Saturday, February 13, 2016

வாடகை நினைவுகள்

மற்றுமொறு புதிய பதிவுடன் நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!.இம்முறை பதிவின் சாராம்சம் நமக்கு மிகவும் பரிச்சயமான சில (வா.மு.கோமு. / எஸ்.ராமகிருக்ஷ்ணன்) எழுத்தாளர்களின் காமிக்ஸ் நினைவுகளே!. ஒவ்வொருவரின் காமிக்ஸ் நினைவுகளும் பலவித அனுபவங்களை உள்ளடக்கியதாக இருக்கும்,மேலும் வாசிப்பவர்களை தத்தமது பால்யங்களுக்கு இட்டுச்செல்லும் காலயந்திரம் என்று கூட  இந்த அனுபவக்கட்டுரைகளை வர்ணிக்கலாம்.அதற்காகவே இப்பதிவிற்கு “வாடகை நினைவுகள்” என்று காரணப்பெயர்.இன்றைக்கும் எனது பயணத்தில் துணைக்கு அழைத்துச்செல்வது எஸ்.ராமகிருக்ஷ்ணன் புத்தகங்களையே.இவருடைய காமிக்ஸ் நினைவுகள் பனிக்கால மத்திமபொழுதுகளின் கதகதப்பை வாசிப்பவர்களுக்கு அளிக்க வல்லது.

சனி, ஏப்ரல் 11, 2015 

வா.மு.கோமு.

இரவுக்கழுகாரின் காமிக்ஸ்.

டெக்ஸ் வில்லரின்,  “சிகப்பாய் ஒரு சொப்பனம்!காமிக்ஸ் வெறியர்களை எனக்கு சிறுவயது முதல்கொண்டே தெரியும். கோவையில் ஒருவன் தன் இல்லத்தில் காமிக்ஸ் பலவற்றை வைத்துக் கொண்டு ஊருக்கே பத்துப் பைசாவுக்கு ஒரு நாள் வாடகைக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். அன்று காமிக்ஸ் ஒரு ரூபாய் விலை தான் பத்துப்பேருக்கு கொடுத்தான் என்றாலே போட்ட முதல் கிடைத்து விடும். அவனிடம் பள்ளி விடுப்பு மாதத்தில் பைசா கொடுக்காமல் தூக்கி வந்து வாசித்தவன் நானாகத்தான் இருப்பேன். ஏனெனில் என்னிடமும் அவனிடமில்லாத காமிக்ஸ் மற்றும் மாயாஜால புத்தகங்கள் இருந்தனஅவைகளை பண்டமாற்று முறையில் கொடுத்து வாசித்தேன். அவைகள் என்னிடம் இருக்க காரணம் என் அப்பிச்சி.

அவர் இந்துநேசன் நாவலில் இருந்து காமிக்ஸ் வரை கைக்கு கிடைப்பதை வாங்கி வாசிப்பவர்அவர் ராணுவத்திலிருந்து வெளிவந்து கோத்தகிரி மில்லில் வாட்ச்மேன் உத்தியோகம் பார்த்தவர்இன்று மில்லும் இல்லை அவரும் இல்லைகாமிக்ஸில் “மஞ்சள் பூ மர்மம்” கதையை இன்றும் பேசுகிறார்கள்அதை நான் வாசித்திருந்தாலும் இப்போது நினைவில் இல்லை

இன்று சிறுவர்கள் காமிக்ஸ் படிக்கும் பழக்கத்திற்கு வரவே இல்லைஅவர்களுக்கு வேறு விதமான பொழுது போக்கு அம்சங்கள் பெருகி விட்டன.  பள்ளியின் பாடப்புத்தக வாசிப்புக்கு இணையாக போரான ஒன்றாக நினைக்கிறார்கள்அவர்களுக்கு மொபைல் போன்களில் விளையாட விளையாட்டுகள் குவிந்து கிடக்கின்றன.

சரி யார் தான் இப்போது காமிக்ஸ் புத்தகங்களை வாசிக்கிறார்கள் என்று பார்த்தால் அதே பழைய காமிக்ஸ் ரசிகர்கள் தான்இப்போது லயன் காமிக்ஸ் நிறுவனம் விலையைப் பற்றி கவலைப்படாமல் உயர்தர தாளில் வர்ணத்தில் புத்தகங்களை கொண்டு வருகிறதுஅவைகள் மார்க்கெட்டில் உடனடியாக தீர்ந்தும் விடுகின்றதுவர்ணத்தில் இருந்தால் மட்டுமே குழந்தைகள் வாசிக்கின்றன என்ற உண்மையை நானே நம்ம பயலை வைத்து கண்டறிந்தேன்கருப்பு வெள்ளையில் காமிக்ஸ் புத்தகங்களை வாசித்துப் பழகிய எனக்கு வர்ணம் ஒரு ஒவ்வாமையை தருகிறது என்பேன்அதில் ஒரு திருப்தி இல்லை.

பழைய காமிக்ஸ் ரசிகர்களே கண்ணில் தென்படும் புத்தகங்களை வாங்கி யாரேனும் கண்ணில் பார்த்தால் சிரிப்பார்களோஎன்ற பயத்தில் வீட்டில் வாசிக்க பழகியிருக்கிறார்கள்.  காமிக்ஸ் புத்தகங்களை வாசிப்பவர்களின் மனநிலையை எந்த வகையிலும் விளக்க முடியுமாஎன்றால் அது முடியாதெனத்தான் தோன்றுகிறதுஅது நிஜமாகவே ஒரு வகையான ஈர்ப்பு என்றே சொல்லலாம்காமிக்ஸ் புத்தகங்களை பிண்டு செய்து பாதுகாத்து வைத்தவர்களின் இறப்பால் அவைகள் பல பழைய புத்தகக் கடையில் எடைக்குப் போடப்பட்ட விசயங்களே நடந்தன.

