Wednesday, October 28, 2015

காமிக்ஸ் - ஒரு முடிவில்லா தேடல்

நண்பர்களுக்கு வணக்கம், சாகஸ வீரர் ரோஜர், வேய்ன் ஷெல்டன்,டெக்ஸ் வில்லர், கமான்சே,மாடஸ்டி என இந்த வருட விருந்தே இன்னும் பாக்கியிருக்க, நாம் 2016-ம் வருட சந்தாவை புதுப்பிக்க ஆரம்பித்து விட்டோம் - உண்மையில் மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றது(ஜனவரி 2012 B.C.[Before Comics] ஆண்டுக்கு முந்தைய சூழலை நினைத்துப்பாருங்கள், உங்கள் மனமும் குதியாட்டம் போடுவது உறுதி).2002 - ம் ஆண்டு சென்னை புதுக்கல்லூரியில்(The New College), இளங்கலைப்பயில வந்து சேர்ந்ததில் இருந்து எனக்கும் காமிக்ஸ்-க்குமான இடைவெளி கொஞ்சம்,கொஞ்சமாக நீண்டுகொண்டே வந்து ஒரு கட்டத்தில் நின்றே போனது.சற்றே பெரிய இடைவெளிதான் கிட்டத்தட்ட 10 வருடங்கள்.ஒரு காலகட்டத்தில் திடீரென ஞானோதயம் வந்தவனாய் காமிக்ஸை தேடத்தொடங்கினேன்.இடைப்பட்ட காலத்தில் நடந்த சம்பவங்களைப் பகிர்ந்துகொள்வதே இந்தப்பதிவின் நோக்கம். 

கல்லூரியும் காமிக்ஸிம்:
   நான் கல்லூரியில் சேர்ந்திருந்த காலகட்டத்தில்தான் நமது லயன் - முத்து காமிக்ஸின் வெளீயீடுகள் ரொம்பவே குறையத்தொடங்கிருந்தன.ராணி காமிக்ஸ் மட்டும் சரியாக வந்துகொண்டிருந்தது. ராணி காமிக்ஸிம் அட்டைப்படங்கள் முதல் கதைகள், மொழிபெயர்ப்பு என ஒட்டுமொத்தமாக சொதப்பி கடையை மூடியதும் இத்தருணத்தில்தான். ஆடிக்கொன்றும் அமாவாசைக்கொன்றுமாக வந்துகொண்டிருந்த லயன் - முத்து காமிக்ஸிம் ஒரு புத்தகத்திற்கே ஒன்றிரண்டு மாதங்கள் புத்தகக்கடைக்கு அலையவிட்டுக்கொண்டிருந்தனர். அடித்து பிடித்து வரும் புத்தகங்களை, படிக்க எடுத்தால் கல்லூரி நண்பர்கள் “இன்னூமாடா மாப்ள , காமிக்ஸெல்லாம் படிக்கிற என்பார்கள்...?” தவிர  60 சதவீதம் நண்பர்களுக்கு “இரும்புக்கை மாயாவி” பற்றி தெரிந்திருந்தது.புதிய சூழல்,நட்பு வட்டம், காமிக்ஸ்-கள் சரிவரக்கிடைக்காத நிலை என அனைத்தும் சேர்ந்து காமிக்ஸ் எனும் உயிர்நண்பனை ஏறத்தாழ நினைவில் இருந்து அகற்றியிருந்தன...!.அவ்வப்போது ஊருக்கு வரும்போது ஒருசில புத்தகங்களைப்படிப்பதும், உன் புத்தக அட்டைப்பெட்டி ஃபுல்லா பூச்சி அரிச்சுட்டு இருக்குடா... நான் என்ன பண்ணட்டும்? என்று அம்மா தொலைபேசியில் பேசும்போதும், பால்ய நண்பர்கள் சிலரிடம் பேசும்போதும் மட்டுமே காமிக்ஸ் நினைவில் வந்துசென்றது.

ஒரு தேடலின் ஆரம்பம்:
   கல்லூரி முடித்து,ஒரு வேலை தேடி அந்தவேலையில் ஒருவன் தன்னை
நிலைநிறுத்திக்கொள்வதற்குள் விதி அவனது வாழ்க்கையில் கபடி முதல் காபரே வரை ஆடித்தீர்த்திருக்கும்,அடியேனும் அதற்கு விதிவிலக்கல்ல .எல்லாம் அமைதியாக அமைந்த ஒரு ஞாயிறு மாலையில் வலைப்பக்கங்களில்(Internet) மேய்ந்து கொண்டிருக்கும்போது கண்ணில் ஒருசில காமிக்ஸ் வலைப்பூக்கள் தென்பட்டன.கண்களில் ஆர்வமும், கைகளில் உற்சாகமும் தொற்றிக்கொள்ள அன்றிரவு முழுவதும் வலைப்பூக்களில் மூழ்கிக்கிடந்தேன். “காமிக்ஸ் கிடைக்காத காலகட்டத்திலும், தங்கள் வலைப்பூக்களின் மூலம் காமிக்ஸ் - காதலை உயிர்ப்புடன் வைத்திருந்த”மைக்கு வலைத்தள நண்பர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்.

