதை தங்குதடையின்றி வார்த்தைகளில் வடிப்பது எல்லோருக்கும் எளிதில் கிடைத்திடாத வரம்! அந்த வரத்தை பூரணமாக வாங்கி வந்திருக்கிறீர்கள்!

    செம!

    ReplyDelete
    Replies
    1. 'சூப்பர் மாயாவி' கதை நல்ல கற்பனை! இதையேகூட ஒரு தனி பதிவாகப் போடலாம் நீங்கள்!

      Delete
    2. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

      Delete
  4. Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

      Delete
  5. Dear friend...
    அந்த வைர கதை என்னிடம் PDF file வடிவில் உள்ளது...
    கதையின் பெயர் வைரத்தின் நிழலில்..
    என் பால்ய வயது நினைவுகளை மீட்டெடுத்தது உங்களின் இந்த பதிவு....
    நன்றி நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

      Delete
  6. Only pure comics lovers can understand your feelings bro , reminds my childhood days .

    ReplyDelete
  7. Really happy to have your friendship bro ,

    ReplyDelete
  8. Replies
    1. Try to bloging regularly sir... thank you...

      Delete