என்னிடம் என் அப்பாவின் புத்தகங்களூக்கு இணையாக இரண்டு பெட்டிகளில் காமிக்ஸ்கள் இருந்தனராணிகாமிக்ஸ் ஆரம்பித்த காலத்தில் ஒரு இதழ் விடாமல் நான்கு வருட சேமிப்பு இருந்தனஇன்று வளைதளத்தில் சில பழைய புத்தகங்கள் பதிவேற்றப்படுகின்றன.  இப்பொழுது இரண்டு வருடகாலமாக டெக்ஸ் வில்லரின் புத்தகங்களை மட்டும் என் நண்பர் வருகையில் பெருந்துறையிலிருந்து அழைத்துச் சொல்வார்சென்று வாங்கி வரும் வழக்கத்தை வைத்திருக்கிறேன்.

ஆரம்பகாலங்களில் இரும்புக்கை மாயாவி புத்தகங்கள் என்றால் அப்படி விழுந்தடித்து சென்று வாங்கி வந்து வாசித்தவனுக்கு அவரின் கடைசிக் கதையை இரண்டு வருடம் முன்பாக ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு லயன் வெளியீட்டில் வாசித்த போது, அட சைத்தானேஎன்றே தோன்றியதுஅது அவ்வளவு போர்மீண்டும் வாசிக்க இயலாதோ காமிக்ஸ்களை என்று பயந்தேன்எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வேறு காமிக்ஸ் ரசிகர் என்று எங்கோ படித்தேன்.  கடைசிக்கு லக்கி லுக் என்னால் வாசிக்க இயலாவிடினும் பயலுக்காக பிடித்து விடுவது நடந்து விடுகிறது.வாசிப்பை பயல்களுக்கு மெதுவாகத்தான் நுழைத்து பயிற்சி கொடுக்க வேண்டும்முன்பெல்லாம் செல்ப்பில் இருக்கும் புத்தகங்களை என் தந்தையாரே வாசிக்க கொடுத்ததில்லைநானாக வாசித்துப் பழகியது தான்.

ஆக நம்பயல் இறுதியாக தன் நிலைப்பாட்டை தெரிவித்து விட்டான்வர்ணத்தில் இருந்தால் மட்டுமே வாசிக்க இயலும் என்றுகாமிக்ஸ் புத்தகங்களின் விற்பனை பரவலாக இலக்கிய அந்தஸ்து போல இப்போது ஆகிவிட்டது.இலக்கிய வாசிப்பாளர்கள் தொடர்ந்து காமிக்ஸ்களை வாங்குகிறார்கள்இது எதுக்கு வெட்டியா!? என்று காமிக்ஸ் ஸ்டாலை கடந்து அவர்கள் செல்வதில்லைசென்ற வருடம் வியட்நாமிய போர்க்கால சம்பவங்களை வைத்து வர்ணத்தில் ஒரு புத்தகம் லயன் காமிக்ஸ் கொண்டு வந்ததுஅது இலக்கிய வாசிப்பாளர்களை கவர்ந்தது நினைவிருக்கலாம்.

டெக்ஸ் வில்லரின் கதைகள் துப்பாக்கிச் சத்தங்கள் நிறைந்ததுஇவரைப்பற்றி விளக்கமாய் சொல்ல நான் கூகிளில் தேடி எடுத்து சொல்லிப்போகும் எழுத்தாளனல்லசிகப்பாய் ஒரு சொப்பனம் டெக்ஸ் வில்லர் அண்ட் கோ இணைந்து செவ்விந்தியர்களின் கொட்டத்தை அடக்கும் கதைவழக்கமாக எல்லாமே அப்படித்தான் என்ற போதிலும் இந்தக் கதை செவ்விந்தியர்களும் அவர்கள் பிரிவில் இருக்கும் பல குழுக்களும் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட இறங்கும் கதைஅதற்காக அவர்கள் துப்பாக்கிகளின் தேவையை உணர்ந்து கள்ளத்தனமாக சேகரிக்க இறங்கிய கதை.

தமிழில் துப்பறியும் நாவல்கள் அத்தியாயத்திற்கு அத்தியாயம் மாறி மாறி வருவது போன்று டெக்ஸ்வில்லரும் அவரது உதவியாளன் டைகரும் ஒருபுறம் கிளம்பமறுபுறம் இரவுக்கழுகாரின் மகனும் அவன் மாமா கிட் கார்சனும் பயணப்பட கதை இருதிசையில் பயணிக்கிறது.  கீழே வைக்க முடியாத விறுவிறுப்பு ! ஹூவால்பை மலைப்பகுதி செவ்விந்தியன் தேவதையோடு பேசி மக்களை ஒருங்கிணைப்பது என்பதெல்லாம் திரைப்பட பாணியே தான்ஆக ஒரு ஆங்கில திரைப்படத்தை பார்த்து ரசித்த நிறைவை நாம் அடைகிறோம்!

இரவுக் கழுகாரேஉம்மை சிலகாலம் வாசிக்கலாம் தான்.

-வா.மு.கோமு.

எஸ்.ராமகிருக்ஷ்ணன்

கனவெங்கும் காமிக்ஸ்.

கையில் கிடைத்த வார இதழ்கள், நாளிதழ்களில் வெளியான விளம்பரங்கள், மற்றும் புகைப்படங்களை வெட்டி எடுத்து அதை ஒரு நோட்டில் படக்கதை போல ஒட்டி ஒவ்வொன்றின் மேலும் சிறிய சிறியதாக ஸ்கெட்ச் பென்சிலில் எழுதி நானே ஒரு காமிக்ஸ் புத்தகத்தை தயாரித்த போது எனது வயது பதினைந்து.

அந்த வயதில் என் உலகம் காமிக்ஸ் புத்தகங்களால் நிரம்பியிருந்தது. அதிலும் இரும்புக்கை மாயாவியை போல ஆவது என்பது மட்டுமே வாழ்வின் பிரதான நோக்கமாக இருந்தது. உடல் மறைந்து போய் கைமட்டும் தனியே காற்றில் மிதந்து செல்கிறது என்ற வரிகள் தந்த வியப்பு எளிதில் மறக்ககூடியதில்லை.பள்ளிபுத்தகங்கள் மனதில் இருந்த கனவுகளை கொஞ்சம் கொஞ்சமாக உதிரச் செய்து கொண்டிருந்த போது சாசகத்தின் மீதும் விசித்திரங்களின் மீதும் மனதை குவிய செய்தன காமிக்ஸ் புத்தகங்கள்.