   திரும்பவும் காமிக்ஸ் தேடல் ஆரம்பமானது.வலைத்தளத்தில் ஆரம்பித்து பழைய புத்தகக்கடைகள், நண்பர்கள், லெண்டிங் லைப்ரரிகள்,பதிப்பகங்கள் என வெறித்தனமாக ஒன்றிரண்டு மாதங்கள் தேடியதன் பலனாக ஒரேயொரு புத்தகம் . . . . ! (அட உண்மையாதாங்க) மாடஸ்டி’யின் “காட்டேரிக் கானகம்”  கிடைத்தது.அதன் மூலமே இரத்தப்படலம் முழுத்தொகுப்பு வந்த விக்ஷயமும் தெரிந்தது. லயன் அலுவலகத்திற்கு ஃபோன் செய்து கைவசம் உள்ள அனைத்துப்பிரதிகளையும் வாங்கியபிறகே உறக்கம் வந்தது.சூட்டோடு சூடாக ஊருக்கு சென்று அனைத்து புத்தககங்களையும் தூசிதட்டி, சுத்தம் செய்து  அடுக்கி வைத்த பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டேன். 2012-ம் ஆண்டு லயனின் மறுவருகையான “Lion Come Back Special"-ல் இருந்து ஆட்டம் ஆரம்பம்தான். இருந்தாலும் வேலை பளு + இன்னபிற காரணங்களால் அந்த வருட சில முக்கிய வெளீயீடுகளும் missing. அதன் பின்னர் சந்தா தவறாமல் கட்டுவது தனிக்கதை.இன்னும் பழைய புத்தகங்களை நண்பர்கள் மூலமாகவும் இன்னும் ஏதோவொரு வழியிலும் நான் மட்டுமல்ல நாம் ஒவ்வொருவரும் தேடிக்கொண்டே இருக்கிறோம் . . . ஆம் இது ஒரு முடிவில்லா தேடல் தான் நண்பர்களே . . .!.
 என் பெயர் டைகர்!
   விடைபெருவதற்கு முன்பாக "Mike.S.Bluberry" (A) "கேப்டன் டைகர்”-ரின் விசிறி என்கிற வகையில் சிறியதொரு நினைவூட்டல் பட(ல)ம். முன்பதிவிற்கு கீழே உள்ள Link-யை க்ளிக் செய்யவும்.

“என் பெயர் டைகர்” முன்பதிவிற்கு கிளிக் செய்யவும்

மீண்டுமொரு புதிய பதிவில் சந்திப்போம் நண்பர்களே. Thank You Folks . . .
- தேடல் தொடரும்...
0000
ன் 

16 comments:

  1. @ சண்முக சுந்தரம்

    //திரும்பவும் காமிக்ஸ் தேடல் ஆரம்பமானது.வலைத்தளத்தில் ஆரம்பித்து பழைய புத்தகக்கடைகள், நண்பர்கள், லெண்டிங் லைப்ரரிகள்,பதிப்பகங்கள் என வெறித்தனமாக ஒன்றிரண்டு மாதங்கள் தேடியதன் பலனாக ஒரேயொரு புத்தகம் . . . . ! (அட உண்மையாதாங்க) மாடஸ்டி’யின் “காட்டேரிக் கானகம்” கிடைத்தது.//
    ஹாஹா...நான்கு வருடங்களுக்கு முன் தேடியும், ஒன்று தான் கிடைத்தது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை... அதேபோல திருப்பூர் குமார் என்ற நண்பர் நான்கு மாதங்கள் முன் தேடலை துவங்கி, 'டெக்ஸ்' முழுகதையும் சேர்த்துள்ளார் என்பதும் நம்பமுடியவில்லை..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே. . . நான்கு வருடங்களுக்கு முன்னர், இப்போதைய அளவிற்கு காமிக்ஸ் நட்பு வட்டம் விரிவாக இல்லை என்பதுதான் உண்மை.ஒருவேளை தற்போது தேடினால் தேடும் புத்தகங்கள் கிடைக்கலாம் என்று நினைக்கிறேன்...

      Delete
  2. நல்ல பகிர்வு ....வாழ்த்துக்கள் நண்பரே ...;-)


    நான் தேடுகிறேன் ..தேடுகிறேன் ..தேடி கொண்டே இருக்கிறேன....;-)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே . . .தேடல் பல நல்ல புத்தகங்கள் கிடைக்க வழிவகுக்கும்,வாழ்த்துக்கள்...!

      Delete
  3. அழகான பதிவுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்!

    இயல்பான நடையில் சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறீர்கள்! நிறைய, சுவாரஸ்யமான பதிவுகளை எதிர்பார்க்கலாம்தானே?

    தொடர்ந்து கலக்குங்கள்! :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே... கண்டிப்பாக பதிவுகளை எதிர்பார்க்கலாம், சுவாரஸ்யமா இல்லையா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்...!

      Delete
  4. வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

      Delete
  5. வணக்கம் நண்பரே...தங்கள் வலைப்பூவிற்கு நான் புதியவன்...வலைப்பூக்களின் அனுகூலங்கள் பற்றி சரியாக்கத்தான் குறிப்பிட்டுள்ளீர்கள்...பதிவு நன்று...தொடர்ந்து எழுதுங்கள்..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

      Delete