தனித்து மேயும் எருமையை போல மிக சாவகாசமாக நகரும் சூரியனும், தூரத்து பனைகளும், மழையற்று போய் அடிவானம் வரை வீழ்ந்து கிடக்கும் வெம்பரப்பும், வெக்கை குடித்து வாழ்ந்த மனிதர்களும் கொண்ட கிராமப்புறத்தில் வளர்ந்த எனக்கு வீட்டில் இருந்த புத்தகங்களும் கிராம நூலகமும் துணையாக இருந்தன.

அந்த நாட்களில் எனக்கிருந்த ஒரே குறை ஏன் நூலகங்களில் காமிக்ஸ் புத்தகங்கள் வாங்குவதில்லை என்பதே. மாதந்தோறும் வெளியாகும் தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் எதுவும் நூலகத்தில் படிக்க கிடைக்காது. ஆயிரம் புத்தகங்கள் உள்ள கிராம நூலகத்தில் வீட்டிற்கு எடுத்து வந்து படிக்க ஒரு காமிக்ஸ் புத்தகம் கூட இருக்காது. பல முறை இதை பற்றி நூலகரிடம் கேட்டிருக்கிறேன். அவர் காமிக்ஸ் படிப்பதால் அறிவு வளராது என்று பொதுவாக கூறுவார். அது உண்மையில்லை என்று அந்த வயதிலே தோன்றியது. காமிக்ஸ் புத்தகங்களின் வழியே நான் நிறைய கனவு கண்டேன். கெய்ரோ நகரம், தங்கவிரல் கொண்ட புத்தர்சிலை, நயாகரா அருவி, வேதாளம் வசிக்கும் காடு, நியூயார்க் நகரம், சிவப்பிந்தியர்கள், இரட்டை குழல் துப்பாக்கி, கடற்கொள்ளையர்கள் என்று கனவெங்கும் காமிக்ஸ் உலகம் நிரம்பி வழிந்தது.எழுத்தின் மீதான எனது முதல் ஆசைகளை உருவாக்கியது காமிக்ஸ் புத்தகங்களே. ஒரு நாள் விருதுநகரில் நான் படித்த பள்ளி அருகில் இருந்த பழைய பேப்பர் கடை ஒன்றில் ஆங்கிலத்தில் இருந்த டின்டின் காமிக்ஸ் புத்தகம் ஒன்றை பார்த்தேன். அதை விலைக்கு கேட்ட போது ஐம்பதுபைசா என்றார் கடைக்காரர். நண்பனிடம் கடன் வாங்கி அதை பெற்றேன். ஒரு வார காலம் டின்டின் இன் அமெரிக்கா என்ற அந்த சித்திரகதையின் மீது தமிழில் நானாக ஒரு கதையை எழுதி ஒட்டி நண்பனுக்கு படிக்க தந்தேன். அவனால் நம்பவே முடியவில்லை. எப்படி இந்த கதையை எழுதினாய் என்று ஆச்சரியப்பட்டான். 

டின்டின் காமிக்ஸில் இருந்த கதைக்கும் நான் எழுதியதற்கும் ஒரு சம்பந்தமில்லை. நான் எழுதிய கதை இரும்புகை மாயாவி படித்து படித்து உருவானது. கிட்டதட்ட அது போன்ற ஒரு சாகசம். அந்த புத்தகத்தை நூலகத்தில் படிப்பதற்கு கொண்டு போய் போடலாம் என்ற யோசனையை அவனே சொன்னான்.

மறுநாள் அதை கையில் எடுத்து கொண்டு நூலகரை பார்க்க சென்றிருந்தேன். என்ன புத்தகமது என்று புரட்டி பார்த்தபடியே அவர் இதை எல்லாம் படிக்க போட முடியாது என்று மறுத்தார். நான் விடாப்பிடியாக நின்று கொண்டிருந்தேன்.

நீண்ட யோசனைக்கு பிறகு..சரி அந்த மேஜையில் போடு என்று சொல்லி கையை காட்டினார்.தினசரி பேப்பர்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் போடப்படும் மேஜையது. நானாக தயாரித்த காமிக்ஸ் புத்தகத்தை அதில் போட்டேன். அன்றிலிருந்து தினமும் இரண்டு முறை நூலகம் சென்று அதை யாராவது ஒருவர் கையில் எடுத்து படிக்கிறார்களா என்று பார்த்து கொண்டேயிருந்தேன். நான் அறிந்து ஒருவர் கூட புரட்டி பார்க்கவில்லை. ஒரு நாள் மாலை அதை தேடிய போது மேஜையில் காணவில்லை. யார் எடுத்திருப்பார்கள் என்று புரியாமல் நூலகரை விசாரித்த போது எவராவது திருடிக் கொண்டு போயிருப்பார்கள் என்றார்.

உண்மையில் எனக்கு அது சந்தோஷமாகவே இருந்தது. இந்த கிராமத்தில் என்னை போலவே காமிக்ஸ் படிக்கும் இன்னொருவன் இருக்கிறான். அவன் திருடி காமிக்ஸ் படிக்குமளவு வெறி கொண்டிருக்கிறான். அவன் யார் என்று எப்படி கண்டுபிடிப்பது என்று யோசனையோடு இருந்தேன்.களவு போன காமிக்ஸ் தந்த உற்சாகம் தான் நானாக இன்னொரு காமிக்ஸ் புத்தகத்தை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது. தந்தி பேப்பர் துவங்கி ரஷ்ய குழந்தைகள் இதழான மாஷா வரை வெளியாகி இருந்த படங்கள், ஒவியங்கள், புகைப்படங்களை வெட்டி எடுத்து ஒரு நோட்டில் ஒட்டி காமிக்ஸ் புத்தகம் போலவே தயாரித்தேன். நான் எழுதிய தயாரித்த காமிக்ஸ் என்பதில் இருந்த சந்தோஷம் அளவற்றது. 

அதற்கு என்ன தலைப்பு வைப்பது என்று யோசனையாக இருந்தது. கதையில் வரும் வில்லனுக்கு ஒற்றைகண் மட்டுமே இருக்கும். அவனை கண்டுபிடிக்க இரும்புகை மாயாவி மதுரையில் அலைந்து திரிவார். அவன் நாயக்கர் மகால் அடியில் உள்ள சுரங்கபாதைக்குள் குடியிருப்பான் என்று இரும்புகை மாயாவியமதுரையில் ரிக்ஷாவில் அலைய விட்டிருந்தேன். ஆகவே அந்த கதைக்கு ஒற்றைகண் மாயாவி என்ற தலைப்பு வைத்தேன்.

பள்ளி புத்தகங்களுக்கு நடுவில் அதை மறைத்து வைத்து எடுத்து போய் மதியஉணவு வேளையின் போது நண்பனுக்கு படிக்க தந்தேன். அவன் அதன் இரண்டு மூன்று பக்கம் படித்து முடித்தவுடன் எதை பார்த்துடா எழுதினாய் என்று கேட்டான். நானாக எழுதினேன் என்று பலமுறை சொல்லியும் நம்பவில்லை. இரண்டு கைகளிலும் சத்தியம் செய்துபோதாமல் அவன் உச்சந்தலையில் அம்மா பெயரால் சத்தியம் செய்தேன். இதை வாடகைக்கு படிக்க விடலாம் என்ற யோசனையை நண்பன் சொன்னான்.

எங்கள் பள்ளியின் அருகில் ஒரு பெட்டிகடை இருந்தது. அங்கே காமிக்ஸ் விற்பார்கள். காமிக்ஸ் விலைக்கு வாங்க முடியாதவர்களுக்காக கடைக்காரர் ஒரு சலுகை அறிவித்திருந்தார். அதன்படி அதே கடையின் முன் உள்ள பெஞ்சில் அமர்ந்து ஒரு காமிக்ஸ் புக்கை படித்து முடித்து தருவதற்கு பத்து காசு தர வேண்டும்.

 இதற்காகவே பள்ளிக்கு காலையில் வேகமாக கிளம்பி வந்திருக்கிறேன். கடையின் முன்னால் கிடந்த பெஞ்சில் அமர்ந்தபடியே வேகவேகமாக காமிக்ஸ் புத்தகங்களை வாசிப்பேன். ஒட்டகம் தண்ணீர் கண்ட இடத்தில் வயிறு நிறைய உறிஞ்சி குடித்துவிட்டு தேவைபடும் அதே தண்ணீரை கொஞ்சமாக எதுக்களித்து தாகம் தீர்த்து கொள்ளும் என்கிறார்களே அது போன்றது தான் என் வாசிப்பும். அந்த கடையில் தொங்கிய அத்தனை காமிக்ஸ் புத்தகங்களையும் வாசித்துவிட வேண்டும் என்று வெறி கொண்டிருந்தேன்.

வீட்டில் தின்பண்டம் வாங்க தரும் காசை சேர்த்து வைத்து காமிக்ஸ் வாங்கி படிப்பேன். நண்பர்கள் வைத்திருந்த காமிக்ஸ் புத்தகங்களை பரிமாற்றம் செய்து கொள்வோம். பள்ளியில் காமிக்ஸ் வைத்திருந்ததற்காக கண்டுபிடிக்கபட்டு அடிவாங்கியிருக்கிறேன். அந்த மொத்த ஆசையின் வடிவமாக ஒற்கைகண் மாயாவி உருவாகியது.

அதை வாடகைக்கு கொடுக்க இயலுமா என்று நண்பன் தயங்கி தயங்கிகடைக்காரரிடம் கேட்டான். இதை யாரு படிப்பா என்று கேலி பேசியதோடு எங்களை விரட்டிவிட்டார் கடைக்காரர்.

நூலகத்திலே போடலாம் என்று முடிவு எடுத்தேன். அப்போது முன்பு நூலகர் சொன்ன ஒரு யோசனை நினைவிற்கு வந்தது. அதன்படி புத்தகத்தின் கடைசி இரண்டு பக்கம் வாசகர்கள் பதில் எழுதுவதற்கு வசதியாக வெறுமனே விட்டு வைத்திருந்தேன்.

 ஆர்வத்துடன் காமிக்ஸ எடுத்து கொண்டு கிராம நூலகத்திற்கு சென்றேன். அன்று நூலகம் திறக்கபடவில்லை. வெள்ளிகிழமை மட்டும் தானே விடுமுறை இன்று ஏன் அவர் திறக்கவில்லை என்று காத்துக் கொண்டேயிருந்தேன். நூலகர் ஒரு விவசாயி. கிராமத்தில் மழை பெய்துவிட்டால் அவர் விவசாயம் பார்க்க சென்றுவிடுவார். அதனால் சில நாட்கள் நூலகம் பூட்டியே கிடக்கும். அன்றும் அவர் விதை வாங்குவதற்காக சென்றிருந்தார் என்று கேள்விபட்டேன். மூடிக்கிடந்த நூலகத்தின் வாசலில் உட்கார்ந்தபடியே அந்த காமிக்ஸ் புத்தகத்தை நானாக வைத்து கொண்டிருந்தேன்.

மனதில் இரும்பு கைமாயாவி, ஜானி நீரோ, ரிப்கெர்பி, டேவிட் லாரன்ஸ், வேதாளம், மாண்ட்ரெக், என்று காமிக்ஸ் கதாநாயகர்கள் ஒவ்வொருவரையும் வைத்து இது போல நானாக ஒரு படக்கதை தயாரிக்க வேண்டும் என்ற கனவு ஒடிக் கொண்டிருந்தது. மறுநாள் நூலகம் திறந்த போது முதல் ஆளாக நான் அந்த காமிக்ஸ நூலகத்தில் போட்டேன்.

இரண்டு வாரங்கள் வரை அதில் யாருமே ஒரு வரி கூட எழுதவில்லை. பழைய இதழ்களை மாற்றுவதற்கான நாளின் போது நூலகர் காமிக்ஸ எடுத்து கொள்ள சொன்னார். தோற்றுப்போன மனதுடன் அதை கையில் எடுத்தேன். கசங்கி, நசுங்கி போயிருந்தது. தற்செயலாக கடைசி பக்கத்தை புரட்டிய போது அதில் காமிக்ஸ் புத்தகம் நன்றாக உள்ளது ஜி.முத்துசெல்வி என்றிருந்தது. நூலகரிடம் அதை காட்டி யார் அது என்று கேட்ட போது அது அருகாமை மில்லில் வேலை பார்க்கும் ஒருவரின் மனைவி என்று சொன்னார். அந்த பெண்ணை ஒருமுறையாவது பார்க்க வேண்டும்என்று நினைத்து கொண்டேயிருந்தேன். பின்னொரு நாள் அந்தபெண் புத்தகம் எடுக்க சைக்களில் வரும்போது பார்த்தேன். இருபத்தைந்து வயதிருக்கும். மெலிந்த தோற்றத்திலிருந்தார். நூலகர் அந்த பெண்ணிடம் இந்த பையன் தான் அந்த காமிக்ஸ் புத்தகத்தை தயாரித்தவன் என்று என்னை காட்டி சொன்னார். அவள் மெல்லிய புன்சிரிப்புடன் நல்லா இருந்துச்சிடா தம்பி என்று சொல்லிவிட்டு தன் வீட்டில் கொஞ்சம் காமிக்ஸ் புத்தகம் இருக்கிறது வேண்டுமானால் வந்து வாங்கிகொள் என்றாள்.எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. அடுத்த நாளே மில்காலனியில் இருந்த அவளது வீட்டிற்கு சென்றேன். மிகச் சிறிய வீடு. குழந்தை தொட்டிலில் உறங்கி கொண்டிருந்தது. ஒரு நார்பெட்டியில் பத்து பதினைந்து காமிக்ஸ் புத்தகங்களை போட்டு வைத்திருந்தார் அந்த அக்கா. அதில் நான் தயாரித்த டின்டின்னும் இருந்தது. அதை காட்டிய போது சிரித்தபடியே அங்கே உட்கார்ந்து படிக்க நேரமில்லை அதான் எடுத்துட்டு வந்துட்டேன் என்றபடியே எல்லா காமிக்ஸ் புத்தகங்களையும் எடுத்து கொள்ள சொல்லிவிட்டு என்னை அழைத்து கொண்டு அருகாமையில் உள்ள பெட்டிகடையில் குடிப்பதற்காக டொரினோ வாங்கி தந்தார்.

என்னிடம் நிறைய காமிக்ஸ் இருக்கிறது. படிக்க வேண்டுமா அக்கா என்று கேட்டேன். குழந்தையை கவனிக்கவே நேரமில்லை என்று மறுத்தபடியே நீ நல்லா எழுதுறே என்றார். அந்த வயதில் அவர் தந்த உற்சாகம் அளப்பறியது.

அதன் சில வாரங்களில் நூலகத்திற்கு புதிய நூலகர் மாறுதலில் வந்து சேர்ந்தார். அவர் அரசு அனுமதிக்காத எதையும் நூலகத்தில் படிக்க போட முடியாது என்று கறாக இருந்தார். அத்துடன் என்னை போன்ற சிறுவர்களை புத்தகங்களை தேட உள்ளே அனுமதிக்கவே மறுத்தார். அவர் மீதிருந்த கோபத்தில் நூலகம் பக்கம் போகவேயில்லை.

ஒரேயொரு முறை நகரில் அந்த அக்காவை குழந்தையுடன் பொது மருத்துவமனை வெளியே பார்த்தேன். அதன் பிறகு ஒரு முறை அவர்கள் வீட்டை தேடி சென்ற போது எட்டயபுரத்தில் உள்ளஒரு மில்லுக்குமாறி போய்விட்டதாக சொன்னார்கள். இரண்டு மூன்று நாட்களுக்கு வருத்தமாக இருந்தது. 

என்ன உறவு அது. எப்படி அந்த அக்காவிற்கு காமிக்ஸ் படிக்கும் பழக்கம் வந்தது. ஏன் அவள் திருமணமாகி குழந்தைகள் பெற்ற பிறகும் சாகசகதைகளிலிருந்து விலகிவராமலே இருந்தாள். எல்லா காமிக்ஸ் புத்தகங்களை விடவும் புதிரானதும் முன்அறிய முடியாததும் தான் நமது வாழ்க்கை என்பதை அவளே புரிய வைத்தாள். 

ஆனால் காமிக்ஸின் மீதான விருப்பம் அந்த அக்காவால் அதிகம் தூண்டப்பட்டது. சிவகாசிக்கு சென்று அங்கே முத்துகாமிக்ஸ் வாங்க ஆரம்பித்தேன். அச்சக கழிவு காகிதம் ஒன்றில் காமிக்ஸ் புத்தகம் ஒன்றின் பல பக்கங்கள் சிதறி கிடந்ததை சேகரித்து ஒட்டி படித்திருக்கிறேன்.காமிக்ஸ் கதாநாயகர்கள் பெரியவர்களா, சினிமா கதாநாயகர்கள் பெரியவர்கள என்ற போட்டி சிறுவர்களுக்குள் நடக்கும். அப்போது ஏன் இரும்பு கைமாயாவி, ஜானி நீரோ போன்ற கதாபாத்திரங்களில் எனக்கு விருப்பமான நடிகர்கள் நடிப்பதில்லை என்று குழம்பியிருக்கிறேன். காமிக்ஸ் கற்பனையின் எல்லையற்ற சாத்தியங்களை திறந்துவிட்டது. பள்ளி இறுதியாண்டு தேர்வு என்பதால் படிப்பில் கவனம் சிதறி போகிறது என்று வீட்டில் உருவாக்கிய கட்டாயம் கெடுபிடி என்னை காமிக்ஸில் இருந்து விலகி படிப்பின் மீது கவனம் கொள்ள செய்ததது. அதன் பிறகு பல வருசங்கள் காமிக்ஸ் படிக்கவேயில்லைகல்லூரி நாட்களில் ரஷ்ய இலக்கியம் தமிழ் இலக்கியம் என்று தேடிதேடி வாசித்தபோது ஒரு ஆசை உருவானது. நான் தமிழில் படித்த காமிக்ஸ் புத்தகங்களை ஒரு முறை ஆங்கிலத்தில் படிக்க வேண்டும். அப்போது தான் அவை எப்படி தமிழில் உருமாற்றம் பெற்றிருக்கின்றன என்று தெரிந்து கொள்ள முடியும் என்று தமிழின் வெளியான முக்கிய காமிக்ஸ் புத்தகங்களை ஆங்கிலத்தில் தேடி வாசிக்க துவங்கினேன். அப்போது தான் தமிழ்காமிக்ஸின் முக்கியத்துவம் உணர முடிந்தது.தமிழ் காமிக்ஸின் வரலாறு தனித்து நூலாக எழுதப்பட வேண்டியது. குறிப்பாக முத்துகாமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் அதன் பாதையில் இன்று தொடர்ந்து வரும் காமிக்ஸ் பதிப்புகள் குறித்து விரிவான ஆய்வும் பதிவுகளும் அவசியமானவை. இன்று இணையத்தில் ஒரளவு இதை பற்றிய கவனமும் அக்கறையும் இருக்கிறது. உலகெங்கும் உள்ள காமிக்ஸ் வாசகர்கள் தேடி தேடி காமிக்ஸ் வாங்குகிறார்கள். படிக்கிறார்கள். விவாதிக்கிறார்கள். ஆனால் தமிழ்காமிக்ஸ் பற்றி விரிவான நூல் எதுவும் இதுவரை வெளியாக வில்லை. ஒருவராக இல்லாமல் பலரும் காமிக்ஸ் குறித்து எழுதிய கட்டுரைகளாக கூட அதை தொகுக்கலாம்.

புகழ்பெற்ற தமிழ் காமிக்ஸ்களை வெளியிட்ட முதல் நிறுவனம் முத்துகாமிக்ஸ். சிவகாசியில் இருந்து சௌந்திர பாண்டியன் அவர்களால் நடத்தபட்ட முத்துகாமிக்ஸ் 1971 ம் ஆண்டு அதன் முதல் காமிக்ஸ வெளியிட்டது. இரும்பு கை மாயாவி என்ற அந்த காமிக்ஸ் புத்தகம் 128 பக்கம் கொண்டது. விலை 90 பைசா.

1962-ல் லண்டனில் Fleetway பதிப்பகத்தின் வழியே அறிமுமாகி பிரபலம் அடைந்த The Steel Claw தான் இரும்பு கை மாயாவியாக தமிழில் உருமாற்றம் பெற்றார். ப்ளீட்அவே பதிப்பகம் காமிக்ஸ் பதிப்பு துறையில் முன்னோடி நிறுவனம். அவர்கள் சிறார்களுக்காக இதழ்கள், சித்திர கதைகள் வெளியிடுவதில் முன்னோடியாக இருந்தார்கள்.

தமிழில் ஆரம்ப நாட்களில் வெளியான பெரும்பான்மை காமிக்ஸ் புத்தகங்கள் ப்ளீட்அவே பதிப்பக வெளியீடுகளே. இங்கிலாந்தில் பரபரப்பான விற்பனையான இந்த காமிக்ஸ் புத்தகங்களின் உரிமையை முறையாக வாங்கி அந்த சித்திரங்களையும் முகப்பு அட்டைகளையும் அப்படியே பயன்படுத்தி கொண்டு அதை சரியாக தமிழுக்கு உருமாற்றம் செய்தார்கள். அந்த பணியை மேற்கொண்டவர் முல்லை தங்கராசு.

அவர் தான் முத்துகாமிக்ஸின் பொறுப்பாசிரியராக இருந்தார்.காமிக்ஸ்புத்தங்களுக்கு என்றே ஒரு தனிதமிழை அவர் உருவாக்கினார். வில்லன்கள் விடும் சவாலும், அதற்கு மாயாவி தரும் பதிலடியும் வியக்கவைக்குமளவு தமிழ்நடையில் எழுதப்பட்டிருந்தது.அவை இன்னொரு மொழியில் இருந்து தமிழுக்கு வந்தவை என்ற பேதம் அறியாதபடி கதை மிக அழகாக விவரிக்கபட்டிருந்தது. மாறுபட்ட கலாச்சாரம், கதைக்களம் யாவும் அந்நியமாக இருந்தபோதும் அதை உணர முடியாதபடியே தமிழ் மொழிபெயர்ப்பின் சரளம் உள்ளுர் காமிக்ஸ் ஒன்றை வாசிப்பதை போல உணர செய்தது.

ஸ்பானிய சித்திரக்காரரான Jesus Blasco தான் இரும்புகை மாயாவியை வரைந்தவர Henry Kenneth Bulmer  ,இதற்கான கதையை எழுதியிருக்கிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என்று இந்தியாவெங்கும் இரும்புகை மாயாவி புகழ்பெற்ற காமிக்ஸ் கதாநாயகனாக அறிமுகமானார்.இரும்பு கை மாயாவி கதாபாத்திரம் உருவான கதை சுவாரஸ்யமானது. அவரது உண்மை பெயர் லூயிஸ் கிராண்டேல். இவர் பாரிங்கர் என்ற பேராசிரியரின் உதவியாளராக வேலை செய்கிறார். ஒருமுறை லேப்பில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவரது கை துண்டிக்கபட்டு செயற்கை கரம் பொருத்தபடுகிறது. அந்த செயற்கை கரத்தில் மின்சாரம் பாயும் போது அவர் உடல் மறைந்து கை மட்டுமே தனியே செயல்படுகிறது என்ற உண்மையை ஒரு நாள் தற்செயலாக கிராண்டேல் கண்டுபிடிக்கிறார். எவ்வளவு மின்சாரம் உடலில் பாய்கிறதோ அவ்வளவு மணி நேரம் அவர் அரூபமாக இருக்க முடியும் என்பதை அறிந்து கொள்கிறார்.

இந்த சக்தியை கொண்டு நல்வழிகளில் பயன்படுத்தலாம் என்று பாரிங்கர் அறிவுரை சொல்கிறார். இதனால் பிரிட்டனின் உளவுபிரிவான நிழல்படையில் சேர்கிறார் கிராண்டேல். அழிவு கொள்ளை தீமை கழகம் எனப்படும் அகொதீகவின் செயல்பாடுகளை முறியடிக்கும் வீரராக அவதாரம் கொள்கிறார். இப்படி தான் இரும்புகை மாயாவியின் சாகசம் துவங்கியது. இன்றைய ஜேம்ஸ்பாண்டின் சாகசங்கள் அத்தனையும் இரும்புகை மாயாவியிடமிருந்து பெற்ற உந்துதல்களே.இரும்புகை மாயாவியை அழிக்க நினைக்கும் அமைப்பின் பெயர் FEAR அதை தமிழில் திறம்பட அகொதீகழகம் என்று மாற்றியது இன்று வாசிக்கையிலும் வியப்பளிக்கிறது.இரும்புகை மாயாவிக்கு கிடைத்த வெற்றி தொடர்ந்து ப்ளீட்அவே காமிக்ஸ் தமிழில் வெளியாக தளம் அமைந்து தந்தது. தமிழ் காமிக்ஸிற்கு என தனி ரசிகர்கள் உருவானார்கள். முத்து காமிக்ஸ் நிறுவனமே லயன் காமிக்ஸ் என்ற துணை நிறுவனத்தை உருவாக்கி விஜயனை ஆசிரியராக கொண்டு தமிழ் காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட துவங்கியது.

ஆரம்ப நாட்களில் தமிழில் வெளியான காமிக்ஸில் பெரும்பான்மை காமிக்ஸ் ஹீரோக்கள் ஆங்கில கதாபாத்திரங்கள். ஆங்கிலம் அறியாத பிற மொழி கதாநயாகர்களை அறிமுகப்படுத்து பணி 1980 களில் துவங்கியது. பிரெஞ்ச் மற்றும் அமெரிக்க சித்திர கதைகள் தமிழில் வெளியாக துவங்கின. கௌபாய்கள் தமிழில் அறிமுகமானார்கள். மெக்ஸிக கொள்ளையர்களின் துப்பாக்கி சண்டைகள் பரபரப்பாக வாசிக்கபட்டன. லக்கிலுக்கின் வேடிக்கையான சாகசம் பெரிதும் ரசிக்கபட்டது.டெக்ஸ்வில்லர் படிக்க ரசிகர்கள் காத்துகிடந்தார்கள். முத்து காமிக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் முந்நூறுக்கும் மேலான காமிக்ஸ் புத்தகங்களை தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

இதில் பல காமிக்ஸ் புத்தகங்கள் இந்தியாவில் தமிழில் மட்டுமே வெளியாகி உள்ளன. சில ஆங்கிலத்தில் வெளியாவதற்கு முன்பு நேரடியாக ஸ்பானிய மொழி அல்லது இத்தாலியில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

தமிழ் காமிக்ஸின் தலைநகரம் சிவகாசியே. இன்றுள்ள எந்த இணைய வசதியும் இல்லாமல் தபால் மூலமாகவே காமிக்ஸ் வெளியிடும் வெளிநாட்டு பதிப்பகங்களை தொடர்பு கொண்டு பலமாதங்கள் காத்திருந்து அதற்கான உரிமை பெற்று அந்த மூலச்சித்திரங்களை வரவழைத்து அதே நேர்த்தியுடன் அச்சிட்டு குறைவான விலையில் விற்பனை செய்தது பெரிய சாதனையே. ஒவ்வொரு காமிக்ஸ் புத்தகத்தின் பின்னும் அதை வெளியிடுவதற்கு ஏற்பட்ட நெருக்கடிகள் மற்றும் மொழிமாற்றத்தின் போது ஏற்பட்ட சிக்கல்கள் என்று பலர் அறியாத ரகசியங்கள், சுவாரஸ்யஙகள் ஒளிந்திருக்கின்றன.வீடு தோறும் சிறுவர்கள் படிக்கும் புத்தகமாக இருந்த காமிக்ஸ் தொலைக்காட்சியின் வருகையும். ஆங்கில பள்ளிகளின் கெடுபிடிகளும், புத்தக வாசிப்பில் அக்கறையற்ற புறச்சூழலும் இணைந்து கொள்ள கடந்த பதினைந்து வருடங்களில் மெல்ல குறைந்து போக துவங்கின. கடந்த சில ஆண்டுகளில் தமிழ் காமிக்ஸ் மீது புதிய விருப்பம் உருவான போதும் இன்றுள்ள சிறார்கள் இந்த காமிக்ஸ் கதைகளை படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லைகிராபிக் நாவல், மாங்கா, விஞ்ஞான புனைகாமிக்ஸ், என்று அதிநவீன மாற்றம் கொண்டுள்ள காமிக்ஸ் புத்தகங்களே அவர்களது விருப்பமாக உள்ளது. சென்ற புத்தக கண்காட்சியின் போது ஐம்பது பழைய காமிக்ஸ் புத்தகங்களை வாங்கினேன். அவற்றில் ஒன்றை கூட படிக்க எனது பிள்ளைகள் விருப்பம் கொள்ளவேயில்லை . அந்த சாகசங்களை விடவும் பெரியதாக தாங்கள் வீடியோ கேமில் விளையாடி பார்த்துவிட்டதாக சொல்கிறார்கள். கூடுதலாக அதே விளையாட்டுகள் திரைப்படமாகவும் வந்துவிடுகின்றன.

சாகசத்தின் மீதான விருப்பம் சிறார்களுக்கு அப்படியே தானிருக்கிறது. ஆனால் வாசிக்கபடும் புத்தகம் மாறியிருக்கிறது. 1960 துவங்கி 1980 வரையான உலகெங்கும் உள்ள முக்கிய காமிக்ஸ்களை முத்து காமிக்ஸ் போன்ற நிறுவனம் தமிழில் வெளியிட்டு அறிமுகம் செய்து வைத்தது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் உலகம் முழுவதும் புதிது புதிதாக காமிக்ஸ் புத்தகங்கள் வெவ்வேறு வடிவங்களில்,வெவ்வேறு வயதினர் படிக்கும்படியாக , மாறுபட்ட துறை சார்ந்து வெளியாகின்றன. அதில் ஒரு சில கூட தமிழில் வெளியாகவேயில்லைபதினைந்து வயதில் நானாக ஒரு காமிக்ஸ் புத்தகம் தயாரித்து விளையாடியது போன்று இன்றும் நானாக ஒரு கிராபிக் நாவல் ஒன்றினை உருவாக்க முனைந்திருக்கிறேன். ஆர்வமான ஒவியர்களின் உதவியில்லாமல் அது சாத்தியமாகாது. ஆனால் காமிக்ஸ் மீதான விருப்பம் கொண்ட ஒவியர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். அவர்கள் முழுமையாக தங்களை இந்த துறையில் ஈடுபடுத்தி கொள்ள முடியாதபடி அதன் பொருளாதார சிக்கல் உள்ளது.

நமது ஊர் கதைகள் , இந்திய சரித்திரம், நாட்டார் மரபு கதைகள், புராணம், இதிகாசம் இதிலிருந்து புதிய சித்திரக்கதைகளை உருவாக்குவதற்கு எண்ணிக்கையற்ற சாத்தியங்கள் இருக்கின்றன. தமிழ் வாழ்விலிருந்து உருவாகும் சித்திரக்கதையை எழுதும் ஆசை எனக்கிருக்கிறது. அதை நிறைவேற்றுவதற்கு நான் ஒருவன் மட்டும் போதுமானவன் இல்லை. கூட்டு முயற்சிகளே இதை சாத்தியமாக்க கூடும். மாறிவரும் சூழலில் அது சாத்தியம் என்ற நம்பிக்கை உள்ளது.அந்த நாள் வரை மறுபடி மறுபடி வாசிப்பதற்கு என்னிடம் இன்றும் இரும்புகை மாயாவி காமிக்ஸ் உள்ளது. அதை வாசிக்கும் போது எழுத்தாளன் தான் உண்மையான இரும்புகை மாயாவி என்று தோன்றுகிறது. காரணம் எழுதும் நிமிசங்களில் அவனது கை மட்டுமே இயங்குகிறது. அவன் மறைந்துவிடுகிறான். கை மட்டுமே எதை எதையோ எழுத்தில் உருவாக்குகிறது. மின்சாரம் இழந்தவுடன் மாயாவி தன்னிலை பெறுவது போலதானிருக்கிறது எழுதி முடிக்கும் மனநிலையும்.பால்யம் உருவாக்கும் கனவுகள் குளத்தில் எறிந்த கற்களை போன்றவை. அவை கண்ணில் படுவதில்லை ஆனால் கரைந்து போகாமல் நீருக்குள்ளாக அமிழ்ந்து கிடக்கின்றன. காமிக்ஸ் கனவுகளும் அப்படியானது தான்.

எஸ்.ராமகிருக்ஷ்ணன்.

- நினைவுகள் தொடரும்.

13 comments:

 1. இருபெரும் எழுத்தாளர்களின் காமிக்ஸ் நினைவுகளை பதிவிட்டுள்ள நீங்கள், ஒரு பிரபல [ஒரே]காமிக்ஸ் மொழிபெயர்ப்பாளரின் எண்ணங்களை பதிவிடும் ஞாயிறுகளில் பதிவிடுவது, எல்லோர் கவனமும் அங்கிருக்க, உங்கள் பதிவை கவனிப்பு பெறாமல் போக நிறையவே வாய்ப்புள்ளது சண்முகசுந்தரம்..! கொஞ்சம் நாள் பார்த்து பதிவிடுங்களேன் ப்ளிஸ்..! கமெண்ட்ஸ் இல்லாத நிலை உங்களை போன்ற நல்ல பதிவாளர்களை ரொம்பவே சோர்வடைய செய்துவிடும் என வருத்தத்தில் சொல்கிறேன்..! தவறாக சொல்லியிருந்தால் மன்னியுங்கள் நண்பரே..!

  ReplyDelete
  Replies
  1. மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகள் எல்லாம் வேண்டாம் நண்பரே. என்னுடைய பெரும்பாலான நண்பர்கள் எனது நலம் விரும்பிகளே, தங்களையும் சேர்த்தே. உங்களது கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன் நண்பரே. ஞாயிற்றுக்கிழமை விடுமுறைநாள் என்பதால் பெரும்பாலான வாசகர்கள் இணையத்தைப்பார்வையிடுவார்கள் என்று நான் நினைத்திருந்தேன்.அது தவரென்று நான் Blog ஆரம்பித்த சிறிது நாட்களில் அறிந்து கொண்டேன்.எனக்கு இன்றைய தினம் விடுமுறை தினமாதலால் இப்பதிவு. வரும் நாட்களில் சரி செய்ய முயல்வோம்.நன்றி நண்பரே...!

   Delete
  2. இந்த நுட்பமான விஷயத்தை எனக்கு சொன்னவர் ஈரோடு விஜய் தான். அது உங்களுக்கு பொறுந்துமா என சின்ன தயக்கமே காரணம்..! மற்றபடி அடிச்சி தூள் பண்ணுங்க..!

   Delete
  3. நிச்சயமாக “மாயாவி” சார்....

   Delete
 2. நல்ல பதிவு. இரண்டு கட்டுரைகளையும் ஒரு சேர அளித்ததிற்க்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும்... கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

   Delete
 3. நல்ல பதிவு. இரண்டு கட்டுரைகளையும் ஒரு சேர அளித்ததிற்க்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும்... கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

   Delete
 4. முதல் கட்டுரையை ஏற்கனவே படித்த நினைவு ....இரண்டாவது கட்டுரை இனிய நினைவு ....நன்றிகள் தோழரே .....;-)

  ReplyDelete
  Replies
  1. முதல் கட்டுரை முகநூலில் உலா வந்த பதிவே... இரண்டாவது கட்டுரை எனது ரசனைக்கு தீனி போடும் எழுத்தாளர் எஸ்.ராமகிருக்ஷ்ணனின் அனுபவங்கள். வருகைக்கும்... கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

   Delete
 5. நீங்கள் எழுதியிருக்கும் முன்னுரையைத் தவிர மற்ற இரு கட்டுரைகளும் ஏனோ என் மொபைல் திரையில் சரிவரப் பொருந்த மறுக்கிறது நண்பரே! அதனால் படிக்க இயலவில்லை! :( Desk top view mode ல் முயற்சி செய்தபோது வேறு சில பிரச்சினைகள் முளைக்கின்றன.

  BTW, உங்களுடைய சிந்தனைகளுக்கும், முயற்சிகளுக்கும் என் வாழ்த்துகளும், ஆதரவும்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே... எனது மொபைல்-லிலும் அதே பிரச்சனைதான் நண்பரே சரி செய்ய முயற்சிக்கிறேன்.

   Delete
 6. Thank you for this information! I Also Offer to Create an Avatar of themselves as a task and they really love it
  Comics


  ReplyDelete